ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ண ரெண்டுதான் கிடந்துது இப்ப ஒன்டும் இல்ல”

“என்னப்பா; விடுகதை போட்டுக்கொண்டே வாறனீ”

“விடுகதையில்லயண்ண காலம் போற போக்கச் சொன்னனான்”

“ரெண்டென்டனீ ஒன்டுமில்லையென் டனீ இப்ப காலம் போற போக்கு என்டு சொல்லுறனீ ஒன்டும் விளங்குதில்லையே?”

“இங்க பாருங்கண்ணே இந்தப் பகுதிக்கே மாஸ்டரிண்ட கிணத்திலயும் செல்லத்துரையின்ட கிணத்திலயும்தான் குடிக்கத்தண்ணி கிடைச்சுது இப்ப ரெண்டும் வத்திப்போட்டுது. உதைத்தான் சொன்னனான்”

“உந்த ரெண்டு மட்டுமில்ல சின்னராசு வடக்கிலுள்ள கிணறுகள் எல்லாம் வத்திக்கொண்டு வருகுது. அந்த அளவுக்கு வரட்சி தீவிரமாயிட்டுது. எண்டு பேப்பர்ல கொட்டை எழுத்தில போட்டிருக்கினம் இந்த வருடத்தில மட்டும் 10 லட்சம் பேருக்குமேல வரட்சியால பாதிக்கப்பட்டிருக்கினம்”.

“டெங்குவில ஒரு இலட்சம் வறட்சியில 10 இலட்சம் எண்டு எல்லாம லட்சத்திலதான் கிடக்குது என்ன”

"10 இலட்சத்துக்கும் மேல எண்டு சொல்லு. வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்கள்தான் மோசமா பாதிச்சி கிடக்குதாம் நிலைமை எவ்வளவு மோசமெண்டா வடக்கில வறட்சியிண்ட பாதிப்பை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்ய வேண்டும் எண்ட நோக்கத்தில தென்பகுதியில இருந்து வடக்கிற்கு ரயில்ல தண்ணி கொண்டு போறதுபத்தியும் யோசிக்கினமாம்”

“ரயில்ல தண்ணியோ இடைநடுவில மறிச்சிபோட்டு இறக்கினாலும் இறக்குவினம் தண்ணி இப்ப தங்கத்தை போலில்ல கிடக்கு”.

“நீ சொல்லுறது உண்மைதான் விவசாயத்திற்குத் தண்ணி இல்லாததால வட மாகாண விவசாயிகள் வேற வேற தொழில்களில ஆர்வம் காட்ட நினைச்சிறிக்கினம”;.

“அப்ப இனி சோறு சாப்பிட்டு முடிஞ்சுது”

“அட சோறு சாப்பிட்டாலும் குடிக்க தண்ணியில்ல வேணும”;

“இனி குளிக்கவும் ஏலாது உடுப்பு துவைக்கவும் ஏலாது”

“உந்த வறட்சியால நாட்டிண்ட நெல் அறுவடை 40 சதவீதம் குறையுமெண்டு உலக உணவு அமைப்பு சொல்லிப்போட்டுது”.

“பஞ்சம் வந்தாலும் வரும் என்ன?”

வரட்சி முத்திப்போட்டதால சில இடங்களில ஆக்களுக்கு போதிய உணவூ கிடைக்குதில்லையெண்டு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பிண்ட காரியாலயம் சொல்லிக்கிடக்கு. குறிப்பா சொன்னமெண்டா 34,000 ஏக்கர் காணியில இந்த முறை விவசாயம் செய்ய முடியாமக் கிடக்குது எண்டு அறிக்கைகளில சொல்லிக்கிடக்கு”.

“அண்ண ஒண்டு சொல்லட்டோ?”

“என்ன விஷயம் சொல்லன்”;

“சாப்பாடு இல்லையெண்டாத்தான் கூடப்பசிக்கும் கவனிச்சிருக்கியளோ?”

“ஓமோம் நீ உதைச்சொன்னனீ எனக்கும் இப்ப பசிக்குது செல்லம் ஏதும் வச்சிப் போட்டுப்போனாவோ தெரியேல்ல குசினிக்க ஒருக்கா பாப்பமே?”

“பாப்பம் என்ன”

“உதில்ல சின்னராசு இன்னொரு விசயம் தெரியுமே?”

“என்னண்ண”

“எங்கட நாட்டில நீர்மின்சாரம் தான் முக்கியமாக்கிடக்குது என்டது தெரியுந்தான நீர் மின்சாரத்திற்கு மலையகத்திலுள்ள நீரேற்று தேக்கங்களில நீர் நிறைஞ்சிருந்தாதான் மின்சாரம் கிடைக்கும் ஆனா உந்த நீர்த்தேக்கங்களில 18 சதவீத தண்ணிதான் கிடக்குது. மழையில்லயெண்டா”

“என்னண்ண பெரிய பெரிய குண்டாப்போடுறியள்”;

“உண்மையத்தானப்பா சொன்னனான”;

“பசியால இருந்து கொண்டு இருட்டில தூங்குவமோ தெரியேல்ல?

“நீ சொல்றதும் சரியாத்தான் கிடக்குது வரட்சி நிலவுது குடிக்கக் கூடத்தண்ணியில்ல எண்டவுடன சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, கொரியா எண்ட எங்கட பக்கத்து நாடுகள் காசு, அரிசி, பவுசர் எண்டு குடுத்து உதவியிருக்கினம்”

“உதையெல்லாம் குடுப்பினம் ஆனா மின்சாரத்த கொடுப்பினமோ?”

“வறட்சியால 19 மாவட்டங்களில 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கினம் எண்டு அரசாங்கத்திண்ட புள்ளி விபரக்கணக்கில கூறியிருக்கினமில்ல 1970 களுக்குப் பின்னால ஏற்பட்ட மோசமான வறட்சி இதுதானெண்டு பேப்பர்ல போட்டு கிடக்கினம். உந்த வரட்சியால பாவம் கால்நடையள், வனவிலங்குகள் குடிக்க தண்ணியில்லாம பெரும்பாடு படுகுது. நெடுந்தீவில மட்டக்குதிரையள் மன்னாரில கழுதையள் எல்லாம் சுருண்டு விழுகுதுகள். பேப்பர்ல படம் எல்லாம் போட்டிருக்கினம். வறட்சியால வனவிலங்குகளுக்குத் தண்ணியில்ல எண்டதால யால வனவிலங்குப் பூங்காவ ரெண்டு மாசத்திற்கு மூடிப்போட்டினமாம். இனி ஒக்டோபர்லதான் திறப்பினம். போனவருசமும் யால வனவிலங்குப்பூங்காவை வறட்சிகாலத்தில கொஞ்சகாலம் மூடிவெச்சிருந்தவை.

“யால உது எங்கண்ண கிடக்குது?”.

“யாலயோ உது தென்மாகாணத்தில மாத்தறை பக்கத்தில கிடக்குது. 378 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில அமைச்சிருக்கினம். கொழும்பில இருந்து 260 கிலோ மீட்டர் தூரம.; 1900 இல வனவலங்கு சரணாலயமாக ஆரம்பிச்சவை 1938 தேசிய பூங்கா ஆக்கினவை யானை, சிறுத்தை, மான், மயில், முயல், கரடி என்டு பல வனவிலங்குகள் இருக்குது”.

“எனக்குப்போய் பார்க்க ஆசையாய்க்கிடக்குதண்ணே”

“உதுக்கென்ன முடிஞ்சா அடுத்த வருசத்தில ஒரு டிரிப் அடிப்பம் எனக்குத் தெரிந்த அதிகாரியள் இருந்தவை இப்ப இருக்கினமோ தெரியேல்ல”

“பிறகென்ன மிருகங்களோட ஒருநாள் இருந்துபோட்டு வருவம்”

“வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிறையப்போவினம் வருசத்தில ஒரு லட்சம்பேருக்கு மேல வருவினம் அரசாங்கத்திற்கு உதால நல்ல வருமானம் ஆனா உங்க இருக்குற மிருகங்களுக்குத்தான் இப்ப குடிக்கக் கூட தண்ணி இல்ல”.

“நாங்களும் அவையும் ஒண்டென்ன. எங்களுக்கும் தண்ணி இல்ல அவையளுக்கும் தண்ணி இல்ல.”

“ஆனா இன்னும் ரெண்டு மாசத்தில மழை வருமெண்டு சொல்லி இருக்கினம்"

“வருமோ?”

“வருமெண்டுதான் நினைக்கிறனான்”.

“நீங்கள் சொன்னியள் என்டா சரிதான். பிறகென்ன”

“கொழும்பில உள்ளவையளுக்கு பைப்புத் தண்ணி சுலபமா கிடைச்சிப் போடுது சின்னராசு. ஆனா விவசாய தோட்டங்களில வேலை செய்றவையளுக்குத்தான் இந்த வறட்சியால வாழ்வாதாரமே இல்லாமப் போகுது.. யுத்த காலத்துல கூட உணவு உற்பத்தியில தட்டுப்பாடு இருக்கேல்ல. ஆனா இப்ப உதில துண்டு விழுகுது.”

“உதால அரிசி விலை தேங்காய் விலையில்லோ ஆனை விலை குதிரை விலை விற்குது”.

“25 மாவட்டங்களில 22 மாவட்டத்தில குடி தண்ணிக்கு தட்டுப்பாடு. ஆக்களும் அரசாங்கமும் என்ன செய்யப்போகினமோ தெரியேல்ல”.

“இருக்கிற தண்ணிய சேமிச்சினம் எண்டா தப்பேலும் என்ன?”.

“சரியா சொன்னனீ. ஆனா உதைச் சொன்னமென்டா. எங்கள மொக்கை என்டில்ல எங்கட ஆக்கள் சொல்லுவினம்”

“எங்கட ஆக்கள விடுங்கோ. என்ன செய்ய வேண்டும் என்டு சொல்லுங்கோவன்”.

“பல்துலக்கேக்க குழாயை ஒரே அடியா திறந்து வைக்காம வாய் கொப்பளிக்கிற நேரத்தில மட்டும் திறந்து வையுங்கோ, கை கழுவேக்கையும், துணி துவைக்கேக்கையும் உது போல தேவையான நேரத்தில மட்டும் குழாயை திறந்து வைக்க ஏலும். எல்லாத் துணியையும் ஒரே அடியா துவைச்சிப் போடுங்கோ”.

“சோப்புப் போடேக்க குழாயை மூடி வைக்க வேணும் சரியே”.

“அடடே நீ சரியா பிடிச்சிப் போட்டனீ... எங்கட ஆக்கள் உதை செஞ்சினம் என்டா அவையளுக்கும் நல்லது. மத்தவைக்கும் நல்லது”

“நாட்டுக்கும் நல்லது என்டு சொல்லுங்கோ”

Comments