தாமரைக் கோபுரம் | தினகரன் வாரமஞ்சரி

தாமரைக் கோபுரம்

மகேஸ்வரன் பிரசாத்

* உயரம் 356 மீற்றர் அல்லது 1153அடி

* 245 மீற்றர் உயரத்தில் சுழலும் உணவகம், விழா மண்டபங்கள்.

* இந்த உயரத்தில் அழகிய கொழும்பு பரந்து விரிந்து கிடக்கிறது.

* இலங்கையில் அதிவேகமாக இயங்கும் லிஃப்ட்

* நிர்மாணப்பணிகளில் இதுவரை எவருமே விபத்தில் சிக்கவில்லை.

* கோபுரத்துக்கு அருகே டிஸ்னி ஸ்டைல் தீம்பார்க் அமைக்கும் எண்ணமும் இருக்கிறது.

 

* உயரத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டாலும் லிஃப்டுகள் இடைவிடாது 2 மணித்தியாலயம் இயங்கும் வசதி. 

-தனிநபராக இருக்கட்டும், நாடாக இருக்கட்டும் அடையாளம் என்பது மிகவும் முக்கியம். தமக்கான அடையாளத்தை நிலைநாட்டுவதற்கு மனிதர்கள் எடுக்கும் முயற்சிகள் பலவாறாக அமைந்திருப்பதை எமது அன்றாட வாழ்க்கையில் கண்டுவருகின்றோம். அதேபோல நாடுகளும் தன்னகத்தே கொண்டிருக்கும் விசேட அம்சங்கள் அவற்றின் அடையாளங்களாகிவிடுகின்றன. இயற்கை அமைவிடங்கள் அல்லது விசேடமான கட்டடங்கள் என்பன அந்தந்த நாடுகள் அல்லது நகரங்களின் அடையாளங்களாக கணிக்கப்படுகின்றன. உதாரணமாகக் கூறுவதாயின் மலேசியா என்றால் நமது நினைவுக்கு வருவது கோலாலம்பூர் நகரிலுள்ள இரட்டைக் கோபுரங்கள். பரிஸ்் நகராயின் ஈபிள் டவர், லண்டன் நகராயின் பிக்பேங் கோபுரம் என ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தனித்துவமான அடையாளங்கள் உள்ளன.

இலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் நாடு. எனவே சிகிரியா குன்று அடையாளச் சின்னமாக பிரசாரம் செய்யப்படுகிறது. எனினும், எமது நாட்டுக்கு குறிப்பாக கொழும்பு நகரத்துக்கு புதிய அடையாளமொன்று இவ்வளவு காலமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது உருவாகி உள்ளது. ஏனைய நாடுகளைப் போன்று கொழும்பு நகருக்கு அல்லது முழு இலங்கைக்கும் அடையாளமாக இருக்கக்கூடிய விசேட கட்டடமொன்று உருவாகிவருகிறது. இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இப்புதிய அடையாளம் அடுத்த வருடம் முதல் உலகப் பிரபலமாகும் என்பதில் ஐயமில்லை. அதுதான் தாமரைக் கோபுரமாகும். இது கொழும்பு டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.லோட்டஸ் டவர் என ஆங்கிலத்திலும் நெலும் குளுன என சிங்களத்திலும் அழைக்கப்படுகிறது. எமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் உயரமான கட்டடம் என்ற பெருமையையும் அது கொண்டுள்ளது. விரிந்துவரும் தாமரை மொட்டின் வடிவத்தில் நிமிர்ந்து நிற்கும் இந்தக் கோபுரம் கொழும்பு நகருக்குள் நுழையும் ஒருவருக்கு எங்கிருந்தாலும் தெரியும் கட்டடமாக குறிப்பாக கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் ஒருவர் முதலில் காணக்கூடிய பாரியதொரு கட்டடமாகவும் இது அமைகிறது.

கொழும்பின் அடையாளக் கட்டடமான தாமரைத் தடாகத்தின் கட்டுமாணப் பணிகள் 70 வீதம் பூர்த்தியடைந்திருப்பதுடன், ரோஸ் நிறத்தில் அரைப்பகுதி விரிந்த தாமரை மொட்டுத் தோற்றம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. நிமிர்ந்துநிற்கும் தாமரை கோபுரத்துக்கு ஒரு நேரடிவிசிட் அடித்தோம். உரிய முன் அனுமதியுடன் மிகவும் ஆர்வத்துடன் பிற்பகல் 2 மணியளவில் அக்கட்டடத்தை அடைந்தோம். எம்மை வழிநடத்துவதற்கு தாமரை கோபுர திட்ட நிர்வாக அதிகாரி கேணல் சானக்க அபயக்கோன் தயாராக இருந்தார்.

‘‘வாருங்கள் மேலே சென்று பார்த்துவிட்டு ஏனைய விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடுவோம் என்று கூறியவாறே, கேணல், எமது கைகளில் பாதுகாப்பு தலைக்கவசங்களைத் தந்தார். நாமும் அவற்றை தலைகளில் மாட்டியவாறே அவரைப் பின்தொடர்ந்தோம். நாங்கள் இப்பொழுது 245 மீட்டர் உயரத்துக்குச் செல்லவேண்டும். அங்குதான் பார்வையாளர்களுக்கான மாடி உள்ளது என்றார். முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நுழைவாயிலின் ஊடாக கறுப்பு நிற கண்ணாடிகளால் மூடப்பட்ட வட்டவடிவ கட்டடத்துக்குள் சென்றோம். இதுதான் வரவேற்புப் பகுதி என எமக்கு விளக்கம் தரப்பட்டது. நகரும் படிகள் மற்றும் குளிரூட்டிகளுக்கான குழாய்களை இணைத்தல் என பல பணிகள் இடம்பெற்றுக்கொண்டே இருந்தன. சீன நாட்டுத் தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்கள் என பலர் தமக்கு வழங்கப்பட்ட வேலைகளை செவ்வனே செய்துகொண்டிருந்தார்கள். குழாய்போன்ற தமாரை கோபுரத்தின் நடுப்பகுதியைக் காண்பித்து இங்குதான் நாம் மேலே செல்வதற்கான மின்சார பாரந்தூக்கிகள் இருக்கின்றன என்றார் கேணல். நாமும் அவரைப் பின்தொடர்ந்து சென்றோம்.

அங்கு சென்றதும் ர்ர்ர். கிறீச்.. என்ற பாரிய சத்தத்துடன் மின்சாரப் பாரந்தூக்கியொன்று மேலிருந்து வந்து நின்றது. அதிலிருந்து சீன பணியாளர்கள் இறங்கியதும், மேலே செல்லப் போகின்றோம் என்பதுபோல கேணல் கையால் அவர்களுக்கு சைகை காண்பித்தார். இரும்பு வலைகளைக் கொண்ட கதவு மற்றும் சுற்றிவர இடைவெளிகளுடன் கூடிய மின்சார பாரந்தூக்கி தனக்கே உரித்தான இரைச்சலுடன் மேல்நோக்கி செல்லத் தொடங்கியது. மின்தூக்கியில் இருந்த மின்விளக்கைத் தவிர வேறு வெளிச்சங்கள் எதுவும் அந்த குழாய் பகுதியில் இல்லை. ஏதாவது மாடியை அடையும்போது மாத்திரம் வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது. சுமார் 10 நிமிட இரைச்சலின் பின்னர் எம்மை சுமந்துவந்த அந்த தற்காலிக பாரந்தூக்கி ஒரு மாடியில் வந்து நின்றது. அந்த சுவரில் 245 என எழுதப்பட்டிருந்தது.

பாரந்தூக்கியிலிருந்து இறங்கியதும் வெளிப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். தாமரை இதழ்களுக்கு நடுவேயிருந்து வெளியே பார்வையிட முடிந்தது. பூமியிலிருந்து 245 மீற்றர் உயரத்திலிருந்து கொழும்பு நகரை பார்க்கும் காட்சி ரம்மியமாகவே இருந்தது. வெயிலாக இருந்தாலும் காட்சி தொளிவாகவே இருந்தது. காணும் இடமெல்லாம் கட்டடங்கள். மறுபக்கத்தில் துறைமுக நகரத்திட்டத்துக்காக நிரப்பப்பட்ட நிலப்பரப்புடன் கூடிய கடற்கரை, அதற்கு அருகில் கொழும்பு துறைமுகம் என அற்புதமான காட்சியை காணமுடிந்தது. மருதானை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மேலிருந்து பார்க்கும்போது பிள்ளைகளின் விளையாட்டு ரயில்களைப் போலவும், வீதிகளில் செல்லும் வாகனங்கள் குட்டி குட்டியாகவும் தென்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரிந்துவீழ்ந்த கொலன்னாவ குப்பைமேடு, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான நெடுஞ்சாலை என தொலைவில் சில இடங்களையும் எம்மால் அடையாளங்காண முடிந்தது. தாமரை கோபுரத்திலிருந்து பார்த்தால் இந்தியாவையே பார்க்க முடியுமாம் என ஊடகங்கள் சிலவற்றில் நான் படித்திருந்தேன். ஏனோ என் கண்களுக்கு கடலுக்கு அப்பால் எந்தக் கரையும் தெரியவில்லை.

கொழும்பு நகரின் காட்சியை ரசித்தவாறு ஒரு சில செல்பிகளையும் எடுத்துக் கொண்டு உட்பகுதிக்குள் சென்றோம். சீன நிறுவனம் இதன் கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டுள்ளபோதும், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவுக்கே இக்கட்டடம் உரித்தானது. குறித்த ஆணைக்குழுவின் ஊடாகவே சீனாவிடமிருந்து கடன்பெறப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் மொத்த உயரம் 356 மீற்றர் அல்லது 1153 அடியாகும். இதனை நான்கு பிரதான பகுதிகளாகப் பிரிக்க முடியும். டவர் பேஸ் அதாவது கீழ் பகுதி, டவர் பொடி அதாவது தாமரை மொட்டின் தண்டுப் பகுதி, டவர் ஹவுஸ் மொட்டின் மேற் பகுதி, டவர் மாஸ்ட் அன்டனாக்களைக் கொண்ட உச்சி. பார்வையாளர்கள் செல்லக்கூடிய அதிகூடிய எல்லை டவர் ஹவுஸ் பகுதியாகும்.

இந்த டவர் ஹவுஸ் பகுதியானது எட்டுமாடிகளைக் கொண்டது. இரண்டு விழா மண்டபங்கள், சுழலும் உணவகம், டிஜிட்டல் ஒலி, ஒளிபரப்பு கட்டுப்பாட்டு நிலையங்கள், மின்சார பாரந்தூக்கி மற்றும் குளிரூட்டிகளுக்கான இயந்திரப் பகுதி என்பன இந்த எட்டுமாடிகளில் உள்ளடங்குகின்றன. தலா 400 பேரைக் கொள்ளக் கூடிய விசாலமான இரண்டு விழா மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேல் மாடியில் சுழலும் உணவகம் அமையவுள்ளது. அதாவது குறித்த உணவகத்தில் போடப்பட்டிருக்கும் மேசைகள் மற்றும் ஆசனங்கள் என்பன அதிலிருப்பவர்களுடன் சேர்த்து மெதுவாக சுழன்றுகொண்டிருக்கும். 90 நிமிடத்தில் ஒருவர் முழுவட்டத்தையும் சுற்றக்கூடிய வகையில் அது அமைக்கப்படவுள்ளது. இதனூடாக மேலிருந்து கொழும்பு நகரின் சகல பகுதிகளையும் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிட்டும். டவர் ஹவுஸ் பகுதிக்கு மேல் நீர்தாங்கியொன்றும் அதற்கு மேல் தொலைத்தொடர்புக்கான கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளன.

கையடக்கத்தொலைபேசி அலைவரிசைகள், ஒலி, ஒளிபரப்புக்கான சகல அலைவரிசைகளையும் இலகுவாக இழுக்கும் வகையில் இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் மாத்திரம் 300 அடி நீளத்தைக் கொண்டதாகும். இந்த தொலைத்தொடர்புகோபுரம் ஒவ்வொரு பகுதியாக தரைத் தண்டின் நடுப்பகுதியிலுள்ள உருளைப் பகுதியினூடாகவே மேலேகொண்டு சென்றுள்ளனர். சகல இணைப்புக்களும் மேலே எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உருளைவடிவின் நடுப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிரவும் மின்சார இணைப்பு கேபிள்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள் என்பன இந்த உருளையின் ஊடாகவே மேலே கொண்டுவரப்படுகின்றன.

மேல் பகுதியின் வெளிவேலைகள் பூர்த்தியாகியிருந்தபோதும் உட்பகுதியில் கணிசமான வேலைகள் முடிக்கப்படவேண்டியிருப்பதை அவதானிக்க முடிந்தது. பணியாளர்கள் தமது வேலைகளில் மும்முரமாக இருக்க நாம் அங்கிருந்து மீண்டும் மின்தூக்கியின் ஊடாக கீழ்நோக்கி நகர்ந்தோம்.

தாமரைகோபுரத்தின் கீழ் பகுதி மூன்று மாடிகளைக் கொண்டது. மூன்றாவது மாடி திறந்த உணவகத்துக்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்டிருப்பதுடன், ஏனைய இரண்டு மாடிகள் கடைத்தொகுதிகளுக்காக வழங்கப்படவுள்ளன. நிலத்துடன் இருக்கும் பகுதி வரவேற்பு பகுதியாகும். இந்த கோபுரத்தின் மேலே ஏறி இறங்குவதற்கு ஐந்து மின்தூக்கிகள் பொருத்தப்படவுள்ளன. இதில் மூன்று மின்தூக்கிகள் பாவனையாளர்களுக்கும், இரண்டு மின்தூக்கிகள் நிர்வாகத்தினருக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக கேணல் எங்களுக்கு விளக்கமளித்தார். பிரதான வாயிலில்் நீர்தடாகமொன்று அமைக்கப்படவுள்ளது. கோபுரத்தின் வலதுபக்கத்தில் (தபால் அமைச்சுக்கு அருகில்) 200 வாகனங்களைத் தரிக்கக் கூடிய வாகனத் தரிப்பிடமொன்றும் அமைக்கப்படவுள்ளது. வெயில் வெக்கை, படிகள் ஏறி இறங்கிய களைப்புடன் திரும்்பிய நாம் நிர்வாக அலுவலகத்தில் சற்று அமர்ந்தோம். அங்கு எம்மை சந்தித்த பொறியியலாளர் அநுரகுமார சில தவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

தாமரைத் தடாக திட்டத்தில் மொத்தமாக 276 பேர் பணிபுரிகின்றனர். இதில் 166 பேர் சீன நாட்டவர்கள். 6 இந்தியர்கள். எஞ்சியவர்கள் உள்ளூர் பணியாளர்கள். காலை 6.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை கட்டடநிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றன. தேவையைப் பொறுத்து இரவு 10.30 மணிவரையும் வேலை நீடிப்பதாக கூறினார் அநுரகுமார. கட்டுமாணத்துக்குத் தேவையான பாரமான பொருட்களைத் தூக்குவதற்கு டவர் கிரேன் அல்லது பாரந்தூக்கி பயன்படுத்தப்படுகிறது. இதனை சீன நாட்டவர்கள் இயக்குகின்றனர். இதனை இயக்கும் நபர் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு தடவைமாத்திரமே கிரேனில் ஏறி இறங்குவார்.

அதாவது காலையில் மேலே ஏறினால் மாலையாகும்போதே அவர் கீழ் இறங்குவார். எனினும், தற்பொழுது மின்சார தூக்கி இருக்கும் மாடிவரை சென்று அங்கிருந்து கிரேனில் ஏறுகிறார். இதுவரையில் எவரும் எந்த விபத்திலும் சிக்கவில்லை என்பது பொறியியலாளர் அநுரகுமார எம்முடன் பகிர்ந்துகொண்ட கூடுதல் தகவலாகும். பாதுகாப்பு விடயத்தில் கேணல் சானக்க கண்டிப்பாக இருப்பது இதற்கு காரணமாம்.

டெங்கு தொற்றுத் தொடர்பில் அதிக அக்கறைகொண்டிருந்த கேணல் அபாயமாகத் தென்படும் இடங்களை உடடியான சுத்தப்படுத்துவதற்கான பணிப்புரைகளை வழங்கிவிடுவார் என்கிறார் அநுரகுமார. நாம் அநுரகுமார மற்றும் கேணல் சானக்கவுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போதே தாமரை கோபுர திட்டத்தின் வடிவமைப்பாளர் அல்லது இந்த திட்டத்தை உருவாக்கியவரான பேராசிரியர் சமிந்த மாணவடு அங்கு வந்தார். மேலதிக விடயங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு அநுரகுமார கூற நாம் அவரிடம் சென்றோம்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் என தன்னை அறிமுகப்படுத்திய அவரிடம், இத்திட்டம் எவ்வாறு உங்கள் எண்ணத்துக்கு வந்தது? ஏன் தாமரை மொட்டு வடிவத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

போன்ற கேள்விக் கணைகளைத் தொடுத்தோம். சுவாரஷ்யமான கேள்வி கேட்டீர்கள் என்றவர், சிரித்துக்கொண்டே பதிலளிக்கத் தொடங்கினார். உண்மையில் நாம் இத்திட்டத்தை இங்கு அமைக்க யோசித்திருக்கவில்லை. இலங்கைக்கு என்றொரு அடையாள சின்னமொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலியகொட பகுதியில்

 

திட்டமொன்றை அமைக்க யோசித்தோம். அதாவது கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் ஒருவர் இந்த அடையாள சின்னத்தை முதலில் காணும்போது கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளேன் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதே எனது நோக்காக இருந்தது. இதற்காகவே போலியகொடையில் இடம்தோடிச் சென்றோம். அங்கு 20 ஏக்கர் தருவதாக அப்போதைய அரசாங்கத்தினால் கூறப்பட்டது. இடத்தைப் பார்க்கச் சென்றபோது பின்பகுதியில் சேற்றுநிலம், அதில் தாமரை மொட்டுக்கள் சிலவற்றைக் கண்டேன். அவற்றைக் கண்ணுற்றதும் ஏன் நாம் தாமரை மொட்டு வடிவில் கட்டடமொன்றை கட்டக்கூடாது என எண்ணினேன். இலங்கை பெளத்தநாடு என்பதால் தாமரை பூவுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளது. எனவே அதற்கமைய திட்டத்தை தயாரித்தோம்.

இருந்தபோதும், பேலியகொடையில் அவ்வாறான கோபுரமென்றை அமைப்பதைவிட கொழும்பின் இதயப் பகுதியில் இதனை அமைப்பது வர்த்தக ரீதியில் பயனுள்ளதாக அமையும் என அப்பேதைய அரசாங்கம் ஆலோசனை கூறியது. அதற்காக 7 ஏக்கர் நிலம் எமக்குத் தரப்பட்டது. 20 ஏக்கர் நிலப்பரப்புக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட எமது திட்டத்தை 7 ஏக்கருக்கு ஏற்றவகையில் சுருக்கவேண்டி ஏற்பட்டது. ஆரம்பத்தில் மூடிய தாமரை மொட்டுப் போன்ற வடிவத்தையே அமைக்க திட்டமிட்டோம். எனினும், எம்முடன் இணைந்த சீன நிறுவனம் விரித்த மொட்ட வடிவில் அமைத்துத் தர உடன்பட்டது.

பேலியகொடையில் தாமரை கோபுரத்துக்கு அருகில் டிஸ்னி ஸ்டைல் தீம் பார்க் ஒன்றை அமைக்கவும் யோசித்திருந்தோம். இதற்காக தயாரிக்கப்பட்ட மாதிரி வரைவு அருகில் இருக்கிறது என அருகில் காணப்பட்ட மாதிரியை அவர் காண்பித்தார். இங்கு மேலதிக இடம்கிடைத்தால் அதனை அமைக்கவும் முடியும் என்றார் நம்பிக்கையுடன்.

ஆரம்பத்தில் தாமரைகோபுரத்தை தொலைத்தொடர்புகளுக்கான கட்டடமாக அமைக்கவே எண்ணியிருந்தோம். இருந்தபோதும் இதில் சில மாற்றங்களைச் செய்து வர்த்தக ரீதியான செயற்பாட்டுக்கும் பயன்படுத்த எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்துக்காக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 166 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ளது. இக்கட்டடத்துக்கான முழுப் பொறுப்பும் ஆணைக்குழுவையே சாரும். எனவே, இங்கு அமையவுள்ள கடைத்தொகுதிகள் பற்றிய தீர்மானங்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும”் என்றார் பேராசிரியர்.

இந்தக் கட்டடமானது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் எனக் கூறி உத்தேசிக்கப்பட்ட உயரத்தைவிட குறைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா என்ற கேள்வியையும் நாம் அவரிடம் முன்வைத்தோம். சிரிப்பை பதிலாக வழங்கிய அவர், ”அப்படி எதுவும் இல்லை. உண்மையைக் கூறுவதாயின் உத்தேசித்த உயரத்தைவிட 6 மீற்றர் கூட்டியுள்ளோம். மின்தூக்கிக்காக இந்த உயரம் கூட்டப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பை அண்மித்த பகுதியில் உள்ள சகல மேம்பாலங்களின் நடுப்பகுதிக்கு வரும்போது தாமரை கோபுரத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இது தற்செயலாக அமைந்ததொன்றா அல்லது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா? எனக் கேட்டபோது,

‘‘இதனை அமைப்பதற்கு இடத்தை தெரிவுசெய்யும்போது கொழும்பு நகரின் வரைபடத்தை முழுமையாக ஆராய்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய வகையில் இடத்தை அடையாளம் கண்டோம்” என்றார் பேராசிரியர். அது மட்டுமன்றி இந்த கோபுரத்தின் ஊடாக இலங்கையின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஒலி, ஒளிபரப்பு வீச்சு எல்லைகளை வழங்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இறுதிக் கேள்வியாக எப்பொழுது இத்திட்டம் பூர்த்தியடையும் என்ற கேள்வியை கேட்டோம். ”பெரும்பகுதி அடுத்த வருடம் மார்ச் மாதம் முடிவடையும், என சீன நிறுவனம் கூறியுள்ளது. நாம் அதனை நம்புகின்றோம். சரியாகப் பார்த்தால் 2015ஆம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தாமதங்கள் ஏற்பட்டன. 2008ஆம் ஆண்டு இடத்தை தெரிவுசெய்து பணிகளை ஆரம்பித்தோம். 2012 ஆண்டிலேயே சீன நிறுவனத்துடன் இணைந்தோம். பெரும்பாலான வேலைகள் பூர்த்தியடைந்துவிட்டன. மின்தூக்கிகளை இணைப்பதிலேயே தாமதம் காணப்படுகிறது. கட்டுமாண பணிகள் முடிந்த பின்னரே மின்தூக்கிகளை இணைக்க முடியும். சிங்கப்பூர் பூஜி நிறுவனம் மின்தூக்கிகளை வழங்குகின்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலேயே இந்தப் பணியை பூர்த்திசெய்ய முடியும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் அதிக வேகமாக செயற்படக்கூடிய மின்தூக்கிகள் (லிப்ட்) இங்குதான் பொருத்தப்படவுள்ளன. அதாவது 40 செக்கன்களில் 254 மீற்றர் தூரம் ஏறக்கூடிய சக்தியைக் கொண்டதாக இவை அமையவுள்ள. உலக வர்த்தக மைய கட்டடத்தில் செக்கனுக்கு 5 மீற்றர் ஏறக்கூடிய மின்தூக்கியே உள்ளது. எனினும், இங்கு பொருத்தப்படவுள்ள மின்தூக்கி செக்கனுக்கு 7 மீற்றர் தூரம் ஏறக்கூடியவையாக இருக்கும். அது மட்டுமன்றி சாதாரணமாக கட்டடமொன்றில் தீப் பற்றினால் மின்தூக்கிகள் நிறுத்தப்பட்டுவிடும். எனினும், இங்கு பொருத்தப்படவுள்ள மின்தூக்கியானது மேல் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டாலும் நிறுத்தாது 2 மணித்தியாலங்களுக்கு செயற்படக்கூடியது. அதாவது மேல் பகுதியிலுள்ள சகலரையும் கீழ் பகுதிக்குக் கொண்டுவரும்வரை செயற்படக்கூடிய ஆற்றல் கொண்டதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அடையாளமாக அமையப்போகும் தாமரை கோபுரத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு செலவிட்ட பணத்தை 14 வருடங்களில் ஈடுசெய்ய முடியும் என்பது இத்திட்டத்தை தயாரித்த பேராசிரியரின் நம்பிக்கை. 14 வருடங்களின் பின்னர் ஈட்டப்படும் வருமானம் நாட்டுக்கு இலாபமாக அமையும். இந்த அடையாளச் சின்னமானது பகல் வேளைகளில் மாத்திரமன்றி இரவுவேளைகளிலும் தெளிவாகத் தெரியும் வகையில் அணைந்து அணைந்து எரியக்கூடிய மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டதாக அமையவுள்ளது. பிரமிக்கவைக்கும் நிமிர்ந்த கட்டத்துக்கு முன்னால் ஒரு செல்பியை கிளிக்கியவாறு, எமக்கு வழிகாட்டிய அதிகாரிகளுக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு நாம் விடைபெற்றோம். 

Comments