ஏ, பணமே! | தினகரன் வாரமஞ்சரி

ஏ, பணமே!

எச். எம். அப்துல் ஹமீது,

நாவலப்பிட்டி

பாரெங்கும் பரந்து வாழும்

பல்மொழி பேசும்

பலகோடி மக்களின்

கரங்களில் காலம், நேரம்,

இடம் பாராது பல நிறங்களில்

மாறி மாறி பவனி வந்திடும் பணமே!

இதயமென்றொன்றில்லா நீ,

ஆறறிவு கொண்டோரில்

சிலரை ஐயறிவாளராக்கும்

திறமை பெற்று திகழ்கின்றாய்!

சுயநலத்தில் ஊறிப்போன நீ,

பலரின் ஆசீர்வாதத்தையும்

சிலரின் ஆவேசத்தையும்

தனதாக்கிக் கொண்டு

காலமெல்லாம் சுகதேகியாகவே

வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!

மன்னாதி மன்னனுக்கும்

நாடாளும் தலைவனுக்கும்

தனியான பாதுகாப்பு!

உனக்கு மட்டும் பொதுவான பாதுகாப்பு!

வளியோர்க்கு தலையையும்

வறியோர்க்கு வாலையும்

காட்டும் இரட்டை வேடம்

உன் பரம்பரை பழக்கமன்றோ!

பேச முடியாதவனை பேச வைப்பதும்

பேச தெரிந்தவனை ஊமையாக்குவதும்

இடம் பார்த்து தடம் பதிப்பதும்

உன் மாயாஜாலத்தின் வெளிப்பாடே!

நீ எவரையும் தேடிச் செல்லாமல்

உன்னைத் தேடி வருவோரை

அடிமையாக்கி அவமானப்படுத்தி

மண்டியிடச் செய்கின்றாய்!

பஞ்சமா பாதகங்கள் புரியச் செய்து

வாழ்நாளெல்லாம் சிறையறையில்

அடங்கி விடச் செய்வதும்

உன் அகங்காரத்தின் அடையாளமே!

இறைவனை நம்பினோர் எவரும்

உன்னை நம்பார்!

உன்னை நம்பினோர் எவருமே!

இறைவனை நம்பார்

சாகா வரம் பெற்று விளங்கும்

அஞ்சா நெஞ்சம் கொண்ட பணமே!

உன்னை கெஞ்சிக் கேட்கின்றேன்

சஞ்சலத்தோடு உன்னிடம்

தஞ்சம் கோரி வருவோர்க்கு

வஞ்சம் தீர்க்கும் நோக்கில்

பஞ்சம் கூறி மிஞ்சி விடாமல்

நெஞ்சம் குளிரச் செய்திடு, பணமே!

Comments