சமூகத்தையும் கட்சியையும் சரியாக வழிநடத்தும் தலைவர் ரவூப் ஹக்கீம் | தினகரன் வாரமஞ்சரி

சமூகத்தையும் கட்சியையும் சரியாக வழிநடத்தும் தலைவர் ரவூப் ஹக்கீம்

 கிழக்கு மாகாண   முதலமைச்சர்   ஹாபிஸ் நஸீர்   அஹமதுடனான   நேர்காணல்

நேர்காணல் -: எம்.ஏ.எம். நிலாம்

கேள்வி – நாட்டின் அரசியல் சூழ்நிலைக் குறித்தும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம், அதன் இருப்பு பற்றி என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறீர்?

பதில் – 30 வருடகால யுத்தம் காரணமாகவும், அதனைத் தொடர்ந்து இன்று வரை தொடரும் இனவாதம் என்பவற்றால் பாதிக்கப்பட்டு அவலத்துக்குள் முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூகம் அதன் அரசியல் வழிமுறைகளை மீளாய்வு செய்யவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதை யதார்த்தமாகவே நோக்க வேண்டியுள்ளது.

சமூகத்தில் ஒரு சிலர் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் துரோகத்தனமான அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த துரோக அரசியலே அவர்களது ஒரே மூலதனமாகும்.

இவ்வாறான மக்களை ஏமாற்றும் பித்தலாட்டத்தின் மூலம் தமது அரசியலை தக்கவைத்து சமூகத்தை, குழப்பத்தில் மாட்டி நயவஞ்ச பிழைப்பு நடத்துவதை அவர்கள் உடனடியாக கைவிட முன்வரவேண்டும்.

முஸ்லிம் சமூகத்துக்குள் குடிகொண்டிருக்கும் ஏமாற்று அரசியல் இருக்கும்வரை எமது சமூகம் விமோசன மாடையப்போவதில்லை. ஏமாற்று அரசியல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எமது சமூகத்தின் அரசியல் விடுதலை என்பது ஒற்றுமையிலும் நல்லெண்ணத்திலுமே தங்கியுள்ளது. பேரினவாத அச்சுறுத்தலிலிருந்து தாம் மீளவேண்டுமாக இருந்தால் கட்டாயமாக எமது மனங்கள் மாற்றம் காண வேண்டும். ஒற்றுமைப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம் இன்று சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளது. இதற்குப் பிரதான காரணம் சுயநல அரசியல் நோக்கமே ஆகும். மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் விதத்தில் சில சக்திகள் நச்சுவிதைகளை விதைத்துவருகின்றன. இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் விழிப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

கேள்வி – இவ்வாறான நிலையில் நாட்டில் இன்று காணப்படும் அரசியல் செயற்பாடுகள் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் – சிலரின் ஊழல் செயற்பாடுகளை மக்கள் முன் கொண்டு வருவதாலும் அவற்றுக்கு துணை போகாமையினாலும் எம்மிடம் அரசியல் நாகரீகம் இல்லையென சில அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஊழல் செய்யாது மக்கள் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடாமல் நாம் முன்னெடுக்கும் அரசியல் கலாசாரம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதற்கு புதிதாக தெரிவதாலேயே அவர்கள் இன்று குழம்பிப் போயுள்ளனர்.

எமக்கு மாற்றவர்களுடைய வேலைத் திட்டங்களுக்கு பெயர் வைத்துக் கொள்ள வேண்டி எந்தத் தேவையுமில்லை. நாம் அரை குறையாக விடப்பட்டிருந்த மக்களின் சொத்துக்களை பூரணப்படுத்தி மக்களிடம் கையளிக்கிறோம்.

ஒருவர் தமது சேவையென அடையாளங் காட்ட வேண்டுமானால் தாம் அதற்கான நிதியை அமைச்சுக்களுக்கூடாக பெற்று மக்களின் அபிவிருத்திகளை முன்னெடுத்ததால் அதனை பெற்றுக் கொடுக்கப்பட்ட துன்பத்துக்காக நாம் கொண்டு வந்த அபிவிருத்தி எனச் சொல்வதில் நியாயம் இருந்த போதிலும் பொதுவாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு வருகின்ற நிதியில் நிர்மாணிக்கப்படுகின்றவற்றுக்கு தமது பெயரை இட நிலைப்பது மிகவும் கீழ்தரமான அரசியலாகும்.

அரசியல் எனது தொழில் அல்ல என்பதை நான் மிகத் தெளிவாக கூறியுள்ளேன், ஆனால், சிலர் தமது அரசியலை தொழிலாக செய்வதாக ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறானால் தொழில் என்பது பண ரீதியான இலாபத்தை எதிர்பார்த்து தமது சொந்த முன் ஏற்றத்திற்காக செய்யப்படுவதாகும்.

ஆகவே, அவர்களே தாம் வருமானம் பெற்று செந்த இலாபத்தை எதிர்பார்த்து அரசியல் செய்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

ஆனால், நாம் இதனை சமூகத்துக்கான கடமையாக எண்ணியே முன்னெடுக்கின்றோம். அதனால் தான் இலாபத்தை எதிர் பார்த்த அரசியல் செய்பவர்களுக்கு எமது பணி விசித்திரம் உள்ளது. ஆகவே, இறைவனைக்கு பயந்து அரசியல் செய்யுங்கள். பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முனைந்து நீங்களே ஏமாறாதீர்கள்.

இறுதியில் இதனால் ஏமாற்றப்பட்டப் போவது நீங்கள் தான், எமக்கு எந்த அதிகார மோகமுமில்லையாரும் இங்கு நிரந்தரமாக பதவியில் இருப்பதற்காய் பிறந்திட வில்லை. ஆனால் நாம் செய்கின்ற கடமையை யாரையும் ஏமாற்றாமல் உளத் தூய்மையுடன் செய்ய வேண்டும்.

கேள்வி – கிழக்குத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டிணையப் போகின்றீர்களா? முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நிற்கப் போகின்றதா?

பதில் – அது குறித்து நாம் எந்த வித முடிவுக்கும் வரவில்லை. தலைமைத்துவம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணக்கி அரசியல் செய்யவிரும்புகின்றது. இந்த விட்டுக் கொடுப்பை கூட்டிணைப்பு என்று கூறிவிடமுடியாது. தமிழ்க் கூட்டமைப்புடன் நாம் அன்றும் புரிந்துணர்வுடனேயே செயற்பட்டு வருகின்றோம். முஸ்லிம் சமூகம் தொடர்பில் அவர்களது பார்வை மிகவும் தெளிவானது. எமது தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்கள் என்றும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியே வருகின்றனர்.

நிச்சயமாக தமிழ் மக்கள் முஸ்லிம்களது அரசியல் இருப்புக்கு ஒரு போதும் பாதகமாகச் செயற்படப்போதில்லை என்பது உறுதியானதாகும். சில சக்திகள் இதைக்கூட தவறான கொண்டு நோக்கலாம். கறுப்பு கண்ணாடி அணிந்தவர்களுக்கு எல்லாம் கறுப்பாகத்தானே தெரியும்.

கேள்வி – அடுத்து வரக்கூடிய உள்ளூராட்சி மாகாண சபைத்தேர்தல் முஸ்லிம் காஙகிரஸூக்கு வெற்றி வாய்ப்பைக் கொண்டுவருமா?

பதில் – இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது அடுத்து நடக்க விருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் நிச்சயமாகவே முஸ்லிம் காங்கிரஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றும். அந்தத் தேர்தல் எவ்விதத்திலும் எமக்கு சவாலாக அமையமாட்டாது. கிழக்கில் நாம் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகள் வெளிப்படையானவையாகும். எமது மக்களுக்கு எதைச் செய்ய வேண்டுமோ அவற்றை நாம் செய்துவருகின்றோம். இந்த விடயத்தில் நாம் இனமத, மொழி பேதம் காட்டவில்லை மாகாண மக்கள் அனைவரையும் ஒரே கண்கொண்டுதான் பார்க்கிறோம்.

எனவே அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மகத்தான வெற்றியீட்டும் என்பது உறுதியானதாகும். அதே போன்று கிழக்கிலும் அதற்கு வெளியேயும் உள்ளூராட்சித் தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பைத்தக்க வைத்துக்கொள்ளக்கூடிய வெற்றியை நாம் ஈட்டிக் கொள்வோம் முஸ்லிம் சமூகத்தை இனிமேல் எந்தச் சக்தியாலும் ஏமாற்றிவிடமுடியாது முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏமாற்று அரசியலைச் செய்யவில்லை. அதன் வரலாறு தூய்மையானதாகும். சமூகம் பணத்துக்கும் துரோகத்தனத்துக்கும் ஒருபோதும் விலை போகப்போவதில்லை.

சில அரசியல் சக்திகள் பணத்தை அள்ளி வீசி எம்மவர்களை விலைக்கு வாங்கும் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. இந்த அரசியல் வியாபாரம் நிச்சயமாக நட்டத்தில் தான் முடிவுக்கு வரும் என்பதை இங்கு உறுதியாகக் கூறிவைக்கின்றேன்.

கேள்வி – முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் நாட்டில் தவறான பரப்புரைகள் பரப்பப்பட்டுவருகின்றதே?

பதில் – இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல எமது மறைந்த தலைவர் காலத்திலும் நடத்தவைதான் எமது மக்கள் இதனை நன்கு புரிந்து வைத்துள்ளனர். இன்றைய எமது தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் அண்மைக்காலமாக தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் மூக்குடைப்பட்டுப் போனவர்கள் யார் என்பதை நாடே அறியும். மரத்தை வேரோடு சாய்க்க சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர். அது ஆல விருட்சம் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர். கட்சியிலிருந்து பிளவுபட்டுப் போனவர்கள் அடிக்கடி ஒன்று சேர்கின்றனர். பின்னர் வெவ்வேறாக பிரிந்து குரல் கொடுக்கின்றனர்.

இவர்களது முயற்சிகள் எதுவும் எமது மக்கள் மத்தியில் எடுபடப்போவதில்லை. அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் நிச்சயமாக எமது மக்களிடமிருந்து நல்ல தொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளத்தான் போகின்றனர் என்பதை இங்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன். 

Comments