சமஷ்டி தீர்வின்றேல் தமிழர்கள் இங்கு வாழ முடியாத நிலை ஏற்படும் | தினகரன் வாரமஞ்சரி

சமஷ்டி தீர்வின்றேல் தமிழர்கள் இங்கு வாழ முடியாத நிலை ஏற்படும்

 தமிழ் மக்கள் பேரவையின் பேச்சாளரும்  சட்டத்தரணியுமான வி.புவிதரன்

வாசுகி சிவகுமார்

தமிழ் மக்கள்பேரவை அண்மையில் வெளியிட்ட அதனது பிரகடனத்தில் அடங்கியுள்ள அம்சங்கள் எவை?

தமிழ் மக்கள் பேரவை தொடக்கப்பட்ட காலம் முதல் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான வழிவகைகளை அது தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கின்றது. அவற்றையே மீளவும் வலியுறுத்தியும் இருக்கின்றது. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சுய நிர்ணய அடிப்படையில் மதச் சார்பற்ற சமஷ்டித் தீர்வு எங்கள் மக்களின் நீண்டகால உரிமைக் கோரிக்கைக்கான தீர்வாக வழங்கப்பட வேண்டும் என்பது எமது அண்மைய பிரகடனத்திலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. இணைந்த வடக்கு கிழக்கில், நிரந்தரமாக வசித்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் இந்த சமஷ்டி அலகில் உள்ள சகல உரிமைகளும் வழங்கப்படும் என்றும், இதுவரை காலமும் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், சர்வதேச விசாரணைகளுக்கான அழுத்தம் கொடுப்பதும், அதில் பிரேரிக்கப்பட்டுள்ளன. ஆனால் சர்வதேச விசாரணைகள், எங்களுக்கான நியாயமான தீர்வு எட்டப்படுவதற்கு பதிலீடாக அமையக் கூடாதென்பதுவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கை அதன் பொறுப்புக் கூறும் தன்மையினைத் தட்டிக்கழிப்பதையும் இப்பிரேரணை கண்டித்திருக்கின்றது.

இணைந்த வடக்கு - கிழக்கில் சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டித் தீர்வினை தமிழ் மக்கள் பேரவை அதன் அண்மைய பிரகடனத்தில் மீள வலியுறுத்தியிருக்கின்றது. இன்றைய சூழலில் அவ்வாறான தீர்வொன்றின் சாத்தியத்தன்மை என்ன?

சாத்தியமானதைத்தான் நாங்கள் கோர வேண்டும் என்றால் நாங்கள் எதையுமே கேட்கத் தேவையில்லை. எங்களுக்கு கிடைப்பதைத்தான் கேட்க வேண்டும் என்றால் கடந்த 60 ஆண்டுகளில் நாம் எதையுமே கேட்டிருக்கத் தேவையில்லை. இருப்பதைக் கொண்டு வாழ்வது என்பது அடிமைத்தனத்திலும் கேவலமானது. இயலாதது எதனையுமே நாங்கள் கேட்கவில்லை. எங்கள் உரிமைகளைத் தான் கேட்கின்றோம். சமஷ்டியென்பது எப்போதுமே கிடைக்கப்போவதில்லையே அதற்காக போராடி காலத்தை விரயமாக்குவானேன் என்று சிலர் இன்று கேட்கிறார்கள்தான். நாங்கள் எங்கள் நியாயமான உரிமைகளைக் கேட்கிறோம். இல்லை, அது கிடைக்காது, கேட்காதீர்கள் என்றால் எல்லாவற்றையும் கைவிட்டு விடுவதா? அவர்கள் தருவதைக் கையேந்திப் பெற்றுக் கொள்வதா? முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சேக்காவும் தமிழர்களை பற்றிப்படரும் கொடிகளுக்கு ஒப்பிட்டார்கள். அவ்வாறு தான் எங்களுக்கான தீர்வு தரப்படுமெனில் அதனைப் பெற்றுக்கொண்டு நாங்கள் வாளாதிருக்கப் போகின்றோமா? சாத்தியமான தீர்வென்பதி ஒருவருக்ெகாருவர் மாறுபட்டவர். எங்களது நிலை கீழே இறங்க இறங்க அதுவும் கீழே சென்றுகொண்டேயிருக்கும். தற்போதுள்ள மாகாண சபையும் இல்லை கிராம ராஜ்ஜியங்கள் என்று வரலாம். இன்னமும் எங்களது நிலை கீழே இறங்க அது கூடத் தேவையில்லை எனும் நிலையும் வரலாம்.

சமஷ்டி பிழையானது என்று இலங்கையில் யாரும் சொல்லவில்லை. எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்க தான் இலங்கையில் முதன் முதலில் சமஷ்டி முறையை பரிந்துரைத்தவர். எல்லா இனங்களும் எல்லா மக்கள் கூட்டமும் சுய நிர்ணய உரிமை கொண்டது என்பதனை சர்வதேச சட்டங்கள் வலியுறுத்துகின்றன. அதனை ஐ.நாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. நாங்கள் கேட்பது பெற முடியாததோ அல்லது உலகில் எங்குமே கொடுக்காததோ அல்ல. சிறந்த திட்டமிடல் இன்றி முன்வைக்கப்படுவதாலேயே எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது ஏதோ இருவர் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்மானிக்கும் விடயம் போலப் பாவனை செய்வதுதான் கிட்டவே கிட்டாதென்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி விடுகின்றது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று கிட்டாவிட்டால் தமிழர்கள் என்றொரு இனம் இந்த நாட்டில் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டு விடும்.

தமக்கு எவ்வாறான தீர்வொன்று அவசியப்படுகின்றது. சமஷ்டியென்றால் என்ன? அவ்வாறான தீர்வொன்றின் அவசியம் பற்றியெல்லாம் சாதாரண தமிழ் மக்கள் அறிந்திருக்கின்றார்களா? அல்லது தமது தலைவர்களால் சொல்லப்படுவனவற்றையே தமிழ் மக்களும் மீள ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றார்களா?

தமிழ் மக்கள் மிக நன்றாக அதனை உணர்ந்திருக்கின்றார்கள். இலங்கையின் வரலாற்றினை அதன் ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்தால், தமிழரசுக்கட்சியால் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் 77 ஆம் ஆண்டு தனி நாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், அதன் பின்னரான தேர்தல்களில் தமிழ் மக்கள் எப்போதுமே தங்களது வாக்குகளை அதற்கே ஒற்றுமையாக வழங்கியிருக்கின்றார்கள். பல கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்ட போதும் அவர்களது தேர்வு சுய நிர்ணய உரிமை, இணைந்த வடக்கு கிழக்கு என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாகவுமே இருந்திருக்கின்றது. மக்கள் எந்தவிதத் தெளிவும், அரசியல் அறிவும் இன்றி அவ்வாறு வாக்களித்தார்கள் என்று கூறிவிடமுடியாது. வடக்கு கிழக்கின் பெரும்பான்மையினர் படிப்பறிவு மிக்கவர்கள். அரசியல் தெளிவுள்ளவர்கள். எனவே தமக்கான தீர்வு எது என்ற தெளிவின்றி அவர்கள் ஒருபோதும் வாக்களித்திருக்க மாட்டார்கள். ஏனைய கட்சிகள் இருக்க அவர்கள் தமிழரசுக்கட்சியை தேர்ந்தெடுத்தார்கள்.

அவ்வாறு ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்திருந்தால் தங்களது ஏனைய நலன்களையாவது அவர்கள் பூர்த்தி செய்திருப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதற்காகவே அவர்கள் வாக்களித்தார்கள். இன்று கூட்டமைப்பு மாறுபட்டு நின்றாலும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எல்லாம் இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமையுடனான தீர்வினையே வலியுறுத்தி வந்திருக்கின்றது. அதேகோரிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்தபோதும், தமிழரசுக் கட்சி முன்வைத்தபோதும் அதேபோல தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்வைத்தபோதும் வாக்களித்தார்கள்.

எங்கள் மக்கள் என்றுமே கட்சிகளுக்காக வாக்களித்தவர்கள் அல்லர். மாறாக கொள்கைகளுக்காக வாக்களித்தவர்கள். நாங்கள் தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்கள் கோரிக்கைகளில் இருந்தும் விலகிச் செல்வதைப் பார்த்து விரக்தியுற்றுத்தான் நாங்கள் நடத்திய இரண்டு எழுக தமிழ் எழுச்சிகளிலும் மக்கள் பங்கேற்றார்கள். நாங்கள் தயாரித்த உத்தேச அரசியலமைப்பு தீர்வுத்திட்ட வெளியீட்டிலும் அவர்கள் பெருவாரியாகப் பங்கேற்றார்கள், இது தங்களது கொள்கைகளினின்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிறழ்ந்ததனால் மக்களுக்கு எற்பட்ட விரக்தியால் நிகழந்ததென்றே சொல்லாம்.

தமிழர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு சர்வதேச ரீதியாகக் காட்டப்பட தீவிரம் அதன் பின்னரான போர்க்குற்ற விசாரணைகள், அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, அரசியல் தீர்வு விடயங்களில் சர்வதேசத்தால் காண்பிக்கப்படவில்லை. இந்நிலையில் எங்கள் அரசியல் ரீதியான அபிலாஷைகளை வென்றெடுக்க சர்வதேசத்தின் துணையை நாடலாம் என்று நாங்கள் தொடர்ந்தும் நம்புவது ஏன்?

இந்த இடத்தில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது சர்வதேசத்தினைக் கையாள்வதென்பதே. சர்வதேசமானது தனது அரசியல் நலனை முன்வைத்தே எந்தவொரு பிரச்சினையை அணுகும். சர்வதேச மனித உரிமைகள், சர்வதேச சட்ட மீறல்கள் என்று நாங்கள் எதனைக் கூறினாலும் அவர்கள் தங்கள் தேசத்தினை நலனைக்கொண்டே எதனையும் திட்டமிடுவார்கள். எனவே நாங்கள் சர்வதேச நாடுகளை எவ்வாறு கையாண்டோம் அல்லது கையாளப்போகின்றோம் என்பதில் இருந்தே அவர்கள் அழுத்தம் கொடுப்பார்களா இல்லையா என்பதனை தீர்மானிக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது சர்வதேசம் எங்களுக்கு எதிராக நின்றதென்பது உண்மைதான். அந்நேரம் சர்வதேசத்தை தன்பக்கமாக இலங்கை அரசு வெற்றிகரமாகத் திருப்பியிருந்தது. சீனாவையும் இந்தியாவையும் இராஜதந்திர ரீதியில் அப்போதைய இலங்கை அரசு சிறப்பாகக் கையாண்டது. அது எங்களுக்கு பாரிய தோல்வியைத் தந்தது. அத்தோடு சர்வதேச ரீதியாக எங்களது அணுகு முறைகளிலும் தவறுகள் நேர்ந்திருக்கலாம். அதற்குப் பின்னரான நிலைமைகளில் எங்களது தலைமைகள் சர்வதேசத்தை சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர் எங்களுக்கிருந்த ஒரே தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின்போது நாங்கள் அதனை திறம்படக் கையாண்டிருக்கலாம். 2009 இல் விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னரான இரண்டு தேர்தல்களை எங்கள் தலைமைகள் சரியாகக் கையாளவில்லை. முதலாவது தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்தோம்.

அதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அல்லது இந்த நல்லாட்சி அரசு எனப்படுவதனை ஆதரித்தோம். எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி வெற்றுக் கடதாசியில் கையொப்பமிடுவதனைப்போல ஆதரிக்கச் சம்மதித்தோம். அவ்வாறு செய்ததன் மூலம் எங்கள் தலைகளில் நாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டோம். விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் அரசியல் தலைமைத்துவத்தில் வெற்றிடம் காணப்பட்ட போதும் வெற்றியினை நோக்காகக் கொள்ளாது அடுத்து இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டிருக்க வேண்டும். நாங்கள் தனித்துவமான முடிவொன்றினை எடுத்து ஜனாதிபதி வேட்பாளரொருவரை நிறுத்தியிருக்க வேண்டும்.

அதன் மூலம் நாங்கள் எங்கள் கோரிக்கையில் வலுவாக இருக்கின்றோம் என்பதனை வலியுறுத்தியிருக்க வேண்டும். அதன் பின்னர் நல்லாட்சி அரசினால் எங்களுக்கு விளைந்ததென்ன? அப்போது மஹிந்தவின் அரசை மாற்றும் தேவை சர்வதேசத்துக்கு இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி மாற்றவேண்டுமானால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்று என சர்வதேசத்திடமும் ஐக்கிய தேசிய மற்றும் சுதந்தரக் கட்சிகளிடமும் நாங்கள் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். இழப்பதற்கு எம்மிடம் எதுவும்இல்லாததால் மஹிந்த அரசை மாற்றுவதால் மாத்திரம் எங்களுக்கு என்ன நலன் நேர்ந்து விடப்போகின்றது என்பதனைச சிந்தித்திருக்க வேண்டும். அதனிலும் கீழ் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட முடியாதே? எனவே அந்த உறுதியை நாங்கள்

எடுத்திருந்தால் ஆட்சி மாற்றத்தினை விரும்பிய சர்வதேசத்திடம் உறுதிமொழியினைப் பெற்றிருக்க முடியும்.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தின்போது சர்வகட்சி மாநாட்டில் எடுத்த நிலைப்பாட்டினைக் கூட இப்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுக்கத் தவறுகின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்கள் எல்லாம் நீர்த்துப் போன பின்னர் மஹிந்தவுடன் இணைந்து பணியாற்றலாம் என்கின்றார் சம்பந்தர். மஹிந்த வரக்கூடாது என்று வாக்களிக்கச் சொன்னவர்கள் இன்று மஹிந்த வந்தால் தருவார் என்கின்றார்கள்.

தற்போது நடைமுறைச் சாத்தியம் பற்றிப் பேசுகின்றார்கள். டக்ளஸ் தான் சொல்வதே நடைமுறைச்சாத்தியமான தீர்வு என்றார், அதனை நிராகரிக்கச் சொன்னவர்கள் இப்போது நடைமுறைச் சாத்திமான தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். மக்கள் டக்ளஸை நிராகரித்து கூட்டமைப்பினை தேர்ந்தெடுத்து நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்காகாக அல்ல. 

 

Comments