இந்து சமுத்திரத்தில் அமைதி தேவை என்கிறது இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

இந்து சமுத்திரத்தில் அமைதி தேவை என்கிறது இலங்கை

இந்து சமுத்திர மாநாட்டில்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரையாற்றுகிறார்

ராம்ஜி

இந்து சமுத்திரம் உலகின் மூன்றாவது பெரிய சமுத்திரம் ஆகும். உலகின் கொள்கலன் கப்பல்களில் அரைவாசி அதில்தான் பயணம் செய்கின்றன. அதுமட்டுமன்றி சரக்குக் கப்பல்களில் ‘மூன்றில் ஒரு பகுதி உலகின் எண்ணெய்க் கப்பல்களில் மூன்றில் இரண்டு பகுதி ஆகியவற்றையும் கொண்டுசெல்லும் சர்வதேச கடல் வர்த்தகம் இந்து சமுத்திரத்தின் மூலம்தான் இடம்பெறுகிறது. குறிப்பிட்டுச் சொல்வதானால் உலகின் பிரதான கடல்வழி போக்குவரத்துப்பாதை இதுதான்.

இந்து சமுத்திரத்தை கரையோரமாகக் கொண்டுள்ள நாடுகள் பல. அந்த நாடுகள் பரப்பளவு, மக்கள் தொகை, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. சுமார் 2 பில்லியன் மக்களை இந்த நாடுகள் கொண்டுள்ளன. அதனால் மொழி, மதம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் அவை வேறுபட்டுள்ள போதிலும், வெவ்வேறு உப பிராந்தியங்களுக்குள் (அவுஸ்திரேலியா, தென் கிழக்காசியா, தெற்காசியா, மேற்காசியா, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்கா உள்ளடங்குவதுடன் ஆசியான், சார்க் என பிராந்திய பிரிவுகளாக இருந்த நிலையிலும் இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் என்ற வகையில் ஒன்றிணைகின்றன.

இரண்டாவது உலக யுத்தம் முடிவுற்றதையடுத்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருந்த பிரிட்டனின் காலனித்துவ முறைமை முடிவுக்கு வந்தது. அதனையடுத்து இப்போது ஆதிக்கப் போட்டி ஆரம்பித்துள்ளது. இந்து சமுத்திரப் பிரதேசத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் இதற்கு காரணமாகியுள்ளது.

இந்து சமுத்திரத்தில் எங்கள் நாடான இலங்கை அமைந்துள்ள இடம் தெற்காசிய பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்து சமுத்திர கப்பல் பாதை வழியாகத்தான் உலகில் 70 சதவீத கடல் வர்த்தகம் நடைபெறுகிறது. அதில் பெரும் பகுதி இலங்கையை அண்மித்துச் செல்லும் கடல் வழிப்பாதையாக அமைவதால் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளில் இலங்கை முக்கியமாகவும் ஒரு மையப்புள்ளியாகவும் இருக்கிறது.

இந்து சமுத்திர மாநாடு 2017 என்ற பெயரில் இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. சமாதானம், முன்னேற்றம், சுபீட்சம் என்ற தொனிப்பொருளில் இந்த இந்து சமுத்திர மாநாடு பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. 35க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டன. 25 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பேசினார்கள்.

மேலே குறிப்பிட்ட இந்து சமுத்திர மாநாடு (10C), இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பு (IORA) ஆகிய இரண்டும் வெவ்வேறு என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நிலையில் இந்து சமுத்திரத்தை சுதந்திரமாக கப்பற் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உலகின் வல்லரசு நாடுகள் உதவ வேண்டும் என்று இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திர மாநாட்டின் அவரது ஆரம்ப உரையில் கூறியிருக்கிறார்.

இந்து சமுத்திரத்தின் மையப்புள்ளியாக இலங்கை உருமாறுவதற்கு இந்து சமுத்திரத்தில் கப்பல் பயணங்களின் சுதந்திரத்துவத்தை பேணுவது அவசியமாகும். கப்பற் பயணம் மட்டுமன்றி இந்து சமுத்திரத்துக்கு மேலான விமானப் பயணங்களும் தங்குதடையின்றியும் சட்டபூர்வமான கப்பல் வர்த்தகத்துக்கு தற்போதைய சர்வதேச சட்டவிதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

அவ்வாறு இருந்தால்தான் இலங்கையின் மையநிலை மற்றும் இலங்கையின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மூலம் முழுமையான பயனைப்பெற முடியும்.

மாநாட்டுக்கு வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை பிரதமர் 
ரணில் விக்ரமசிங்கவினால் வரவேற்கப்படுகிறார்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஓர் இராணுவ தளம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இலங்கை அரசாங்கம் எந்தவொரு நாட்டுடனும் இராணுவ உறவுகளைப் பேணாது. அத்துடன், தனது தளங்களை எந்தவொரு வெளிநாடும் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்காது என்று பிரதமர் தனது ஆரம்ப உரையில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இராணுவ பயிற்சி, தளபாடங்கள் விநியோகம், கூட்டு இராணுவ ஒத்திகை ஆகியவற்றை நட்பு நாடுகளுடன் நாம் மேற்கொள்வோம். அதற்கு எவ்வித தடையும் இருக்காது என்றும் பிரதமர் அவரது ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மாநாட்டில் உரையாற்றியபோது இந்து சமுத்திரத்தில் மையப்புள்ளியாக இலங்கை அமைந்திருப்பதால் அது இப்பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் கப்பற்பயணத்தை பலப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறான செயற்பாடு முழு மனித குலத்துக்கும் முன்னேற்றகரமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

1971 இல் அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பிரேரணையொன்றை சமர்ப்பித்ததை ஜனாதிபதி இங்கு ஞாபகமூட்டினார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கை மையப்புள்ளியாக இருக்கிறது. இந்து சமுத்திரத்தில் கப்பற்பயணத்தை மேற்கொள்ளும் எவருக்கும் இடைஞ்சல் இருகக்கூடாது. குறிப்பாக இராணுவ நடமாட்டம் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறும் வகையிலேயே ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பேச்சுக்கள் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டதையடுத்து இந்து சமுத்திரம் சூடான பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா ஹம்பாந்தோட்டையில் என்ன செய்கிறது என்பதை அமெரிக்க கடற்படையின் பசுபிக் ஆணையகம் உற்று கவனித்து வருகிறது.

அதேவேளை இந்த விடயத்தில் இந்தியாவும் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. இதேநேரம் இதைப்பற்றி நாங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் அதுதான் எங்கள் தேவை என்று உரத்துச் சொல்வதற்கு இந்து சமுத்திர மாநாட்டை இலங்கை நன்றாக பயன்படுத்திக்கொண்டுள்ளது.

Comments