இலங்கை –இந்திய ஒருநாள் தொடர்: இன்று தம்புள்ளையில் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை –இந்திய ஒருநாள் தொடர்: இன்று தம்புள்ளையில்

மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வாரம் முடிவுற்ற இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-–0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அதைத் தெடர்ந்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஜூன் மாதம் சம்பியன் கிண்ணத் தொடரில் மோதியது. இப்போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் இலங்கை அணி கடைசியாக இலங்கை மண்ணில் தர வரிசையில் கடைசி இடத்திலுள்ள சிம்பாப்வேயுடனான தொடரில் தோல்வியைத் தழுவியது. சிம்பாப்வேயுடன் 3-–2 என்ற ரீதியில் தொடர் தோல்விகளைச் சந்தித்ததால் அவ்வணி 88 புள்ளிகளுடன் சர்வதேச தரவரிசையில் 8வது இடத்துக்கு தரமிறக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாத முடிவில் புள்ளிகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் தரவரிசையில் 8வது இடத்திலேயே இருந்தால் எதிர்வரும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நேரடியாகப் பங்குகொள்வதில் இலங்கை அணிக்கு நெருக்கடி இருக்காது.

ஆனால் இன்று ஆரம்பமாகும் இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 5-–0 அல்லது 4-–1 என்ற ரீதியில் தோல்வியடைந்தால் புள்ளிகள் 82 ஆகக் குறையும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் 78 புள்ளிகளுடன் 9 இடத்திலுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அயர்லாந்துடனான ஒரு போட்டியிலும், இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் மோதவுள்ளது. இத்தொடர்கள் இரண்டிலும் அவ்வணி வெற்றி பெற்றால் 86 புள்ளிகள் பெற்று 8வது இடத்துக்கு மேற்கிகிந்திய அணி முன்னேற வாய்ப்புள்ளது. இவ்வாறு நடந்தால் இலங்கை 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகும் வாய்ப்பை இழக்கும் இக்கட்டான சூழலில் இன்று பலம்வாய்ந்த இந்திய அணியைச் சந்திக்கின்றது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் அவ்வணி சம்பியன் கிண்ணத் தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியுற்றாலும் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-–1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தது. மேலும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால் அவ்வணி மிகுந்த உற்சாகத்துடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும்.

இதுவரை இந்திய-–இலங்கை அணிகளுக்கிடையில் மொத்தமாக 143 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 78 வெற்றிகளையும் இலங்கை அணி 53 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன் 11 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளதுடன் ஒரே ஒரு போட்டி சமநிலையில் முடிவுற்றுள்ளது. இதே வேளை இலங்கை மண்ணில் இதுவரை இரு அணிகளும் 56 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இலங்கை அணியே கூடுதலாக 27 போட்டிகளிலும் இந்திய அணி 23 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் 6 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இதேவேளை இந்திய மண்ணில் இரு அணிகளும் 43 போட்டிகளில் விளையாடியதுடன் இந்திய அணி 29 போட்டிகளிலும் இலங்கை அணி 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இவ்விரு அணிகளும் பொதுவான மைதானங்களில் 44 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 26 போட்டிகளிலும், இலங்கை அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இலங்கை- இந்திய போட்டி வரலாற்றில் துடுப்பாட்டத்தில் இந்தியா சார்பாக அதிக ஓட்டங்களை சச்சின் டெண்டுல்கர் 1990 முதல் 2012ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 84 போட்டிகளில் விளையாடி 8 சதம், 17 அரைச்சதம் அடங்கலாக 3113 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதே வேளையில் இலங்கை சார்பாகக் கூடிய ஓட்டங்களை சனத் ஜயசூரிய 1990-–2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 89 போட்டிகளில் விளையாடி 7 சதம், 14 அரைச்சதம் அடங்கலாக 2899 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் இலங்கை சுழற் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனே முதன்மை பெற்றுள்ளார். இவர் 1993-–2011ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் 63 போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2001 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 30 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் கைப்பற்றியதே இந்தியாவுக்கு எதிரான இலங்கை பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்து வீச்சாகும். இந்தியா சார்பாக சஹிர்கான் 2000-–2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 48 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தனி நபர் சிறந்த பந்து வீச்சாக 2005ம் ஆண்டு ஆர் பிரேமதாச மைதானத்தில் அஷிஸ் நெஹ்ரா 59 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் கைப்பற்றியதே இந்திய அணி சார்பாக சிறந்த பந்து விச்சாகப் பதிவாகியுள்ளது.

தனி நபர் கூடிய ஓட்டமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா 2015ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியொன்றில் பெற்ற உலக சாதனை ஓட்டமான 264 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இலங்கை சார்பாக சனத் ஜெயசூரிய 2000ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 189 ஓட்டங்களைப் பெற்றதே இலங்கை சார்பாக கூடிய தனி நபர் ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு அணிபெற்ற குறைந்த ஓட்டமாக 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் இந்திய அணி பெற்ற 54 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இலங்கை அணி 1984ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 96 ஓட்டத்துக்கு ஆட்டமிழந்ததே இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற குறைந்த ஓட்டங்களாகும்.

ஒருநாள் போட்டி அட்டவணை

 

போட்டிகள் யாவும் பகலிரவுப் போட்டியாக மாலை 2.30 மணிக்கே ஆரம்பமாகும்.

ஹில்மி சுஹைல் 

 

Comments