ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“வண்டி வந்ததும் ஏறி போட்டியல் வீட்ட வந்து பார்த்தனான் நீங்கள் வரயில்ல செல்லாத்தாட்ட சாக்குபோக்கு சொல்லிப்போட்டனான் எப்ப வந்தியள்?”

“பத்து மணிக்கு வந்தனான் வீட்டடியில கொண்டு வந்து இறக்கப்போட்டவனப்பா”

“யார் தெரிஞ்சவரோ?”

“ராசமாணிக்கம் மானிப்பாய் விதானையாரின்ட மகன்... என்னோடதான் படிச்சவன் இப்ப கொழும்பில டாக்டரா இருக்கிறானாம். என்ன அடையாளம் கண்டவுடன் நிறுத்திப் போட்டான், நீ பாத்தனீயல்ல”.

“அப்ப இரவு...”

நீ நினைக்கிற மாதிரி ஒன்டும் இல்ல அவன் இப்ப ஒரு டொக்டர் கொழும்பில் டிஸ்பென்சரி வைச்சு நடத்திறவனாம். எக்கசக்க காசு உழைக்கிறவன். என்ன கண்டதும் பழசு எல்லாம் நினைவுக்கு வந்துட்டுது என்ன கூட்டிப் போய் பழங் கதைகளை பேசினவன். நிறைய மருத்துவ அறிவுரை எல்லாம் சொன்னவன்.”

“மருத்துவ அறிவுரையோ.? “

“எனக்கு நோய் எதுவும் இருக்கோ என்று கேட்டவன்”

“நோய் தெரியிறத்துக்கு இல்ல என்டு சொன்னனான். உதுக்கு நிறைய ஆலோசனை சொன்னவன். சரியான கட்டுப்பாடும் எக்ஸசைசையும் செய்தா நீரிழிவு ரத்த அழுத்தம் பிரச்சினை தராது என்டு சொன்னவன்.”

“அப்ப இனி விடியக் காலையில ஓடப் போறியளோ?”

“ஓட வேண்டுமென்டு இல்ல நடந்தா போதுமென்டு சொன்னவன், ஆனால் சாப்பிட்டில உப்பு சேர்க்கிறத குறைச்சி போடுங்கோ. அளவாக சாப்பாட்டை சாப்பிடுங்கோ கூட சாப்பிட்டா சுகர் கூடும் காய் கறி, பழம், மீன், முட்டை சாப்பிடலாம். பான், கோதுமை மா, சம்பா அரிசி கூடாது. சிகப்பு அரிசிதான் சாப்பிட வேண்டும். ஐஸ் பானம், குளிர் பானம் எல்லாம் மறந்திட வேண்டும். நொறுக்கு தீனியள அறவே மறக்க வேணும் என்டு சொன்னவன்”.

“நொறுக்குத் தீனியா?”

உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு பொரியல் மாலை நேரத்தில் டிபன் கொரிக்கிறது எல்லாமே நொறுக்குத்தான். அது மட்டுமில்ல இந்த நூடில்ஸ், கொத்து ரொட்டி என்டு இரவு கடைகளில கொடுக்கினமே உத வயித்துக்கும் உடம்புக்கும் ரொம்ப கேடாம். என்டு என்ட கூட்டாளி சொன்னவனப்பா.. கொழும்பில முக்கால்வாசி பேர் உதைத்தான் ஒவ்வொரு இரவும் சாப்பிடுகினம். உதில MSG என்ட மொனோசோடியம் குளுகோமேட், சேக்கினமாம்”.

“ஏன் மசாலா முடிஞ்சிட்டுதோ? உது என்ன புதுச் சாமான?”;.

“MSG என்டு சொன்னா உனக்கு விளங்காது.. Ajinomoto என்டு சொன்னா தெரியுமோ?”

“அது தெரியும். எங்கட காலத்தில் சின்ன பக்கட்டில விப்பினம். சம்பளுக்கு போட்டா நல்ல ருசி, இப்ப அந்த பக்கட்ட காணல்லயே?”

அப்ப சின்ன பக்கட்டா கிடந்தது.. இப்ப 1 கிலோ 2 கிலோ என்டு பெரிய பட்கட்டுல பகிரங்கமாக விற்கினம். ஒரு வருஷத்தில் 2200 மெற்றிக் தொன் இறக்குமதி செய்கினமாம். உதுன்ட மதிப்பு மூன்டரை கோடி ரூபாவிற்கு மேல,

“அண்ணே.. அந்த அஜின மோட்டோவ சாப்பாட்டில சேர்க்க கூடாதெண்டு அப்ப சொல்லிக் கொண்டிருந்தவை.. எலும்ப இளக்கிப் போடும் என்டு கதைச்சவை”..

“ஓம் ஓம். அது உண்மை என்டு தான் எனட டொக்டர் பிரண்ட்டும் சொன்னவர். எலும்பு போனாலும் பரவாயில்லை என்டு உதை கலக்கிற கொத்து ரொட்டி, நூடில்ஸ், டேஸ்ட் பைட்டை தான் கொழும்பு ஆக்களோட பேவரைட் டின்னர். உது கலக்கிற நூடில்ஸ் வகைதான் ஸகூல் போற பிள்ளையல்ளின்ட பிரேக் பெஸ்ட், உந்த MSG உடம்பில சேர சேர மோசம்தான். உத மட்டுமில்ல அந்த சேர்க்கை சுவையூட்டியல் போலத்தான் நிறமூட்டியளும். உவையும் நஞ்சுதான்”.

“எங்கட ஆட்களுக்கு எது சுகாதாரத்திற்கு நல்லதென்டு இல்ல, வாய்க்கு ருசியா இருந்தா போதும், உடம்புக்கு கெடுதல் என்டாலும் பிரச்சினையில்ல, உள்ள தள்ளிப் போடுவினம்”.

“உந்த அஜினமோட்டோ இருக்கிதில்ல. உத இலங்கையில இப்போ விக்கிறத தடை செய்திருக்கினமாம்”

“எப்ப தடை விதிச்சினம்?”

“இந்த வருஷத்தில் மார்ச் மாதத்திலதான் உந்த தடையை விதிச்சிருக்கினம். அதோட உது நரம்பு மண்டலத்திற்கு கூடாது... புற்று நோயையும் ஏற்படுத்தும் என்டு எச்சரிக்கையும் செஞ்சவையாம். ஆனால் உதை இப்ப சட்ட விரோதமா கொண்டு வந்து விக்கினம் என்டு தெரிய வந்து கிடக்கு”.

“ருசி கண்டு போட்டவையில்ல.. இனி தடை செஞ்சா கொண்டு வருவினம்.. வேண்டாம் என்டா சாப்பிடுவினம் எங்கட ஆட்கள் உதில ரொம்ப கில்லாடியள்”.

இந்த அஜின மோட்டடோ இலங்கையில 40 வருஷமா பயன்படுத்தப்படுகுது. உதை தடை செய்யுறமென்டு சுகாதார அமைச்சின்ட பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு அறிவிச்சவராம். ஆனா உத்தியோகபூர்வமா அறிவிக்க இல்ல. என்டு உத இறக்குமதி செய்றவ சொல்லிக கொண்டுடிருக்கினம்.”

“சட்டம் போடாம அறிவிப்பனமோ?”

“சட்டம் போட்டாலும் போடா விட்டாலும் இறக்குமதி செய்றவ அவைக்கு சாதகமாதான் எடுத்துக் கொள்வினம்.”

“உது நல்லா கிடக்குது”

“சாப்பாடு என்டா.. சின்ன ராசா முதலில உடம்புக்கு தேவையான போசாக்கு சக்தி அதில இருக்க வேணும்”.

“போசாக்கு இல்லை என்டா அது சக்கையல்லோ”

“போசாக்கு வேணும் அதோட சாப்பாட்டிட ருசி, குணம், நிறம், வாசம் எல்லாம் இருந்தாதான் அது முழுச் சாப்பாடு. உந்த ருசி குணம், மணம் என்பதை சாப்பாட்டிலே சேக்கத்தான் எங்கட நாட்டுல மசாலா பொருட்கள் கிடக்குது. மிளகாய், மிளகு, கறுவா, இஞ்சி, ஏலக்காய், சாதிக்காய், கொரக்காய் புளி, எலுமிச்சை, பூடு, மல்லி, சீரகம், என்டெல்லாம் கிடக்குது. உதை எல்லாம் பாவிச்சம் என்டா ரசம் செய்து சாப்பிட்டமென்டா நோய்கள் கிட்ட வராது. எங்கட தமிழரின்ட சாப்பாட்டில உவை எல்லாம் சேருது. அஞ்சு சுவை என்டு சொல்றனாங்களே. உதைத்தான சொல்லுறனாங்கள் தெரியுதோ”

“உதை விட்டுப்போட்டு அஜினமோட்டோ, கலரிங், செங்கல் தூள், கலந்த மிளகாய் தூள், பப்பாசி கொட்ட சேர்ந்த மிளகு தூள் என்டு எல்லாம் பாவிச்சம் என்டா வயிற்று வலியில ஆரம்பிச்ச எல்லா வலியும் வந்துபோடும் என்ன?”

“உனக்கு தெரியுமோ?? உலகத்தில உள்ள சிறந்த கறுவா எங்க இருக்குது என்டு சொல்.பாரப்பம்?”.

“கறுவாவோ? இந்தியாவில இருந்துதான் வருகுதென்ன?

“பிழையா சொன்னனீ.. உலகத்தில் சிறந்த கறுவா இலங்கையில தான் இருக்குது. சிறந்த மிளகு எங்களிட்ட தான் இருக்காது. சிறந்த கொக்கோ உற்பத்தி செய்றதில் எங்க நாடும் ஒன்டு. சிறந்த தேயிலையும் எங்கட்டதான் இருந்தது. இப்ப கென்னியாவும் இந்தியாவிலயும் நல்ல தேயிலை உற்பத்தி செய்யினம். சிறந்த நவரத்தின கற்கள் இலங்கையில இருந்து தான் கிடைக்குது”.

“உந்த விபரமெல்லாம் எங்கட ஆக்களில நிறைய பேருக்கு தெரியாதன்ணே”

“எங்கட நாட்டின்ட அருமை பெருமைய நாங்க முதல்ல தெரிஞ்சுகொள்ள வேணும் சின்னராசு.. எங்கட சிவப்பு அரிசி சோத்தையும் எங்கட மண்ணில விளையுற காய்கறிகளையும் சமைச்சி சாப்பிட்டு போட்டு எங்கட மா, வாழை, பலா மற்றும் உள்ள பழங்களையும் ருசி பாத்து தயிரையும் சாப்பிட இலங்கை வருகிற உல்லாச பயணிகள் நிறைய இருக்கினம். எங்கட கீரை வகைகள் ஆயுர்வேத மருந்துகள் இவையும் அவையளுக்கு பிடிக்கும். ஆனா எங்களுக்கு அவையின்ட பேர்க்கர், சிக்கன் பிரை தான் பிடிக்குது. உதைத்தான் மாற்ற வேண்டும் சின்னராசு”.

“நேரில சொல்லுவம் பேப்பரில போடச் சொல்லுவம் வேற என்னத்த எங்களால செய்ய முடியும்.”

Comments