செய்தியின் பின்னணியில்! | தினகரன் வாரமஞ்சரி

செய்தியின் பின்னணியில்!

றேடியோ தொடர்ந்து கேட்டு வாறவங்களுக்கு இந்தச் சொல் நினைவிருக்கும். செய்திக்குப் பிறகு ஒரு விசயத்தைப் பத்தி அலசும் நிகழ்ச்சி அது! இப்ப அநேகமாக விசயமே இல்லாமல்தானே செய்தி வருகிறது என்கிறார் ஓர் எழுத்தாளர்.

எல்லாமே எதிர்மறையான சம்பவங்களும் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் முரணான விடயங்களும்தான் செய்தியாக வருகின்றன. பேர்த்தியின் கையைப்பிடித்திழுத்த தாத்தா, மருமகளைக் கொடுமைப்படுத்திய மாமா, கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி, பாலியல் வன்கொடுமையை விபரிக்கும் காமுகன், பாலியல் துஷ்பிரயோகம்; பாட்டனார் கைது என்று எதிர்மறை சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் செய்திகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், நேர்மறையானதும் சாகமானதுமான செய்திகளுக்குக் கொடுக்கிறார்கள் இல்லை என்கிறார் எழுத்தாளர் வருண சந்திரகீர்த்தி!

சில செய்தியாளர்கள் நாளாந்தம் சாதாரணமாக நடக்கும் விபத்துகள் அதாவது முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து, இருவர் படுகாயம்! குளவி கொட்டுக்கு இலக்காகி பத்துப்பேர் காயம், கஞ்சா வைத்திருந்தவர் கைது என்றெல்லாம் செய்தி எழுதுறாங்க. இன்னும் ஒரு சாரார், ஊருக்கு மந்திரி வந்து மேடைபோட்டுக் கூட்டம் போட்டால்தான் செய்தி எண்டு இருக்கிறாங்க. இந்த நிலைமைக்கு மத்தியிலைதான் திரு. சந்திரகீர்த்தி முக்கியமான விசயத்தைப்பத்திக் கவனம் செலுத்தியிருக்கிறார்.

முன்பெல்லாம், செய்தியை மதிப்பிடுவதற்கு ஏழு வரைவிலக்கணங்களைச் சொன்னாங்க. இப்ப இருபது வரைவிலக்கணங்களைச் சொல்றாங்க. அதனாலதானோ என்னவோ, நாம எதிர்பார்க்கிறதுக்கும் மாறாக வித்தியாசமாக நடக்கும் நல்ல விசயங்கள செய்தியாகப் போடுறாங்கள் இல்லை. குருணாகலையில் உள்ள ஒரு சுனில் ஒரு பொம்பிளைப் பிள்ளையோட படத்திற்குப் போறது செய்தியில்லை! ஒரு மந்திரியோட மகன், இன்னொரு மந்திரியின் மகளோட இரவு விடுதிக்குப் போய், காரைக்ெகாண்டு மின் கம்பத்திலை மோதினால் அது செய்தி! இரண்டு நாடுகளுக்கு இடையிலை பிரச்சினையெண்டால் செய்தி! உள்ளூரிலை நடக்கிற நல்ல நிகழ்ச்சி, மக்களின் ஆர்வத்தைத் தூண்டுற சம்பவங்கள் செய்தி இல்லை! இது சரியா? எண்டு கேட்கிறார் அவர்.

1993 காலப்பகுதியிலை வாராந்தப் பத்திரிகையொண்டிலை ஒரு செய்தி வந்திருக்கு.

அம்பாறை மகாஓயா பகுதியிலை ஒரு தனி மனிதர் தன்னுடைய சொந்த முயற்சியாலை குளம் ஒன்றைக் கட்டப்போகிறாராம். அதற்கு உதவி கேட்டிருக்கிறார், அதுதான் செய்தி!

அந்தச் செய்தியைப் பாத்திட்டு கொழும்பு பல்கலைக் கழகத்திலை விஞ்ஞான பீட மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக் கழகத்திலை பொறியியற்பீட மாணவர்களும் (சந்திரகீர்த்தி உட்பட) நிதி, ஆளணி எல்லாத்தையும் திரட்டிக்ெகாண்டுபோய் உதவி செய்திருக்கிறாங்க. மகாஓயா இராணுவ முகாமிலையும் உதவி எடுத்திருக்காங்க. இப்பிடி ஓர் இருபதுபேர் உதவி செய்திட்டு திரும்பவும் கொழும்பு வந்திருக்கிறாங்க.

வந்தவங்க, இந்த விசயத்திற்கு உதவி செய்தவங்களுக்கு நன்றி தெரிவிக்கிறதுக்காக, ரெண்டு மூணு படங்களோடயும் சின்ன குறிப்போடயும் பேப்பரிலை போடலாம் எண்டு பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் இருக்கிறாங்க! துரதிர்ஷ்டம், எந்தப் பத்திரிகையிலையும் அதை ஏற்றுக்ெகாள்ளலயாம்! அதுதான் இப்ப கேட்கிறார், நல்ல சம்பவங்கள் எல்லாம் இப்ப செய்தி இல்லையா? எண்டு!

நியாயமான கேள்விதானே! மக்களுடைய மனோபாவம் அப்பிடித்தானே இருக்கு.

அடுத்த வீட்டுச் சமாச்சாரங்களைத் தேடுவதில்தான் ஆர்வமாக இருக்கிறாங்க. நீதிமன்றத்திலை நடக்கிற குடும்பப் பிணக்குகளைச் செய்தியாகப் போடச் சொல்லி யார் கேட்டாங்க? பாலியல் துஷ்பிரயோகத்திற்குச் சிறுவர்கள் உள்ளாகியிருந்தால், அவங்கட பெயர், ஊர் தெரியப்படுத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் குற்றவாளிக்குமான உறவுமுறையையும் சொல்லக்கூடாது; அப்பா, சித்தப்பா, மாமா என்று. அப்பிடியும் சொல்லாமல்கூட அந்தச் செய்திக்கான தேவைதான் என்ன? அடுத்தவங்கள விவகாரத்தை அறியும் நோக்கமா, வேறென்ன?

தென்கச்சு சுவாமிநாதன் சொன்ன ஒரு கதையைக் கேளுங்க. ஒரு சோதிடர் இருந்தாராம். அவர் மிகத்துல்லியமாக எல்லோருடைய சாதகத்தையும் கணிச்சுச் சொல்வாராம். ஒரு நாள் வீதியில் நடந்துபோகும்போது, மண்டையோடு ஒண்ண கண்டிருக்கிறார். விடுவாரா? அதை ஆராய்ந்து பார்த்தபோது அந்த மண்டை ஓட்டுக்கு இன்னும் சில விசயம் நடக்க வேண்டியிருக்கிறதே! என்று கண்டுபிடிச்சிருக்கார். அதோடை நிறுத்தாமல், அதை வீட்டுக்குக் கொண்டுபோய் ஓர் அறையிலை வைச்சிருக்கிறார். வைச்ச மனிசன் சும்மா இருக்கக்கூடாது, தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு அந்த மண்டை ஓட்டை போய் பார்த்திட்டு வருவாராம்.

இதைக் கவனிச்ச அவரோட மனைவி, அடுத்த வீட்டு மனிசிட்டச் சொல்லியிருக்கிறா. அவ சொன்னாவாம், அது அவரோட முன்னால் மனைவியோட மண்டையோடு. அதுதான் உனக்குத் தெரியாமல், இரவிலை பார்த்துட்டு வாறார் என்றாளாம்.

இந்தம்மாள் சும்மா விடுவாரா? அடுத்த நாள் சோதிடர் வெளியில் போனவுடன், அந்த மண்டையோட்டை ஓர் உரலிலை போட்டு நல்லா இடித்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து சோதிடர் வந்துட்டார்.

அவருக்கு அப்போது புரிந்திருக்கிறது, மண்டையோட்டுக்கு இன்னும் நடக்க வேண்டியது இதுதானோ! என்று. அதுமட்டுமல்ல, இன்னொரு விசயமும் புரிந்திருக்கிறது, அதாவது, நமது குடும்ப விசயம், நம்மைவிட அடுத்த வீட்டாருக்குத்தான் நன்றாகத் தெரிகிறது என்றதுதான் அந்த விசயம்! எப்பிடி கதை?

இப்படித்தான் ஊடகங்களின் போக்கும் இருக்கிறது. இந்தப் போக்ைக மாற்றும் பொறுப்பு ஊடகங்களவிடவும் உண்மையில் உங்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது! 

Comments