நல்லூரில் இன்று தேர்த் திருவிழா | தினகரன் வாரமஞ்சரி

நல்லூரில் இன்று தேர்த் திருவிழா

செல்வநாயகம் ரவிசாந்

ஈழத்தின் முருக வழிபாட்டுத் தலங்களில் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (20) கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

தேர்த் திருவிழாவையொட்டி ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசம் விழாக் கோலம் பூண்டுள்ளது. அதிகாலை- 04.30 மணிக்குத் திருப்பள்ளியெழுச்சி, 04.45 மணிக்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள வேற்பெருமான் உட்பட ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேகம் பூசைகள் என்பன இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அதிகாலை-05.15 மணிக்கு வசந்தமண்டபப் பூசை, கொடித்தம்ப பூசை என்பன இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 05..45 மணிக்கு ஆறுமுகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளுவார்.

அதனைத் தொடர்ந்து காலை- 07 மணிக்கு ஆறுமுகப் பெருமான் தேருக்கு எழுந்தருளுவார். காலை- 07.30 மணிக்குத் தேர் பவனி ஆரம்பமாகும். தேர் காலை- 09 மணிக்கு மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து ஊஞ்சற் பாட்டு இடம்பெறும். முற்பகல்- 10 மணிக்கு ஆறுமுகப்பெருமான் பச்சை சாத்தி மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளுவார். அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபத்தில் சண்முக அர்ச்சனை, அபிஷேகம் என்பன இடம்பெறும்.

இந்த வருடம் நல்லூர்க் கந்தசுவாமி தேர் உற்சவத்தில் குடாநாட்டிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அணி திரள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் திருட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பல எண்ணிக்கையான கண்காணிப்புக் கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் நூற்றுக் கணக்கான யாழ். நகரப் பாடசாலைகளைச் சேர்ந்த சாரணர்கள், சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப் பிரிவினர், ஆலயத் தொண்டர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களின் நன்மை கருதி யாழ். மாநகர சபையினரால் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தைச் சூழவுள்ள மண்டபங்களிலும், மடங்களிலும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் கலாசார உடைகளுடன் வருகை தருமாறும், இயன்றளவு நகை ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் ஆலய நிர்வாக சபை கேட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் தேர், தீர்த்தோற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலையால் 70 வரையான பேருந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், காரைநகர் மற்றும் பருத்தித்துறை சாலைகளின் பேருந்துகளும் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 

Comments