தண்ணீர் | தினகரன் வாரமஞ்சரி

தண்ணீர்

 

 நீரின்றிப் போனாலிந்த

நிலமெல்லாம் வறண்டு போகும்

உணர்விழந்து பயிர்கள் யாவும்

உயிரிழந்து கருகிச் சாகும்

வேரின்றி மரங்கள் சாயும்

வேதனைபட்டு வேகும்

பூவின்றி இலையுமின்றி

விதவையாய் வேடம் பூணும்

ஓடையில் ஓடும் மீன்கள்

உருவெல்லாம் மாறிக் காயும்

ஒய்யாரம் இழந்த நாணல்

ஓலைகள் சுருண்டு மாயும்

ஆறுகள் குளங்கள் வற்றும்

அழகிய அலைகள் சிறுக்கும்

நீர் நிலை, நிலமும் தெரியும்

நீண்டதோர் அருவி அடங்கும்

பசுமைகள் யாவும் மறைந்து

பதைக்கின்ற கொடுமை கூடும்

பருகிட நீரும் அற்று(ப்)

பாரெல்லாம் பஞ்சமாகும்

கால்நடைக் கூட்டமெல்லாம்

கதறியே நீரைத் தேடும்

கானலின் கண்ட நீரை

கனதூரம் தேடியலையும்

பூஞ்சோலைக் குயில்கள் வாடும்

புதுக்கவிதை மறந்து போகும்

புன்னகை இழந்து நாளும்

புதியதோர் இடத்தைத் தேடும்

கார்முகில் இல்லை என்றால்

கான மயில் ஆடல் மறையும்

வான் மீது வானவில்லின்

வர்ணங்கள் ஏழுமழியும்

தாகமாய் மனிதர் தம்மின்

தளிருடல் தவித்து வரளும்

சோகமாய் உடலும் துடிக்கும்

சோர்ந்துமே கண்கள் இருளும்

நிலமெல்லாம் நெருப்பாய்(க்) கொதிக்கும்

நெற்பயிர்கள் நினைவை இழக்கும்

வளமுடன் செழித்த வயல்கள்

வடிவிழந்து பாலையாகும்

தென்றலும் தீயாய் மாறும்

தெருவெல்லாம் புழுதி சேரும்

மழையற்று போனாலிங்கு

மற்றெது வாழவைக்கும்

எழிலுறும் மழையே...! தாயே...!

இயற்கையின் அன்னை நீயே!

இறைவனின் கருணை ஊற்றே...!

இரங்கியே வந்து பொழிவாய்

மண்ணெல்லாம் உயிர்கள் வாழ

மழையே நீ வருவாயம்மா

மனமெல்லாம் துதித்து நின்றோம்

மகிழ்வினையே தருவாயம்மா

Comments