எதிர்பாராதது | தினகரன் வாரமஞ்சரி

எதிர்பாராதது

அப்துல் மஜீத் ஜெசீம், மருதமுனை

மதுவுக்கு முதலே கம்பஸ் நுழைந்தவன் தான் ரமேஷ். ஊருக்குள் மிகவும் பிரபல்யமான குடும்பத்தில் தலைமகனாக பிறந்திருந்தான். கடமை' கண்ணியம்' கட்டுப்பாடு மூன்றுக்கும் வரைவிலக்கணம் அவனே தான்.எனச் சொல்லும் அளவிற்கு தனது மாணவப் பருவத்தை கடந்து கொண்டிருந்தான்.அவ் வேளை காதலும் துளிர்த்தது. அவன் காதல் வலைக்குள் சிக்கியவள் தான் மது.பலவருடங்கள் பல்கலைக் கழக வளாகத்துள் மதுவை சந்தித்தாலும் பட்டமளிப்பு விழா தொடங்க முன்பே நூலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் கதைத்திருந்தான்.அப்படி என்ன தான் கதைத்தான் ரமேஷ்...

பட்டமளிப்பு விழா ஆரம்பமாகவும் மதுவும் றமேசும் நூலகம் விட்டு வெளி வந்தனர். மதுவின் இரு விழிகளும் நன்கு சிவந்து கிடந்ததைப் பார்த்த ஏனைய நண்பர்கள் கிண்டல் அடிக்கத் தொடங்கினார்கள். மதுவோ நாணத்தால் தலை குனிந்தும் நண்பர்கள் விட்ட பாடில்லை. மதுவுக்கோ கிண்டல் தாங்க முடியாமல் "ஐயோ கடவுளே. இந்த காதல் ஏழையிடம் குடி புகுந்தாலும் கோழையிடம் குடி புகுந்து விடக் கூடாது..." என தன்னை மறந்து கத்தினாள். அதன் பின்பே நண்பர்களின் கிண்டல் ஓய்ந்தது.

மது குடும்பத்தில் ஒரே ஒரு மகளாக பிறந்திருந்தாள். தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. அவருக்கு ஊருக்குள் உயர்ந்த மதிப்பு இருப்பதை மது நன்கு அறிந்திருந்தாள். தந்தையின் கண்டிப்பு காதல் எனும் விடயத்தில் சரி வராது என்பதும் அவளுக்கு நன்கு தெரியும். ஆனாலும் ரமேஷின் காதலுக்கு மறுப்புக் கூறி அவனை இழந்து விட அவள் மனம் அணுவளவும் விரும்பவில்லை. ரமேஷ் தன்னிடம் காதலைக் கூறிய போது உடனே சம்மதம் கூறி விடும் துணிவின்றி கண்ணீர் சொரிந்தே அவள் கன்னங்கள் சிவந்ததோடு விழிகளும் சிவந்து கிடந்தன.அவள் காதல் விடயம் வெளியே தெரிவதற்கு சிவந்து வீங்கிப் போயிருந்த அவள் வதனம் தான் காரணம்.

கம்பஸ் விட்டு வெளியேறிய ரமேஷை இனி எப்போ சந்திப்பேன்? என்ற ஏக்கம் ஒரு புறமும் தனக்கு இரு வருடங்களுக்கு முதலே இம் மண்ணுலகில் பிறந்து விட்ட தந்தை சகோதரியின் மகன் ரகு தனக்கெனவே நிச்சயிக்கப் பட்ட செய்தியும் சேர்ந்தே மதுவை "இரு தலைக்கொள்ளி எறும்பு" போல் துடி துடிக்க வைத்தது. ரகுவின் விடயம் பற்றி றமேஷிடம் எதுவும் கூற விரும்பவில்லை. அதற்கு காரணம் அது மதுவின் பெற்ரோர் விருப்பம் மட்டுமே."இன்னார்க்கு இன்னார் என்று படைத்தவனே தீர்மானித்து விட்டால் அதை யாரால் தான் தடுத்து நிறுத்தி விட முடியும்?" என எண்ணிய மது தனது கல்விப் பயணத்தை தொடர்வதாய் முடிவெடுத்தாள்.

பட்டப் படிப்பை முடித்து விட்டு வேலைக்காக காத்திருந்த றமேஷின் மனதில் திடீர் மாற்றம் பிறந்தது. புத்தாண்டு மலர்ந்த முதல் நாள். புது வருட வாழ்த்துக்களை மதுவின் முகம் பார்த்தே கூற விரும்பிய ரமேஷ் கம்பஸ் வகுப்புக்கள் நிறைவடையும் நேரம் மதுவுக்காய் காத்திருந்தான். வகுப்புக்களை முடித்து விட்டு விடுதி நோக்கி சென்று கொண்டிருந்த மதுவை மறித்தான் றமேஷ். "மது. உங்களிடம் முக்கிய விடயம் கதைக்க வேணும்...." எனக் கூறி முடிப்பதற்குள் அவள் முகம் வாடிக் கறுத்துப் போனதை கண்ணுற்றான். "மது ஹெப்பி நியூஸ் தான்... டோன் வொறி..."எனக் கூறிய படியே அருகே இருந்த பூங்காவனத்திற்கு அழைத்துச் சென்றான்.

பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் விரிந்து கிடந்த புற் தரையில் இருவரும் அமர்ந்து கொண்டனர். றமேஷ் பேசத் தொடங்கினான். மது எங்கள் வாழ்க்கை இந்த பூஞ் சோலை போல் இருக்க வேணும். வாடாத மலராக வாழ் நாள் முழுக்க உங்களை நான் பர்க்க வேண்டும்.ஓ.கே...... சோ...."எங்கள் வாழ்வுக்கு பொருள் தேவை" ஒன்று.நாங்கள் அனுபவித்து மகிழ பொருள் தேவை. மற்றது...வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாய் இருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கை. கணவன் மனைவி மனதை வெல்ல வேண்டும். மனைவி கணவன் மனதை வெல்ல வேண்டும். பிள்ளைகள் பெற்ரோரின் மனதை வெல்ல வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனதை வெல்ல வேண்டும்.

இப்படி வாழ்ந்தால் அந்த இல்லம் ஒரு பூந்தோப்பு தான்....என றமேஷ் கதைத்துக் கொண்டே இருக்க குறுக்கிட்ட மது ஓ.கே..ஓ.கே... எனக்கும் அது தான் பிடிக்கும் என்றாள்.

சோ...எனக் கூறியவாறு மதுவின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு ஹெப்பி நியூ இயர் மது... "என்றான். உடனே மதுவும் "சேம் ரூ யூ றமேஷ்.."சொல்லியவாறே பற்றியிருந்த றமேஷின் கரங்களில் ஈர முத்தம் இட்டாள். இன்பத்தின் உச்சிக்கே சென்று விட்ட றமேஷ் மது குட் நியூஸ் என்னென்று நீங்கள் கேட்கவே இல்லையே... நான் நாளைக்கு யு.கே பயணம். நீங்கள் கவனம். அந்த செய்தியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் விழிகள் கலங்கின. ரமேஷ்...இதுக்கா இவ்வளவு கஷ்ரப் பட்டு படித்தீங்கள்.?

எனச் சொல்லிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தாள் மது. சட்டைப் பையில் இருந்த தனது பேனாவை கையில் எடுத்த றமேஷ் மதுவின் கரத்தைப் பிடித்து அவளது உள்ளங் கையில் ஏதோ எழுதினான். கூச்சத்தால் மது துடி துடித்தாள். ஆனாலும் இரு வரிகள் எழுதி முடித்து விட்டு அதனை மதுவிடம் காட்டினான். மிக ஆவலாக பார்த்த அந்த வரிகள் அவள் விழிகளில் இருந்து ஆனந்தக் கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்தது."இழப்பவைகள் எதுவும் பெரிய விடயமல்ல... பெற இருப்பது பெரிதானால்..." அந்த வரிகளால் மௌனமாகிப் போன மதுவைப் பார்த்தான் றமேஷ். மது எங்கோ பார்த்த படியே நின்றாள்.

மது..ஏதோ கனக்க திங் பன்ணுறீங்க போல இருக்கே.. எனக் கூறி மதுவின் மௌனத்தை கலைத்தான் றமேஷ். ஒன்றுமில்லை றமேஷ் எனக்கு உங்களை நினைக்கும் போது ஏதோ எல்லாம் நினைக்கத் தோணுதே... நீங்கள் எனக்கு கிடைத்தால் நான் அதிஷ்ரம் உள்ளவள். அதைத்தான் இப்போ யோசித்தேன். அவ்வளவு தான். அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு...றமேஷை மெல்லக் கிள்ளிய மது..சிணுங்கிய படியே "சொல்ல வந்ததைச் சொல்லுங்கோ..."எனக் கெஞ்சினாள். மதுவை இறுகக் கட்டியணைத்த படியே... "என் இதயத்தில் துடிப்பு உள்ளவரை எனக்கு என் மதுவை மட்டுமே பிடிக்கும். "என்றான். அந்த வார்த்தையில் கரைந்தே போன மதுவிடம் இருந்து றமேஷ் விடை பெற்றுச் சென்றான். விடுதியை நோக்கி மதுவும் விரைந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை. ஆலயம் செல்ல ஆயத்தமானாள் மது. அவ்வேளை தான் அவளின் கைதொலைபேசி ஒலிக்க ஆவலோடு போனை எடுத்தாள்.அது றமேஷ் தான். யு.கே சென்றடைந்த செய்தி அவளை மெய் சிலிர்க்க வைத்தது. உடனே கோயிலுக்குச் சென்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லி விட்டு விடுதிக்கு திரும்பியவள், தனது பரீட்சைக்குரிய விடயங்களைக் கவனிக்கத் தொடங்கினாள். இலண்டனில் கால் வைத்த றமேஷுக்கு உழைப்பு ஒன்றே இலக்காக இருந்தது. இரவு பகல் பாராது உழைத்தான். தான் பிறந்த தாயகத்தில் அழகிய பவனம் ஒன்று உருவானது. அதற்கு "மது பவனம்" என்றே பெயரும் சூட்டினான். றமேஷின் அந்த வீட்டைப் பற்றி பேசாத அயலவர்கள் யாருமே இல்லை. அந்தளவுக்கு அந்த வீடே அவனது உடல் உழைப்பை பறை சாற்றி நின்றது. லண்டன் வாழ்வில் அவனது இரு வருடங்கள் கழிந்தன. கடின உழைப்பில் கண்ணாயிருந்த றமேஷுக்கு "வதிவிட பத்திரம்" கிடைக்காதது தாயகம் செல்வதற்கு பெரும் தடைக் கல்லாயிருந்தது.

அதனையே யோசித்தபடி பஞ்சணையில் படுத்திருந்த றமேஷ் போன் அழைப்பதை உணர்ந்தான். அந்த நேரம் கண்டிப்பாய் அது மதுவின் அழைப்பு என நினைத்துக் கொண்டே போனை எடுத்தான். றமேஷ் ஹலோ... என்றதும் அழத் தொடங்கினாள். நேரமோ இரவு பதினொரு மணியை தாண்டியிருந்தது. மதுவின் அழுகை ஒலியை முதல் தடவையாக கேட்கும் றமேசுக்கு தாங்கும் சக்தியின்றி துடித்தான். என்ன மது? என்ன நடந்தது? பிளீஸ். பிளீஸ்..மது...எனக் கெஞ்சினான். அவளால் பேசவே முடியவில்லை. ரமேஷ்...சொறிடா...என்னால் பேசவே முடியலை. இப்போ உனக்கு ஈ மெயில் போடுறன் பாரடா.எனக் கூறிவிட்டு போனைக் கட் பண்ணினாள் மது. கணனி முன் என்ன செய்தியோ? என்ற ஏக்கத்தோடு காத்திருந்தான் றமேஷ். முப்பது நிமிடங்கள் தாண்டி மதுவின் ஈ மெயில் கிடைத்தது. அவசரமாக அதைப் பார்த்தான். மதுவின் மடல் அது..

என் றமேஷுக்கு......... மாமி மகன் ரகுவிற்கு என்னைத் திருமணம் செய்ய எனது பெற்ரோர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். அப்படியொரு நிகழ்வு என் வாழ்வில் நடக்கவே நடக்காது.ஆனால் எனது காதலை அப்பாவிடம் சொல்லும் தைரியமும் எனக்கு இல்லை. என்ன நடக்கும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும். இது உனக்காய் பிறந்து................. உனக்காய் காத்திருக்கும் மது.

மடலைப் பார்த்த றமேஷுக்கு உலகமே இருண்டது. செய்வதறியது திகைத்துப் போய் நின்ற றமேசின் மனதில் ஏதோ எண்ணங்கள் சிறகடித்துப் பறந்தாலும் அவன் சிந்தனைகள் சிதறிய வண்ணமே இருந்தன. அவன் விழிகளும் மூட மறுத்தன. பொழுது புலர்வதையே எதிர் பார்த்த படி பஞ்சணை மேல் அமர்ந்திருந்தான்.

அவனது அலாரம் ஒலித்த போது,மணி 5.00 ஏ.எம் என்பதைப் புரிந்து கொண்டான். அன்றைய தினம் அவனால் வேலைக்குப் போக முடியவில்லை. ஆண்மைக்கே இலக்கணம் அவனே தான் எனச் சொல்லும் அளவிற்கு வீரனாய் இருந்தவனை காதல் எனும் உணர்வு உடைத்து விட்டதே. இக் காதலுக்கு அடி பணியாத களையர்கள் காசினியில் யார் தான் உண்டு. இந்த விடயத்தில் ஆண்டியை மட்டுமல்ல. அரசனையும் ஆட்டிப் படைத்து விடும் அபூர்வமான உணர்வு தான் அது...

"நரம்புகள் அறுந்த பின்னே வீணையில் நாதம் பிறப்பதெப்படி? தூரிகை கரையும் போது நாம் ஓவியம் தீட்டல் முறையோ? என சிந்தனைகள் ஊற்றெடுத்த அவன் மனதில் எதிர் பார்க்காத திருப்பம் தோன்றிற்று. நிரந்தரமாகவே தாயகம் செல்ல முடிவெடுத்தான். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினான். அவனுக்கு தெரிந்தவர்கள் வதிவிடப் பத்திரம் கிடைக்கும் வரை பொறுத்திருக்குமாறு தடுக்கும் போதெல்லாம் அவர்களுக்கு சொல்லும் ஒரே வார்த்தை இது தான்.... பிளிஸ்...என்னைக் குழப்ப வேண்டாம்."இழப்பது பெரிய விடயமல்ல. பெற இருப்பது பெரிதானால்...." தாயகம் செல்வதை தடுக்க முனைந்தவர்கள் அவனது சிந்தனைக்கு முன்னால் தோற்றுப் போனார்கள்.

பங்குனித் திங்கள் ஆறாம் நாள் தாயகம் செல்வதற்காய் ஹீத்துறு விமான நிலையத்தில் றமேஷ் காத்திருந்தான். அப்போது அவனது கைதொலைபேசி ஒலித்தது. அது மதுவோ? எனும் ஏக்கத்தோடு எடுத்த றமேசுக்கு பேரிடி காத்துக் கிடந்தது. அவனது அம்மாவே தொலை பேசியில் பயந்து பயந்து ஏதோ சொல்லத் துணிந்தாள். என்ன?.. சொல்ல வந்ததை வேளைக்கு சொல்லுங்கோவன். பிளைற் வெளிக்கிடப் போகுது. நேரில் வந்து கதைக்கிறேன் என றமேஷ் கூறும் போது தொலை பேசி அழைப்பும் துண்டிக்கப் பட்டு விட்டது. அதற்குரிய காரணம் அறியும் அளவிற்கு அவனுக்கு நேரம் இருக்கவில்லை. பிளைட்டும் வெளிக்கிட றமேசும் தாயகம் நோக்கி பயணமானான். தாயகத்தின் விமான நிலையத்தில் றமேசின் பெற்ரோர்கள் அவனை அழைத்துச் செல்வதற்காய் காத்து நின்றனர். ஆண் சிங்கம் போல் வந்த றமேசை அம்மா உச்சி மோர்ந்து கட்டியணைத்து முத்தமிட்டாள். அப்போது அம்மாவின் கண்களில் இருந்து காட்டாற்று வெள்ளம் போல் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தக் கணம் அம்மாவின் கண்ணீருக்குள் ஒளிந்து கிடந்த யாராலும் தீர்த்து விட முடியாத வலியினை தப்பாக புரிந்து கொண்டான். அம்மாவின் கண்களைத் துடைத்த படியே... லண்டன் உழைப்பைப் போல தாயகத்திலும் என்னால் உழைக்க முடியுமம்மா. என ஆறுதல் படுத்தினான். அம்மாவும் எதையும் காட்டிக் கொள்ளாமல் சரி என தலை அசைத்து ஆமோதித்த படி சிற்றுந்தில் வீடு நோக்கி பயணமானார்கள்.

சிற்றுந்தும் மது பவனத்தின் முன் வந்து நின்றது. றமேசை வரவேற்க அவனது பழைய நண்பர்கள் அங்கு காத்திருந்தார்கள். அவர்களை அங்கு வரவழைத்தது அம்மாவின் முன்னேற்பாடு என்பதை றமேஷ் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

றமேஷ் தாயகத்தில் கால் வைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவனது மது இவ்வுலகை விட்டே போய் விட்டாள். அதனை அவசரமாக றமேசுக்கு அம்மா தெரியப் படுத்தினாள். என் மதுவுக்கு என்ன நடந்தது எனத் துடித்தெழுந்த றமேசை நண்பர்களால் கூட கட்டுப் படுத்த முடியவில்லை. அவனை அந்தக் கணம் யாராலும் அணுகவே முடியவில்லை. பல மணி நேரம் கழித்து அருகில் சென்ற அம்மாவை கட்டியணைத்து கதறினான். தூளியில் துயில் கொள்ளும் குழந்தையைப் போல் தன் மடியில் றமேசை படுத்தினாள் அம்மா. அப்போது தான் மதுவுக்கு நடந்ததை சொல்லத் தொடங்கினார்கள்.

அன்று ஒரு புதன்கிழமையிருக்கும். ரகுவின் பெற்ரோர்கள் தட்டு மாற்றி சம்மந்தம் கலப்பதற்கு மது வீட்டுக்கு வந்திருந்தார்கள். அன்று தன்னை அலங்கரிக்க விருப்பமின்றி தனது அறைக்குள்ளே இருந்த மதுவை அப்பா கூப்பிட்டார். அப்பாவின் ஒலி கேட்டவுடன் காலடியில் வந்து நின்ற மதுவை வெளிக்கிட்டு வருமாறு கேட்டார். உடனே தலை அசைத்த படி பூவும் பொட்டும் வைத்து பட்டும் உடுத்தி மணப்பெண் கோலத்தில் வெளியே வந்த போது மயக்கமுற்று தரையில் விழுந்தாள். விழுந்தவள் தான் மீண்டும் எழும்பவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போன மதுவின் பெற்ரோர்கள் அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். மது உடனே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டாள். அப்போது தான் "அதிர்ச்சி மரணம்" என்பது யாவருக்கும் தெரிந்தது.

இதனை கேட்டுக் கொண்டிருந்த ரமேஷ், "காதலை வெளியில் சொல்ல முடியாத கோழையாய் பிறந்தாளே..எனக் கதறியவன் கொஞ்ச நேரம் அமைதியாய் கிடந்தான்.

தூண்டிலுக்குள் சிக்கிய மீனைப் போல றமேஷ் மனம் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட அவனது பள்ளி நண்பர்கள், அவனை எப்படியாவது இத் துயரில் இருந்து மீட்டு எடுக்க முயன்றனர். றமேசைப் பார்கின்ற போது... படைத்தவன் வந்தால் கூட இந்த பிரிவுத் துயரில் இருந்து மீட்டெடுப்பது கடினமே..என்பது தெளிவாகவே தெரிந்தது. ஆனாலும் அவனின் நண்பர்கள் அவனை ஆறுதல் படுத்த அதிக பிரயத்தனம் எடுத்தார்கள். அவனோடு சேர்ந்திருந்த நண்பன் ஒருவன்.. இங்கை பார்..ரமேஷ்..! வாழ்க்கை என்பது ஒரு ஏடு போன்றது. அதில் இன்பம் துன்பம் அன்பு கோவம் பிரிவு தவிப்பு சலனம் ஏக்கம் என பல பக்கங்கள் இருக்கத்தான் செய்யுமடா. வாழ்க்கையில் வரும் உறவுகளுக்கு பிரிவே இல்லையென்று யார் சொன்னது? இந்த உலகில் ஜெனனமும் மரணமும் தான் உண்மை. மற்றதெல்லாம் நிரந்தரமற்றவை. என...தொடர்ந்த நண்பனை குறுக்கிட்டு நிறுத்திய றமேஷ் ஆவேசத்துடன் கதைக்கத் தொடங்கினான். இது என் வாழ்க்கையடா...அதை நீ முதல்ல புரிஞ்சு கொள்ளு. மரணம் ஒரு முறை. ஜெனனம் ஒரு முறை.அதே போல் காதலும் ஒரே ஒரு தரம். கிடைத்தவர்க்கு அதுவே வரம். அந்த வரம் எனக்கு கிடைக்கவில்லை. அது தான் உண்மை. எனக் கூறிய றமேசை அருகில் இருந்த மற்றைய நண்பன் கட்டியணைத்த படி ஆரத்தழுவிக் கொண்டு...ரமேஷ்..! கூல்...கூல்..என ஆறுதல் படுத்தினான்.

எம்மை எமக்கே காட்டுவது தான் கண்ணாடி. அதே போல் எம் உள்ளத்தை இந்த உலகுக்கே காட்டுவது எமது பேச்சு. என நினைத்துக் கொண்ட நண்பர்கள் றமேசை மாற்றவே முடியாது என்பதை உணர்ந்தார்கள். அங்கிருந்த நண்பன் ஒருவன் "அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரத்தான் செய்யும்" எனக் கூறியவாறே றமேசை தனியாக அழைத்துச் சென்றான். இருவரும் தமது உள்ளத்து உணர்வுகளை பரிமாறத் தொடங்கினார்கள்.

றமேசின் நண்பர்கள் அவனை எந்தக் கோணத்தில் இழுத்தாலும் அசைவதாய் தெரியவில்லை. நண்பர்களும் தோற்றுப் போனவர்களாய் விடை பெற்றுச் சென்றார்கள். தனித்திருந்து யோசித்த றமேஷ் முடிவொன்று எடுத்தான். தன் உழைப்பில் உருவான இந்த மது பவனத்தை பெற்ரோர்கள் இல்லாத அனாதைச் சிறுவர்கள் இல்லமாய் மாற்றி விட முனைந்தான். தனது பெற்ரோர்க்குப் பின் அனாதை சிறுவர்களுக்கு சொந்தமான இல்லம் என வாசகம் ஒன்று எழுதி அதில் கையொப்பமும் இட்டான். மது பவனம் இருக்கும் நில உயிலையும்' தான் எழுதிய வாசகத்தையும் எடுத்துக் கொண்டு ஒரு அனாதை சிறுவர்கள் வாழும் இல்லம் நோக்கி புறப்பட்டான். 

Comments