நல்லாட்சி அரசின் இலக்கை அடையும் வரை பயணம் தொடரும் | தினகரன் வாரமஞ்சரி

நல்லாட்சி அரசின் இலக்கை அடையும் வரை பயணம் தொடரும்

கே.அசோக்குமார்ராஜா

எந்த நோக்கங்களுக்காக இரு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசை உருவாக்கியதோ அந்த நோக்கங்களை நிறைவேற்றிய பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றிப் பேசப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸநாயக்கா தெரிவித்தார்.

ஊடகங்கள் குறிப்பிடுவது போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அரசிலிருந்து வெளியேறிச் செல்லப்போவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக அரசியலமைப்பு சீர்திருத்தம், தேர்தல் மறுசீரமைப்பு, உள்ளூராட்சி சபை தேர்தல் போன்ற பிரதான விடயங்களை செய்து முடிப்பது நல்லாட்சி அரசின் பிரதான நோக்கங்களாக உள்ளன.

நல்லாட்சி அரசை எவருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக உருவாக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவின் முழுமையான அங்கீகாரத்துடன் தான் ஸ்ரீல.சு.க நல்லாட்சியை இணைந்துகொண்டது.

இணைந்து கொண்டுள்ள அனைவருக்கும் இந்த விடயம் நன்கு தெரியும்.

எந்தெந்த நோக்கங்களுக்காக இணைந்தோமோ அந்த நோக்கங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிவருவதுடன் இறுதிக் கூட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். எனவே இவற்றை நிறைவேற்றிவோம் என மக்களுக்கு வாக்குறுதியும் அளித்திருக்கிறோம்.

எமக்கு இன்னும் காலம் இருக்கிறது. நல்லாட்சி அரசு ஆகஸ்ட் 17ஆம் திகதி உருவாக்கப்பட்டது. எனவே ஆகஸ்ட் மாதம் நெருங்குவதால் சிலர் குழப்பமடைந்துள்ளனர்.

உண்மையில் நல்லாட்சி அரசுக்கு டிசம்பர் வரையில் காலம் இருக்கிறது. அதுவரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், எமது நோக்கங்களையும் பூர்த்தி செய்வதுதான் எமது இலக்காக உள்ளது.

அதன் பின்னர்தான் நல்லாட்சி அரசை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா? இல்லையா? என்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர இப்போது கலவரமடைய வேண்டிய தேவையில்லை.

ஸ்ரீல.சு.க உறுப்பினர்கள் வெளியேறிச் செல்வதாக ஏதேனும் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றதா? என கேட்டபோது

ஊடகங்களில் சிலரது பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் .... போவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் எந்த உண்மையும் கிடையாது. அப்படி ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவும் இல்லை என்றும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

Comments