சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் ஜயசிங்க கைது | தினகரன் வாரமஞ்சரி

சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் ஜயசிங்க கைது

சப் - இன்ஸ்பெக்டர்   ஒருவரும் அரசியல்வாதி  ஒருவரும் கைதாகலாம்

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமாரை தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் முன்னாள் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான லலித் ஏ. ஜயசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு வித்தியாவின் படுகொலைச் சம்பவ தினத்தன்று கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிதரன் என்பவரை, கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் சட்டத்தரணி வி.ரி தமிழ்மாறனின் வேண்டுகோளுக்கமைய விடுதலை செய்துள்ளாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவரது விடுதலைக்கு வெளிநாட்டிலிருந்துள்ள ஒரு ஏஜன்ட் கோடிக்கணக்கான பணத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

சட்டத்துறை விரிவுரையாளரின் தூரத்து உறவினரான சுவிஸ் குமாரை வெள்ளவத்தை பகுதிக்கு கொண்டு சென்றவிடயம் தொடர்பாக நாளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறவுள்ள விளக்கத்தின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றுமொரு அரசியல்வாதி ஒருவரும் கைதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தால் குற்றத்தடுப்பு பிரிவு, பிரதம அதிகாரி நிசாந்த சில்வா 0773201500, றஹீம் (சார்ஜன்) 0778503002 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

தற்போது, வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஏனைய சாட்சியங்களை விசாரிப்பதற்கான அமர்வு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

 

Comments