பொலிதீன் தடை | தினகரன் வாரமஞ்சரி

பொலிதீன் தடை

​ே​பால் வில்சன்

கடந்த புதன்கிழமை அரச அறிவிப்பின்படி பொலித்தீன், லஞ்ச் சீட், பிளாஸ்டிக் பீங்கான், கரண்டிகள், ரெஜிபோர்ம் உணவு பொதியிடும் பெட்டிகள் என்பனவற்றுக்கு செப்டம்பர் முதல் தடை விதிக்க்ப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடனே, மீண்டும் வாழையிலை, டிப்பன்கெரியர், காகித பைகளுக்கு கிராக்கி ஏற்படுமா என்ற கொஞ்சம் மகிழ்ச்சியான கேள்வி எழுந்திருக்கிறது. கடைகளுக்கு செல்லும்போது மீண்டும் துணி பைகளையும் உமல்களையும் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுமானால் மகிழ்ச்சியே.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு பலசரக்குக் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது பேப்பர் தாள்களே பயன்படுத்தப்பட்டன. அதிகமாக பொருட்களை வாங்க வேண்டியிருந்ததால் வீட்டிலிருந்து தூக்குக் கூடை, உமல், துணியினாலான பை கொண்டு போவது வழக்கம். அதேநேரத்தில் உணவாகங்களில் கண்ணாடி, வெள்ளியிரும்பு, ஏனாமல் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அத்துடன் கிராமங்களில் வாழையிலை, தாமரையிலை, வட்டக்கனி இலையும் பயன்பாட்டில் இருந்தது. அத்துடன் உலர் உணவு பொருட்களை காகித பைகளிலும், டிசு தாள்களிலும் சுற்றப்பட்டதுடன், எண்ணெய் தன்மையுடைய உணவு பொருட்களை ஓயில் தாளிலும் சுற்றப்பட்டது. பாணி வகைகள் கண்ணாடி போத்தல்கள், பாக்கு பட்டைகளிலும் பொதியிடப்பட்டே விற்கப்பட்டன. பொதுவாக அக்காலத்தில் உணவகங்களில் உணவு பார்சல்கள் விற்கப்படுவதில்லை.

இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு சூழயே கைகொள்ளப்பட்டு வந்தது. மக்களும் இயற்கையோடு ஒத்துப்போகக் கூடியவர்களாகவும், தெரிந்தும் தெரியாமலும் இயற்கையை நேசிப்பவர்களாகவும் இருந்தனர். மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படகூடாது என்ற உயர் நோக்கம் கொண்ட சமுதாயமும் அன்று காணப்பட்டது.

திறந்த பொருளாதாரத்திற்கு பின்பு, பொலித்தீன், லஞ்ச் சீட், சொப்பிங் பேக் ஒரு பெஷனாக ஆரம்பமானது. இதுவே மக்களின் வசதியாகவும், வியாபாரிகளுக்கு இலாபமாகவும் அமைந்துவிட்டது. காலப்போக்கில் வீட்டுப் பயன்பாட்டிலுள்ள பொருட்களில் பிளாஸ்டிக்கின் ஆக்கிரமிப்பு காணப்பட்டது. உணவு பீங்கான், கரண்டி, தண்ணீர் கோப்பை உட்பட வீட்டு அலங்காரப் பொருட்கள், நாற்காலி உட்பட சகலதும் பிளாஸ்டி மயமாகின.

இந்த பிளாஸ்டி பயன்பாட்டின் அதிகரிப்புக்கு சில காரணங்களும் இருந்தன. விலை குறைவு, பயன்பாட்டுக்கு பின் அதனை அப்புறப்படுத்துவதில் கிரம்மின்மை, இலகுவான நகர்த்தல் என்பன மக்களின் ஈர்ப்புக்கு காரணமாகிறது. இப்படியாக பொலித்தீன், பிளாஸ்டிக் மக்களின் தினசரி வாழ்வில் ஒன்று கலந்து தவிர்க்க முடியாத அரக்கனாக மாறியுள்ளது.

இன்று குப்பை பிரச்சினையிலும் பொலித்தீனும், பிளாஸ்டிக்குமே விஸ்வரூபமெடுத்துள்ளன. பொலித்தீன், பிளாஸ்டிக், ரெஜிப்போர்ம் கழிவுகளை என்ன செய்வது அல்லது பயன்பாட்டுக்கு தேவையற்றவையை எங்கே போடுவது என்ற நிலை உருவாகியுள்ளது. அதுவே மக்களின் பிரச்சினையாகவும் அரசாங்கத்தின் பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது.

இந்த பொலித்தீன் லஞ்ச் சீட், சொப்பிங் பேக் மழைக் காலங்களில் வடிக்கான்களினூடாக சென்று நீர் வடிவதைத் தடுப்பதால்தான் வீதிகள் வெள்ளக்காடாகின்றன.

பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல், யோகட் கோப்பை, சொப்பிங்பேக் ஆகியவை பாவனைக்கு பின் தூக்கி எறியப்படுவதால், அவற்றில் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருக்கெடுக்கின்றன. தெருக்களிலும் கிராமங்களிலும் உலாவும் மிருகங்கள் பொலித்தீனை புசிக்கின்றன. அற்பாயுளில் மரணிக்கின்றன.

சூழல் மாசடைவதற்கு பொலித்தீன் உற்பத்தி பொருட்கள் ஒரு பெருங் காரணம் என்பதை மத்திய சூழல் அதிகார சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த வருடத்தில் 7159.5 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளும் 44038.67 கிலோ இலத்திரோனிக் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அகற்றப்படுவதற்கும் அதிகமான குப்பைகள் சேர்ந்து கொண்டே இருப்பதால் பிரச்சினையும் அனுமார் வால்போல் நீண்டு கொண்டே இருக்கிறது என்பதே இங்கே முக்கியமான விஷயம்.

நாட்டில் நாளாந்தம் ஒன்றரைக்கோடி லஞ்ச் சீட் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், உணவாகங்களில் அல்லது சிலர் லஞ்ச் சீட்டில் உணவு பொதி செய்வதுடன், கறி வகைகளையும் தனித்தனியாக பொலித்தீன் பைகளில் பொதி செய்வதினால் பொலித்தீன் பாவனை அதிகரிக்கின்றது. குறிப்பாக சைவ உணவகங்களில் ஒரு சோற்றுப் பார்சலை வாங்கும்போது சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொலித்தீன் பைகள் உபயோகிக்கப்படுவதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரு சோற்று பார்சலுடன் பல குட்டிச் சாத்தான்களையும் வாங்குகிறோம் என்பதை மறக்க வேண்டாம். பொலித்தீன் 20, 40 மைக்ரோன் அளவுகளில் இருந்தாலும் மக்களின் பாவனை விகிதம் அதிகம் என்றே கூற வேண்டும். இதனை வீட்டு மட்டக்களில் குறைக்க பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

புறக்கோட்டையில் பொலித்தீன் பாவனை பொருட்களை விற்பனை செய்யும் சுதாகரனிடம் பொலித்தீன் தடையை குறித்து வினாவினோம். இந்தக் தடையை தான் வரவேற்பதாக கூறிய அவர், இதற்கான மாற்று ஏற்பாடு தேவைதானே என்ற கேள்வியையும் எழுப்பினார். இத்தொழிலூடாக பல ஆயிரம் பேர் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் பாதிக்கப்படலாம். அத்துடன் கற்பூரம் போன்ற பொருட்களுக்கு பொலித்தீன் கட்டாயம் தேவை. அத்துடன் அரசாங்கம் நீண்ட காலத்திட்டத்தின் கீழ் இவைகளை நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக வெற்றிக்கிட்டும். அத்துடன் விலை அதிகரிப்புடன் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தலாம் என்பது இவரது யோசனை.

சகல சிறுசிறு பொருட்களும் இன்று பொலித்தீன், பிளாஸ்டிக் உறைகளிலேயே பொதியிடப்படுகிறது. பொதியிடும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். அநேகமான பொருட்கள் பொதியிடப்பட்டே சந்தைக்கு வருகின்றன. ஒரு மில்லி கிராம் முதல் ஒரு கிலோ வரை நிறையுள்ள பொருட்கள் பொலித்தீன் பைகளில் பொதியிடப்படுகின்றன.

அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்வுகளில் பிளாஸ்டி, பொலித்தீன் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதை பொதுமக்கள் வரவேற்கின்றனர். அதேநேரத்தில் பொலித்தீன், பிளாஸ்டிக் என்பனவற்றை எரிக்க முடியாது என்பதை பொது மக்கள் வரவேற்றாலும், குப்பைகளை அகற்றவரும் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள் குப்பைக்கூளங்களுக்கு பணம் கேட்பது பொதுமக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இது அரசாங்கத்தின் நற்பெயரை பாதிக்கும் செயலாக காணப்படுகிறது. குப்பை அகற்ற பணம் கேட்கும்போது அரசாங்கத்தைத் தானே மக்கள் திட்டுவார்கள்!

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மனித சரீர ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கிறது. அதாவது போத்தல்களில் அடைக்கப்பட்ட குடித்தண்ணீர் போத்தல்களில் சூரிய ஒளிபடும் போது, போத்தலில் உள்ள இரசாயனங்கள் கசிந்து தண்ணீருடன் கலக்கிறது என்று நீர் முகாமைத்துவவியலாளர் குறிப்பிட்டுள்ளார். லஞ்ச் சீட்டுகளில் சூடாக உணவை வைத்து பொதிபண்ணுதல் அல்லது சூடான தேநீர் மற்றும் கறிவகைகள் பொலித்தீன் பைகளில் பொதியிடப்படும் போது இரசாயன மாற்றங்கள் அங்கே நிகழ்கின்றன. பொலித்தீனிலுள்ள இரசாயனங்கள் கரைந்து உணவுடன் கலந்து உடலினுள் சேர்வதால் குடல் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் என்று ஒரு உயிரியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டில் ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் ஏதோ ஒருவடிவத்தில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை கருத்திற் கொண்டு அரசு 15 வீத செஸ்வரி விதிப்பை வரவேற்றாலும், அரச மட்டத்திலிருந்து பொலித்தீன் பாவனை குறைக்கப்படுவது ஒரு முன்மாதிரியான செயற்பாடாக அமையும் என்பதையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மீள்சுழற்சி பிளாஸ்டிக் பொலித்தீன் பொருட்களுக்கும் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் குப்பைகளில் கொட்டப்படும் பொலித்தீன், பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கு உள்வாங்குவதால், எதிர்காலத்தில் பொலித்தீன் இறக்குமதி குறைவடையலாம். கழிவு பொலித்தீன், பிளாஸ்டிக்கை பணமாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு அரசு ஊக்குவிக்க வேண்டும்.

நாதன் என்பவர் ஒரு விஷயத்தை எம்மிடம் தெரிவித்தார். அரசாங்கம் மீண்டும் வீட்டுக் கைத்தொழிலாகிய காகிதங்களில் பேக் செய்தல், பனை ஓலையிலான உமல், பிரம்பினான தூக்குக் கூடை, துணிகளினால் தூக்கு பை உற்பத்திக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டும். பனை ஓலையிலான உமலும் பிரம்பினான தூக்குக் கூடை இன்று காட்சியகங்களில் காட்சிப் பொருளாகவே காட்சிப்படுத்தப்பட்டாலும் அவை வீட்டுப் பாவனைக்காக மாறும் போது சொப்பிங் பேர்க் கலாசாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்கலாம். அத்துடன் கடலை உட்பட சிறுபொருட்களை காகித பைகளில் கொடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

அரசாங்கம் கிராமிய பொருளாதாரத்தை வளப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதோடு ஓரளவு வருமானத்தையும் சாதாரண மக்களின் திரட்ட முடியும் என்பதோடு புதிய தொழில் வாய்ப்புக்களும் உருவாகும் என்ற சாதகமான ஒரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதேநேரத்தில் பொலித்தீனால் ஏற்படும் தீமைகள், பாதகங்கள் குறித்த விழிப்புணரவு நிகழ்வுகளை அரச மட்டத்தில் நடத்தி, பொலித்தீன் பாவனையை முழுமையாக்க் கட்டுப்படுத்த அரசாங்கம் தூரநோக்குடன் செயல்முறை திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

நமது மண் ஏற்கனவே நிறையவே பாழ்ப்பட்டுப் போய்விட்டது. எங்கே ஒரு அடி குழி தோண்டினாலும் பிளாஸ்டிக், பொலித்தீன் உருப்படிகள்தான் தலைகாட்டுகின்றன. நமது மண் மேலும் மேலும் சேதமடையாமல் காக்கப்பட வேண்டுமானால் இந்த தடையை முழுமையாக மக்கள் முன்வந்து அமுல் செய்ய வேண்டும்.

Comments