மீண்டும் வருவாரா நரேந்திர ேமாடி?...! | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் வருவாரா நரேந்திர ேமாடி?...!

டி.வி.குமார் 

தேயிலைத் தோட்டங்கள் உரியமுறையில் பராமரிக்கப்படாமையால் அவை காடுகளாக மாறி வருகின்றன. தொழிலாளர்கள் மலைகளில் வேலை செய்யும்போது அட்டைக்கடி, குளவிக்கொட்டு, விஷப்பூச்சிகளின் கடிகளுக்கும் சிறுத்தை, காட்டுப்பன்றி, பாம்பு போன்ற உயிரினங்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் போராடியே ஓரு நாள் சம்பளத்தை பெறவேண்டிய நிலையில் உள்ளனர்.

அண்மைக்காலமாக குளவிக்கூடுகளின் பெருக்கத்தால் அச்சத்தின் மத்தியிலேயே வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் வேலைநாள் குறைக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மலையகத்தில் வருடத்திற்கு வருடம் புதிய தொழிற்சங்கங்கள் உருவாகின்றனவே தவிர தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்த பாடில்லை.

இப்பொழுது தோட்டங்களில் பல தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதை நாள்தோறும் ஊடகங்கள் மூலம் அறியமுடிகிறது. அண்மையில் கலஹா பகுதியைச் சேர்ந்த தோட்டமொன்றில் வயோதிபர் ஒருவரின் மரண ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிச்சத்தத்தில் மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து குளவிகள் கொட்ட ஆரம்பித்ததால் அனைவரும் சடலத்தை கைவிட்டு பாதுகாப்புத்தேடி ஓடிய சம்பவம் குறித்த செய்தி வெளியாகியிருந்தது.

இதனையடுத்து பல மணிநேரத்திற்குப் பின் இளைஞர்கள் தீப்பந்தங்கள் கொளுத்திக்கொண்டு மயானத்திற்குச் சென்று சடலத்தை அடக்கம் செய்தனர். இப்படி பல சம்பவங்கள் மலையகத்தில் அன்றாடம் இடம்பெறுகின்றன. இந்தக் குளவிப் பிரச்சினை தோட்ட நிர்வாகங்களோ, தொழிலாளர்களைச் சார்ந்துள்ள தொழிற்சங்கங்களோ கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களைக் கொண்டு எப்படியாவது வேலையை வாங்கி இலாபத்தை பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறதே தவிர குளவிக் கூடுகளை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மக்கள் செறிந்து வாழும் நோர்வூட் பகுதிக்கு வருகை தருவதற்கு முன்பதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்ட வேளையில், அவர் செல்லும் இடங்களை அண்டிய பகுதிகளிலிருந்த குளவிக்கூடுகள் தொழில்நுட்ப முறையில் அகற்றப்பட்டன. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த மலையக பெருந்தோட்டப்பகுதி இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டால் அவர்களால் இந்த குளவிக்கூடுகளை அகற்றித் தொழிலாளர்கள் அச்சமின்றி தமது தொழில்களில் ஈடுபடக்கூடியதாக இருக்கும்.

Comments