ஞாயிறு கதை | தினகரன் வாரமஞ்சரி

ஞாயிறு கதை

வே.புவனேஸ்வரன்   
மட்டக்களப்பு   

வழமைக்கு மாறாக மிகுந்த மகிழ்ச்சியுடன் காரியாலயம் சென்றிருந்த மூத்த முகாமைத்துவ அலுவலர் ராஜபக்தன் முற்பகல் பத்து மணியளவில் பதற்றமடைந்தவராய் ஒரு குறுகிய காலவிடுமுறையைப் பெற்றுக்கொண்டு காரியாலயத்தைவிட்டு வெறியேற ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

“இவன் சிவாவைக் காணவில்லை எங்க தான் போய்த் தொலைந்தானோ தெரியவில்லையே” என்று ஒரு மந்திரவாதி மந்திரம் உச்சாடனம் செய்வது போல் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நிமிடமே அவர் காணவில்லையே என்று தேடிய ‘சிவா' என சுருக்கமாக அழைக்கப்படும் அவரது சிற்றூழியரான சிவகடாட்சம் ஓடோடி வந்து அவர் முன் மண்டியிட்டு நிற்கிறான்.

அவனைக் கண்ணுற்ற ராஜபக்தன் ‘சிவா’ எனது அறையை ஒழுங்கு பண்ணி மேசையில் பரவிக் கிடக்கும் கோப்புக்களையும் மற்றும் ஆவணங்களையும் அலுமாரியில் அடுக்கி வைத்துவிட்டு அறையைப் பூட்டித் திறப்பைத் தா...” எனக் கட்டளையிடுகிறார்.

அவனும் எஜமானின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு. வளர்த்த செல்லப்பிராணியான நாய்க்குட்டி வாலை ஆட்டுவது போல் சாஷ்டாங்கமாகப் பாவனைசெய்து கொண்டு அவர் ஆணையிட்ட அலுவல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான். அவைகளை நிறைவேற்றிவிட்டுக் கதவைப் பூட்டித் திறப்புக் கோர்வையை அவரிடம் கையளித்துவிட்டு தலைதாழ்த்தி நிற்கிறான்.

அவர் கவலைதோய்ந்த முகத்துடன் திறப்புக் கோர்வையைப் பெற்றுக்கொண்டு நின்ற இடத்துக்கும் விசளம் சொல்லாமல் திரும்பிக்கூடப் பார்க்காமல் காரியாலயத்தை விட்டு வெளியேறி வீதிக்குச் சென்றுவிட்டார்.

பட்டமடிக்கப்பட்ட குதிரையைப் போல் வேறெங்கும் பராக்குப்பாராமல் அவரது நடவடிக்கைகளையே பார்த்துக் கொண்டிருந்த சிவா தனக்குள்ளேயே “ஐயாவுக்கு என்ன நடந்தது...? ஒரு நாளுமில்லாதவாறு யாதாலவொன்றும் பேசாமல் பறையாமல் அவர் பாட்டுல போறார்...” தனக்குள்ளே தான் நினைத்துக் கொண்டு அமைதியாய் எதையோ யோசிக்கிறான்.

அவ்வாறு அங்கலாய்த்தவன் மறுகணமே ராஜபக்தனுக்கு காலையிலே எதிர்பாராதவிதமாக நேர்ந்த ஏமாற்றத்தை மீட்டிப் பார்த்துவனாய் “ஓகோ... ஐயா... மூன்றாம் முறையும் சேவை நீடிப்புப் பெறுவதற்காக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததையும், அதனை உதவி ஆணையாளர் சிபார்சு செய்து பரிந்துரைக்க மறுத்ததையும், அதனால் அவர் மனமுடைந்து போனதையும் நினைத்துக் கொள்கிறான்.

நடந்து கொண்டே பிரதான வீதிக்கு வந்துவிட்ட ராஜபக்தன், தன் வீட்டுப் பக்கம் திரும்பாமல் கால்போன போக்கில் நடமாடித் தள்ளாடியபடி இறுதியில் கடற்கரை வீதிக்குச் செல்பவர் போல் முன்னே செல்கிறார்.

“மரம் சாய்ந்தது போனால் விறகாகலாம், மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்” என்ற திரைப்படப் பாடலின் தத்துவத்திற்கேற்ப அவரது மனம் மாசடைந்து போனதால் அவர் போகுமிடத்தை முன்னுணரப் புத்தியற்ற நிலையில் போக்கிடத்தைத் தீர்மானிக்க முடியாமல் கால்நடைகளைப் போல் தொடர்ந்து கால்நடையாகவே போய்க் கொண்டிருக்கிறார். என்றாலும் அவர் கடற்கரையையே நாடிச் செல்வது போல் ஊகிக்க முடிகிறது.

அப்போது தன் முன்னால் “கடலே... கடலே...” என்று கூறிக் கூவிக் கடலை விற்பனை செய்யும் சிறுவனைக் கண்டதும், “ஒரு சுருள் தா...” என்று வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, அக்கடலைச் சுருளைப் பிரித்தபடியே விரைகிறார்.

அவ்வேளை கிறீச்... கிறீச்... கிறீச்... என்றவாறு சடுதியான அதிர்ச்சியான ஒரு சத்தம் தன் செவிப்பாறைகளைச் செவிடு படுமளவிற்குத் தாக்குவதை உணர்ந்து திடுக்கிட்ட அவர், நின்று நிதானித்து நிமிர்ந்து பார்க்கிறார். ஏறத்தாழ அவரை உரசியபடி அவரின் முன்னால் ஒரு புத்தம் புதிய மோட்டார் பைக் முற்றிய வெண்திங்களாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அவ்வாகனம் ‘சடான் பிறேக்’ போட்டு உடனடியாக நிறுத்தப்பட்டதாலேயே அதில் மோதுண்டு, சேதாரமாகிப் போக வேண்டிய பயங்கர விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினேன் என்பதை உணர்ந்தவராகவோ, உணராதவராகவோ தெரியவில்லை... தொடர்ந்து நடக்க முயற்சிக்கின்றார்.

அவர் நழுவுவதை அவதானித்த அப்பைக்கில் பயணித்தவரும், அதன் சாரதியுமான ஒரு வாட்டசாட்டமான இளைஞன் தலையில் போட்டிருந்த ஹெல்மெட்டைக் கழற்றியபடி, “ஐயா... ஐயா... பெரிசி... என்ன... வீட்டில சொல்லிற்றா வந்தது...? ஒரு கொஞ்சம்... நானும் பராக்குப் பார்த்துக் கொண்டு அலட்சியமாய் ஓடி வந்திருந்தால் அநியாயமாய்... அடிபட்டிருப்பீங்க... இனிமேலென்றாலும் பாதையைப் பார்த்துப் போங்கய்யா...” எனப் புத்திமதியோடு கூடிய தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டுத் தனது பைக்கை ஸ்ராட் பண்ணிக் கொண்டு செல்கிறார்.

சொற்ப நிமிடங்களில் கடற்கரையை அடைந்துவிட்ட ராஜபக்தன், அங்கு விசாலமாய், விலாசமாய் நாலாபுறங்களிலும கிளை பரப்பிக் கவர்ச்சியாய்க் குடை விரித்தாற்போல் வளர்ந்திருந்த ஓர் அழகிய வேப்பமரத்தின் கீழ் அமர்கிறார்.

தான் ஏற்கெனவே வாங்கிக் கொண்டு வந்திருந்த கடலைப் பொதியைத் தன் இடது உள்ளங்கையில் கொட்டி அவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் போட்டு கொறித்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு கடலையை வாயில் போட்டு அசைபோட்டு ருசித்தவாறு தன் முன்னால் ஓவென இரைந்து சீறிக் கொண்டிருக்கும் கடலையே வெளித்தபடி கப்பல் தாண்டவன் கணக்காய் கனமாகச் சிந்தனை வயப்பட்டவராய்க் காணப்படுகிறார்.

அவ்வாறு இனம் புரியாதவொரு அக்கறையோடு சிந்தித்துக் கொண்டிருக்கும் அவரது கவனத்தை அவர் முன்னால் கடற்றொழிலாளர் தமது மீன்பிடியை முடித்துக் கொண்டு கரையேறி வள்ளத்தைப் பாதுகாப்பாக கரையில் இழுத்து வைத்துக்விட்டு வியர்வையில் தோய்ந்த தமது தேகத்துடனும், சுமையில் தேய்ந்த தோள்களுடனும் நிரையாய்ச் செல்லும் கண்கொள்ளாக் காட்சி கலைத்து விடுகின்றது. அன்று காலையில் அலுவலகத்தில் அவரது சேவைக் காலத்தில் எப்போதுமே ஏற்பட்டிராத ஏமாற்றமே அவரது சிந்தனையில் நிழலாடியது.

* * *

ராஜபக்தன் அரச பொது எழுதுவினைஞர் சேவைக்கு ஆட்களைத் தெரிவு செய்வதற்கான அகில இலங்கைப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றித் தெரிவு செய்யப்பட்டவர். வள்ளிசாக முப்பது வருடகால அரச சேவை அனுபவத்தைக் கொண்ட அவர் எத்தனையோ போராட்டங்களுக்கும், கழுத்தறுப்புக்களுக்கும் முகங்கொடுத்து ஜெயித்த பின்பே, பல்வேறு பதவியுயர்வுகளைப் பெற்றுத் தற்போது மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவருக்குத் தாடி மீைச நரைத்த போதிலும், பதவி ஆசை நரைத்ததாகத் தெரியவில்லை. அரச சேவையாளர் ஓய்வுபெறும் வயதை அவர் தாண்டிவிட்ட போதிலும், கடந்த இரண்டு வருடங்களாகச் சேவை நீடிப்புப் பெற்றுக் கடமையாற்றிக் கொண்டமிருக்கிறார். பதவி, பதவி என்று அலையும் அவர் கடந்த இரு வருடங்களிலும் தனது உயர் அதிகாரிகளின் கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சி மன்றாடி மற்றும் காசி, பணம், துட்டு, மணி போன்ற பலவித தந்திரோபாயங்களையும் பாவித்து முதலாம், இரண்டாம் சேவைக்கால நீடிப்புக்களையும் பெற்றுச் செல்வாக்காக வாழ்வாங்கு வாழ்பவர். தற்போது அவர் அறுபத்து மூன்றாவது அகவையில் அகலக்கால் பதித்து நிற்கின்றார் என்று அவருடைய வயதுச் சான்றிதழ் ஆவணம் ருதப்படுத்திய போதிலும், அவரை நேரடியாகப் பார்ப்போர் அவரது தேகவாகினைச் சாட்சியாக வைத்து அவரோடு வருத்தப்படாத வாலிபர் என்றே கணிப்பர்.

ஆனாலுமென்ன...? இவ்வளவு நீண்ட கால அரச சேவையைக் கடந்திருந்த போதிலும் கூட அவரை அக்காரியாலய சக ஊழியர்களும், ஊர் மக்களும் ஒரு பந்தக்காரன் ஊழல் பேர்வழி, நாணயமற்றவன், கள்ளன் மற்றும் இன்னோரன்ன பட்டங்களையும் சொல்லி அவமதிப்பதோடு பாவப் பணத்தைச் சம்பாதித்து வைத்திருப்பவன் என்றும் திட்டித் தீர்ப்பது வழக்கம்.

இவ்வாறு ஒரு சிரேஷ்ட நிலையிலுள்ள உத்தியோகத்தரான ராஜபக்தனை சகலரும் தீவிரமாகத் திட்டித் தீர்த்து வெறுத்தொதுக்குவதற்கு நியாயமான காரணங்கள் காணப்பட்டன. அச்சொட்டான பச்சை, பச்சையான சான்றாதாரங்களும் வெளிக்கிளம்பின.

முன்னர் நிகழ்ந்த சுனாமிப் பேரலையினாலும், கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, புயல்காற்று மற்றும் போர்க் கொடுமையினாலும் தமது உற்றார், உறவினர்களைப் பலிகொடுத்து அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் வடித்து அகதிகளாகிய அப்பாவி அகதிகளிடையே விநியோகிக்கப்பட்ட பண்டமற்றும் பண விதிமுறைகளை ஊழலும் லஞ்சமும் ஊடுருவுமளவிற்குப் பலவீனமாக வடிவமைத்தவர்தான் இந்த ராஜபக்தன். இதனால் இடைத்தரகர்கள் மேற்படி புனர்நிர்மாண அனர்த்த முகாமைத்துவச் செயற்திட்டங்களுக்குள் புகுந்து தமது கைவரிசையைக் காட்டியதால் அதன் பயனாளிகளான பாதிக்கப்பட்ட மக்கள் அவருக்கெதிராகக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிகளை பல சந்தர்ப்பங்களில் நடத்தியிருந்தனர்.

இவ் அனர்த்த முகாமைத்துவத் திணைக்கள நிவாரணத்திலே தனது இலஞ்ச நடவடிக்கைகளாலும், ஊழல் செயற்பாடுகளாலும் களவாடிய பணத்தில் பென்னம் பெரியதொரு மாடிமனையை நிர்மாணித்துச் சாதாரண பரீட்சையில் கூடச் சித்தியடையாத தன் மூத்த மகளுக்குப் பாரியதொரு தொகைப் பணமும் சீதனமாகக் கொடுத்து ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டருக்குக் கலியாணம் செய்து வைத்திருக்கிறார்.

மேலும் சாதாரண தரப் பரீட்சையில் அரைகுறை வேக்காட்டில் சித்தியடைந்திருந்த தன் மகனை ஒரு கோடிப் பணம் செலுத்தி ரஷ்யாவிலிருந்து பிரிந்த உக்ரெய்னுக்கு வைத்தியப் படிப்பெனும் எம்.டி பட்டம் பெற அனுப்பி வைத்திருக்கிறார்.

இவை மட்டுமல்ல தன் மனைவியின் பெயரில் சொகுசு கல்யாண மண்டபமொன்றையும் நிர்மாணித்து வாடகைக்கு விட்டிருக்கின்றார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஒரு லொறி கையேஸ்வான், கையுண்டாக் கார் போன்ற அசையும் சொத்துக்களையும் கொள்வனவு செய்து குவித்து அவற்றை உற்றார், உறவினர் பெயர்களில் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.

இவ்வாறெல்லாம் ஊழல்களைச் செய்திருக்கும் ராஜபக்தன் எவ்வித கூச்சமோ, வெட்கமோ, மனச்சாட்சியோ அற்றவராய் அன்று காலை வழமைபோல் காரியாலயத்திற்கு வருகை தந்தவுடன் வரவுப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு உதவி ஆணையாளரின் அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கின்றார்.

அவ்வாறு உள்ளே சென்றவர் தனது மூன்றாம் முறைச் சேவை நீடிப்புக்கான விண்ணப்பம் இரு வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதற்கு என்ன நடந்ததென்று உதவி ஆணையாளரிடம் வினாவியிருக்கின்றார்.

இவ்வாறு மூன்றாம் முறையும் சேவை நீடிப்புக் கேட்கும் ராஜபக்தனைக் கண்ட உதவி ஆணையாளர் மைத்திரிபாலன் அடக்க முடியாத கோபாக்கனல் கண்களிலிருந்து தீப்பொறியாக வெளியேற அவரை அலட்சியமமாகப் பார்த்திருக்கின்றார்.

உதவி ஆணையாளரின் அவ்வித்தியாசமான பார்வைக்குள்ளே எண்ணிடவியலாத புதிர்களும் ஐயங்களும் ஒளிந்து கிடந்தன. அவரது கண்களிலிருந்து வெளிப்பட்டுத்தன் கண்களைக் கூசச் செய்து மழுங்கடிக்கும் அகோரக் கோபாக்கினியைச் சகிக்க முடயாத ராஜபக்தன் சிரம் தாழ்த்திக் கரங்களைக் கட்டி நெஞ்சோடு அழுத்தியபடி, ஆடாமல் அசையாமல் சிலையாக உருவெடுத்து நின்றிருந்தார்.

“ஐ சே... ராஜபக்தன்... உம்மீது ஏகப்பட்ட கணக்காய்வு ஐயா வினாக்கள் தொடுக்கப்பட்டு நிலுவையாயிருக்கின்ற போதிலும் கூட பிள்ளை குட்டிக்காரன் என்ற ஒரே தோரணையில் என்னதென்று புரியாமல் கருணை மனுவாக மாத்திரமே முதலாம் மற்றும் இரண்டாம் சேவை நீடிப்புக்கள் என்னால் சாதகமாகப் பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால்... நீங்க என்னடா எண்டால்... மூன்றாம் முறையும் சேவை நீடிப்புக் கேக்கிறீங்க. இது நியாயமான கோரிக்கையா...? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா...? நீங்களே ஒரு முறைக்கு மூன்று முறை தீர யோசித்துப் பாருங்க... உங்களுக்கே நன்றாகப் புரியும்... நீங்கள் ஒரு மூத்த அரச சேவையாளர் அல்லவா...? இளைப்பாறும் போது எந்த விதமான மாசு மாறுவுமின்றி சோலிசுரட்டுமின்றி நிம்மதியாக வீடு செல்லவேண்டும். ஆசையும் மனிதனுக்கு அளவாக இருக்க வேண்டும். எதுவும் அளவுக்கதிகமாகிப் போனால் பேராசை பிடித்த பேயாய் மாறிப் பேரிடரில் விழ வேண்டியேற்படும். உங்களுக்கு மூன்றாம் முறையும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டால் அது உங்களை மேலும் மேலும் ஊழல் செய்வதற்கு ஊக்குவிப்பதாயமையும். அதிகாரம் மனிதனை ஊழல்வாதியாக்கும். அதையே ஆங்கிலத்தில் அழகாக Power Corrupts the people என்ற பழமொழியை ஒரு முறையேனும் உங்களுக்குள்ளே உச்சரித்துப் பாருங்கள்...” இவ்வாறு மைத்திரிபாலன் தான் பெற்ற பிள்ளைக்குப் பக்குவமாய்ப் புத்தி புகட்டுவது போல் ஒரு சிற்றுரையே நிகழ்த்தி ஓய்ந்தார்.

இவற்றையெல்லாம் ஆதியோடந்தமாய் தலைகுனிந்த குனியாய் நின்றவாறே ஒரு காதால் உள்வாங்கி மறுகாதால் வெளியே காற்றோட காற்றாய் வெளிவிட்ட ராஜபக்தன், சடாரென அவரின் கால்களில் விழுந்து அவற்றைப் பற்றிக் கொண்டு பலவாறாக புலம்பத் தொடங்கினார். “ஐயா ஆணையாளரே இம்முறை மட்டும், அனுமதித்துச் சிபார்சு செய்யுங்கள்... அடுத்த வருடம் கேட்க மாட்டேன். இளைபாறிச் சென்றுவிடுவேன்...” என்று தலையிலும் உடலிலும் அடித்துக் கொண்டு கெஞ்சுகிறார்... மன்றாடுகிறார்...

“காலை விடு... காலை விடு.... யாரும், யார் காலிலும் விழக் கூடாது. இன்று காலில் விழுந்து வணங்குகிறாய்... நாளை காலையே வாரிவிடவாய். உன்னைப் போல் எத்தனை கில்லாடிகளை நானும் கண்டிருக்கிறேன்... கேள்விப்பட்டிருக்கிறேன். எழும்பு... எழும்பு.... போய் வேலையைப் பார். இனினும் மீதியுள்ள சொற்ப காலத்தில் ஒழுங்காய் கடமை செய்யப்பார்.

“ஐயா... ஐயா... அப்படியெல்லாம் சொல்லாதங்கையா... உங்க புள்ள குட்டிகளுக்குப் புண்ணியமாய்ப் போகும்.”

“நீ... என்ன சொன்னாலும் நான் உன் மூன்றாவது சேவை நீடிப்புக்குச் சாதகமாய்ச் சிபார்சு செய்யவேமாட்டேன். உன்னிடம் பல்வேறு பாரதூரமான கணக்காய்வு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் உனக்கு மிக மிகச் சவாலாகவே இருக்கும் என நினைக்கின்றேன். அவற்றுக்கெல்லாம் நீங்க கொடுத்த விளக்கங்கள் ஓடிட்டர் ஜெனரலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவை தற்போது பாராளுமன்றக் கணக்குக் குழுவுக்கு மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அலங்கோலத்தில் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதும் கூட சந்தேகமே... ஆனால் நீங்க, மூன்றாம் முறையும் சேவை நீடிப்புக் கேட்கிறீங்க....”

உதவி ஆணையாளரின் காலைப் பற்றிக் கொண்டு கிடந்த ராஜபக்தன் இவைகளைக் கேட்டவுடன், தன் புருடா மூன்றாம் முறையும் பலிக்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டவனாய், வாலைச் சுருட்டிய நாயாய் எழுந்து நின்று, “சரி... சேர் என்னுடைய விண்ணப்பத்தைத் தாருங்கள்” என்றான்.

உடனடியாகவே அவ்விண்ணப்பத்தின் மறுப்பக்கத்தில் “இவருடைய மூன்றாம் முறைச் சேவை நீடிப்புச் சிபார்சு செய்யப்படவில்லை என்ற குறிப்புக்களைக் கொட்டை எழுத்துக்களில் பொறித்து அவரிடம் வழங்குகிறார் உதவி ஆணையாளர்.

அதனைப் பெற்றுக்கொண்ட ராஜபக்தன் வெறுப்போடு காரியாலயத்தை விட்டு வெளியேறுகிறார்.

* * *

அன்று காலை காரியாலயத்தில் தனக்கு நேர்ந்த சோக நிகழ்வை ஒரு கெட்ட கனவு காண்பது போல் மீட்டுக் கொண்டிருந்த ராஜபக்தன் “ஐயா... ஐயா... இந்த மழைக்கால இருட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீங்க... இப்ப நேரம் என்ன என்று தெரியுமா ஐயா...? பொழுதுபட்டு ஆறரை மணியாகிவிட்டது... உங்களை நான் தேடாத இடமில்லை... கடைசியாக இங்க வந்திருக்கிறன்... ஐயா உங்களுக்கொரு கடிதம் வந்திருக்கையா... இந்தாங்கய்யா.... என்றவாறு கடிதத்தைக் கொடுக்கிறான் சிவா. பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டிருந்த அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ராஜபக்தன் அதனைப் பிரித்துப் படிக்கிறார்.

கணக்காய்வாளர் இலாகா,

கொழும்பு.

திரு. ராஜபக்தன்,

மூத்த முகாமைத்துவ அலுவலர்,

அனர்த்த முகாமைத்துவ அலுவலகம்.

அன்புடையீர்,

சேவை இடைநிறுத்த அறிவித்தல்

உங்களுக்கெதிராகத் தெரிவிக்கப்பட்ட கணக்காய்வு ஐய வினாக்களுக்கு நீங்கள் வழங்கிய விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் எண்ணம் நீங்கள் உடன் செயற்படுமாறு சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகிறீர்கள்.

ஒப்பம் : கணக்காய்வாளர்

தலைமையதிபதி. 

Comments