புலமையாளர்கள் நாட்டை விட்டு ​வெளியேறுவதனைத் தடுக்க உரிய பொறிமுறைகள் இல்லை | தினகரன் வாரமஞ்சரி

புலமையாளர்கள் நாட்டை விட்டு ​வெளியேறுவதனைத் தடுக்க உரிய பொறிமுறைகள் இல்லை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரை (21.05.2017)

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் உங்கள் அனைவரையும் சந்திப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமும் தோல் சுகாதார பீடமும் மிகவும் முக்கியமானவை..

எமது நாட்டில் உயர்தரத்தில் சித்தியடைந்த சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப் பெறுகின்றனர். அவர்களிடையே இருபத்தி ஐயாயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். அவர்களுள் ஆயிரத்து ஐநூறு மாணவர்கள் மாத்திரமே மருத்துவ பீடத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனவே மருத்துவ பட்டதாரிகளையும் கல்விமான்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரையும் உருவாக்குவதற்காக எமக்கு இத்தகைய போதனா வைத்தியசாலைகள் அவசியமாகும்.

சுகாதாரத்துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எமது வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்கள் ஆலோசனை மருத்துவர்கள் ஆகியோருக்கான 50 சதவீத பற்றாக்குறை காணப்படுகின்றது. இணை மருத்துவ பிரிவுகள், தாதியர் சேவை என்பவற்றிலும் மிகப் பாரிய பற்றாக்குறை உள்ளது. தாதியர் சேவையில் தற்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தாதியர் சேவையில் இன்று பத்தாயிரம் பேர் இணைக்கப்பட்டால் மிக வினைத்திறனான முறையில் சேவைகளை வழங்க முடியும். அத்துடன் பயிற்சிகளின் ஊடாக விசேட துறைகளையும் முறைப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. இணை மருத்துவ சேவைகளிலும் இதே நிலைமையே காணப்படுகிறது. கொழும்பை மையமாகக்கொண்ட மேல் மாகாண பிரதேசங்களிலும் தாதியர் மற்றும் இணை மருத்துவ சேவை என்பவற்றில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை காணப்படாவிட்டாலும் இலங்கையின் மேல் மாகாணத்தை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பல சிக்கல்கள் உள்ளன. அதனால் எமக்கு வைத்தியர்களும் தாதியர்களும் இணை மருத்துவ சேவையிரும் அதிகமாகவே தேவை. நாட்டில் ஒவ்வொரு துறைக்கும் போதுமானளவு ஊழியர்கள் இருந்தால் மீதமாகவுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று சேவையாற்றலாம்.

நான் சுகாதார அமைச்சராக கடமை புரிந்த ஐந்து வருட காலத்தில் இராணுவ கப்பற்படை, விமானப்படை என்பவற்றில் சேவை புரிந்த மருத்துவ தாதியா மற்றும் மருத்துவ துறையினரின் இடமாற்றங்கள் சேவைகளிலிருந்து விடுபடல் முப்படையினருக்கு தேவையான வைத்தியர்களையும் தாதியர்களையும் தேவையான சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக பல பிரச்சினைகள் காணப்பட்டன. முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக எமது இராணுவத்தினருக்கு தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கும் சுகாதாரத்துறையின் சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இருந்த குறைபாடுகள் மற்றும் மனிதவளங்கள் பெளதீக வளங்களில் காணப்பட்ட குறைபாடு எவ்வளவு என நான் அறிவேன். அத்தகைய சந்தர்ப்பங்களில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாத வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய மருத்துவ மற்றும் தாதியர் சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் சேவையாற்றி யுத்தப் பிரதேசங்களுக்கு சென்று சேவை ஆற்றியதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு அதிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் யார் என்று எம்மிடம் கேட்டால் இராணுவத்தினரே அதிக உயிர்த்தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் செய்தனர் என நாம் தயக்கம் இன்றி கூறுவோம். இரண்டாவதாக அந்த இராணுவத்தினருக்காக வைத்திய துறையில் சேவையாற்றிய மருத்துவர்கள் தாதிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்த அனைத்து துறைகளையும் வலுப்படுத்துதல் மிக முக்கியமாகும்.

நான் கடந்த வாரம் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தினத்தில் சில விடயங்களை குறிப்பிட்டேன். எமது சுகாதார சேவைகள் மருத்துவ கல்வித்துறை என்பவற்றை நோக்குமிடத்து நாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் உள்ளன. எமது பல்கலைக்கழகங்களில் எமது நாட்டு மாணவர்களை போன்று வெளிநாட்டு மாணவர்களும் உள்ளனர். அதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உலகில் பல்வேறு நாடுகளில் நாட்டுக்கு தேவையான தொழில்துறையினர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சட்ட ரீதியான எல்லைகள் உள்ளன. நாட்டில் அறுபதாயிரம் மருத்துவர்கள் காணப்படுகிறார்கள் எனில் அவர்களுள் ஐம்பதாயிரம் மருத்துவர்களே நாட்டில் சேவை புரிய போதுமாயின் பத்தாயிரம் பேருக்கு மாத்திரமே வெளிநாடு செல்ல முடியும். அவ்வாறு பொறியியலாளர்களுக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். ஏனையவர்களுக்கு அவ்வாறு செல்ல முடியாது. எமது நாட்டிலேயே எல்லையற்ற கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் எந்தவொரு கட்டுப்பாடுகளுமின்றி பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறியவுடனேயே நியமனம் வழங்கும்போதே 50, 60 பேர் வெளிநாட்டுக்கு சென்றுவிடுகின்றனர்.

விசேட மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதே பிரதான காரணமாகும். தாதியர் சேவையிலும் அவ்வாறே.. வருடாந்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் மருத்துவர்களினதும் தாதியர்களினதும் எண்ணிக்கை அதிகரிப்பதே மருத்துவ சேவையிலும் தாதியர் சேவையிலும் வெற்றிடங்கள் காணப்படுவதற்கு காரணமாகும். வருடாந்தம் ஓய்வுபெறும் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் காரணமாகவே பற்றாக்குறை ஏற்படுகின்றது.

நாளுக்கு நாள் சனத்தொகை அதிகரிக்கின்றது. வைத்தியசாலைகள் அதிகரிக்கின்றன. கட்டிடங்கள் அதிகரிக்கின்றன. புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அத்துடன் வைத்தியத்துறையில் மனித வளங்கள் அதிகளவில் வெளிநாடு செல்கின்றனர். எம்மால் அவர்களை சட்டபூர்வமாக தடுப்பதற்கான ஆற்றல் இல்லை.

இந்த வைத்தியசாலை உருவாக்கப்பட்டமையினால் மருத்துவ, தாதியர் மற்றும் ஏனைய துறைகளும் வளர்ச்சியடைவதன் ஊடாக தேசிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படலாம். இவ் வைத்தியசாலை 2013ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் 4 வருடங்களுக்குப் பின்னர் எமக்கு இதனை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக எமக்கு இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கிடைத்தது. இவ் வைத்தியசாலையில் செளகரியமான வசதிகள் அமைந்துள்ளன. ஆயினும் இங்கு காணப்படும் ஆடம்பரங்கள் சிறிதளவு குறைந்து அதிகளவு இடவசதி காணப்படுமாயின் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

அபிவிருத்தியடைந்துவரும் உலகில் புதிய தொழில்நுட்பத்துடன் புதிய வசதிகளுடன் உயர்தர போதனா வைத்தியசாலை எமக்கு கிடைத்துள்ளது. இது எமது பாதுகாப்பு அமைச்சிற்கு மாத்திரம் சொந்தமானது அல்ல.

எமது நாட்டின் பொது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் மதிப்புள்ள சொத்து இதுதான் என கருதுகிறேன். சீன அரசாங்கத்திற்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். ஆரம்பக் கட்டத்திலிருந்து இங்கு வேலைகள் முடிவடையும் வரை செயற்பட்ட நிர்மாணப் பிரிவின் பொறியியலாளர் தொடக்கம் தொழிலாளர் வரையிலும் ஆலோசனை சேவைகளை வழங்கிய நிறுவனங்களுக்கும் எனது மரியாதையான நன்றிகள்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலையின் ஊடாக மருத்துவ கல்வியைப் பெறும் எமது அனைத்து மாணவர்களும் விசேட மருத்துவ நிபுணர்களாக உருவாக வேண்டுமென கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

Comments