பத்திகள் | தினகரன் வாரமஞ்சரி

பத்திகள்

"வா..வா பழைய விசயத்த பத்திதான் இன்டையக்கு பேச வேண்டி கிடக்கு"

"அடடே பாடசாலை விசயங்கள் எல்லாம் திரும்பவும் ஞாபகத்துக்கு வருதுபோல"

"அப்பிடி ஒண்டுமில்ல ஒரு மாசத்துக்கு முந்தி பேசின விசயத்தைத்தான் திரும்பவும் பேசவேண்டிக் கிடக்குது. எண்டு சொல்றனான். நீ ஏதோ வேற அர்த்தத்துல பேசிறாய்".

"அப்ப நான்தான் வேறமாதிரி விளங்கிக்கொண்டன். சரி உத விடுங்கோ என்னது போனமாசம் பேசின விசயம்?"

"டெங்கு நோய் பத்தி ரெண்டு மூண்டு தடவ பேசினமல்லோ திரும்பவும் உதுதான் பேசுபொருளாக் கிடக்குது."

"டெங்குவோ திரும்பவும் வந்து போட்டுதோ. மழையில்லாம வெயில் அடிச்சுதெல்லோ திடீரென்று இந்த மாசம் மழை வந்திட்டுது. மழை வந்ததெண்டா கொசுவும் வர வேண்டுமென்ன உதால டெங்குவும் பெருகிப்போட்டுதுதென்ன?"

"சரியாத்தான் சொன்னாய். திரும்பவும் டெங்கு அதிகரிச்சதால யூன் 01 ஆம் திகதியில இருந்து மூன்றுமாத காலத்திற்கு டெங்கு ஒழிப்பு காலமெண்டு பிரகடனப்படுத்தி இருக்கினம்."

"ஒரு வாரம் இரண்டு வாரமெண்டு இருந்த டெங்கு ஒழிப்பு இப்ப மூன்று மாதமெண்டு ஆகிபோட்டுதோ"

"இங்கபாரு சின்னராசு மக்கள் சரியான முறையில ஒத்துழைப்பு குடுக்கினம் எண்டா தான் உந்த டெங்க ஒழிப்பு விவகாரத்தில நல்லது நடக்கும் இல்லையெண்டா திரும்பவும் பழைய குருடி கதவத்திறடி என்ட கதையாத்தான் முடியும்."

"ஜூன் ஒண்டுல இருந்து மூன்று மாதமோ?"

"ஓமப்பா. யூன் ஒண்டுல இருந்து ஆகஸ்ட் 31 வரையில மூன்று மாச காலத்தை டெங்கு ஒழிப்பு காலமெண்டு பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கோ என்டு டெங்கு ஒழிப்பு செயலணியிட்ட ஜனாதிபதி சொன்னவராம். உது மட்டுமில்ல இன்னும் நிறைய விசயங்கள சொன்னவர் டெங்கு ஒழிப்புக்கென்டு இப்ப என்ன நடவடிக்கையள செய்றனீங்கள் உதுல ஏதும் பிரச்சினைகள் கிடக்கோ? கிடக்குதெண்டா உந்த பிரச்சினையல பற்றி அறிக்கையொண்ட உடனடியா கொடுத்துப்போடுங்கோ, அது பற்றி விசாரிப்பமெண்டும் ஜனாதிபதி சொன்னவராம்."

"வேற என்னவெல்லாம் சொன்னவர்"

"டெங்கு ஒழிப்பு விசயத்தில அரச நிறுவனங்கள் வேலை செய்யினமெல்லோ உது போல தனியார் துறையினருக்கும் செய்யச் சொல்லுங்கோ இந்த விசயத்தில ரெண்டு தரப்பும் இணைஞ்சு வேலை செய்ய வேணும். அதோட கட்டிடங்கள் கட்டுற இடங்களில நீர் தேங்கி இருக்கக் கூடாது என்பதை அமுல் படுத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கோ இன்னோரு முக்கிய விசயம் அரச நிறுவனங்களிலேயும் தனியார் நிறுவனங்களிலேயும் பாடசாலைகளிலேயும் வாரத்தில ஒரு நாள் ஒரு மணிநேரம் சூழலை சுத்தம் பண்ண வேண்டுமெண்டு அறிவூட்டுங்கோ எண்டும் ஜனாதிபதி சொல்லிப்போட்டாராம்."

"இந்தமுறை கொஞ்சம் புதிய யோசனைகள முன்வெச்சிருக்கினம் என்ன,"

"உதோட டெங்கு ஒழிப்புக்கு தேவைப்படுற பக்டீரியாக்கள் இருக்கில்லே அவையள இலங்கையில தயாரிக்க வேணும். மத்தது டெங்கு ஒழிப்பு பிரசாரத்திட்டங்களுக்கு ஊடகங்களில நல்ல பிரசாரம் பண்ண வேணும். உப்பிடி பிரசாரம் செய்தாதான் உந்தத்திட்டம் வெற்றி அளிக்கும். எண்ட படியா உதையெல்லாம்் செய்யுங்கோ எண்டும் ஜனாதிபதி சொன்னவர்."

"ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் டெங்கு மாதம் என்டு சொன்னவை. அதுக்குள்ள டெங்கு ஒழிப்புக்கு 3 மாதம் எண்டு சொல்லுவினம். 2 மாசத்துல உது அதிகரிச்சுப் போட்டுதோ?"

"2014 ஆம் வருஷத்த கணக்குல எடுத்தமெண்டா டெங்கு நோயாளிகளாக 47,246 பேர் இனங்கானப்பட்டனர். அதில 97 பேர் மரணித்தனர் 2015 இல 29,777 நோயாளியள், மரணங்கள் 60 எண்டு குறஞ்சுது. ஆனா 2016 இல உது 55,150 நோயாளியள் 90 மரணங்கள் என்டு கூடிப்போட்டுது. 2017 இல முதல் 5 மாசங்களில அதாவது இந்த 15 ஆம் திகதி வரையில 44,623 நோயாளியள் இனங்காணப்பட்டதுடன் 115 பேர் மரணிச்சிருக்கினம்."

"5 மாசத்தில 115 பேர் மரணமெண்டா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில கட்டாயமா ஆரம்பிக்கத்தான் வேணும்"

"உது மட்டுமில்ல அதிகளவில டெங்கு நோயாளியள் மற்றும் நுளம்புக்குடம்பியல் காணப்படுகின்ற இடங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், குருநாகலை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, மாத்தறை என்ட மாவட்டங்கள் இனங்காட்டப்பட்டிருக்கிது கண்டியோ."

"உதாலதான் 3 மாத டெங்கு ஒழிப்புத் திட்டத்த பிரகடனப்படுத்தியிருக்கினம் என்ன"

"ஜனாதிபதி இன்னொன்னும் சொன்னவராம் டெங்கு நோயாளியள் அதிகரிச்சிப்போட்டதால களுபோவில, ராகம வைத்தியசாலைகளில தற்காலிகமான கட்டிடங்கள அமைச்சி நோயாளிகள கவனிக்க வேனுமென்டு ஜனாதிபதி அதிகாரிகளிட்ட சொன்னவராம். டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு தேவையான பெளதீக மற்றும் மனிதவளங்களை நிதி அமைச்சு ஊடாக பெற்றுக்கொள்ளுங்கோ எண்டும் சொல்லிப் போட்டவர்."

"பிறகென்ன ஜனாதிபதி சொல்லிபோட்டவரெண்டா மறுபேச்சல்ல"

"ஜனாதிபதி சொல்லிப்போட்டவர்தான். ஆனா அதிகாரிகள் உத்தரவுகளைப் பின்பற்ற வேணும். மக்கள் உதுக்கு சரியான ஒத்துழைப்புத் தர வேணும். உதுவெல்லாம் முறைப்படி நடந்தா தான் டெங்கு ஒழிப்பு திட்டம் வெற்றிபெறும் தெரியுமோ"

"இலங்கையில டெங்கு நோய் நீண்டகாலமா இருக்குதென்ன"

"இலங்கையிலோ உது திடீரென்றுவந்த நோயில்ல சின்னராசு"

"1962 ஆம் ஆண்டிலிருந்து உது பரவிவருகுது ஆனா உது அப்ப பெரிய பிரச்சினையா இருக்கேல்ல 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறிப்பா 2008 ஆம் ஆண்டில இருந்துதான் குறிப்பிடத்தக்க வகையில டெங்கு நோயிண்ட அதிகரிப்பு வந்திது. உந்த விஷயம் பத்தி பகுப்பாய்வு செய்ததில சனத்தொகை அதிகமா இருக்கிற பிரதேசங்களிலதான் உது வேகமாகவும் தீவிரமாகவும் பரவுதென்டு தெரியக்கிடக்கிது."

"டெங்குவ பத்தி நாங்கள் இந்த பத்தியில பல தடவைகள் சொல்லிப்போட்டனாங்கள் ஆனா டெங்கு உப்படி ஏற்படுதென்டு சொல்லுங்கோ அதின்ட அறிகுறிகள் என்னென்ன என்டு எங்கட ஆக்கல் கேட்டுக்கொண்டு தான் இருக்கினம்."

"டெங்கு என்பது ஒருவகைக் காய்ச்சல்"

"DEN 1, DEN 2, DEN3, DEN4, என்ட நாலுவகை வைரசாலதான் இது ஏற்படுது. நோய் பீடித்த பெண்கொசுதான் மனிதர்களுக்கு உத பரப்புது. உந்த கொசுவை எளிதில அடையாளம் காண ஏலும் சின்னராசு."

"என்ன அடையாளமண்ணே"

"உந்த கொசுவின்ட கறுப்பு காலில வெள்ளை வரிகள் இருக்கும். உதால அந்த கொசுவை அடையாளம் காணேலும். ஊந்த கொசு பகலிலதான் கடிக்கும். குறிப்பா விடியக்காலையில இல்லயென்டா பின்னேரத்திலதான் கடிக்கும். உந்த டெங்கு நோய் தொற்று 3 முதல் 14 நாட்கள் வரையில இருக்கும்."

"டெங்கு நோயின்ட அறிகுறிகள் என்னண்ண"

"டெங்கு நோயின்ட அறிகுறிகளோ கடுமையான காய்ச்சல், தலைவலி, கண்ணுக்குப்பின்னால கடுமையான வலி, மூட்டுவலி, குமட்டல், வாந்தி, தோலில் வேனல் கட்டியள் என்பதுதான் அறிகுறிகள் ஆனா டெங்கு காச்சல் இரத்த நாளங்கள பாதிச்சிது என்டா குருதிப் போக்கு ஏற்படும். உதால உடம்புக்குள்ள இரத்தக்கசிவு ஏற்பட்டுது என்டா நிலம மோசமா போயிடும். இப்பிடி வந்துதென்டா மூளை, சிறுநீரகம் மற்றும் ஈரல் போன்ற முக்கிய உடற்பாகங்களுக்க இரத்தம் செல்வது பாதிக்கப்படும். அப்படியான நேரத்தில வைத்தியசாலையில தீவிர சிகிச்சை எடுக்கவேணும்."

"டெங்கு இலங்கையிலயும் இந்தியாவிலயும் மட்டும் இருக்குதோ. வேற நாடுகளிலயும் கிடக்குதோ"

"இலங்கை, இந்தியா என்டு மட்டுமில்ல ஆர்ஜண்டீனா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பொலிவியா, பிரேஸில், கம்போடியா, கொலம்பியா, கியூபா, கெளதமாலா, இந்தோனேசியா என்ட உலர் வெப்ப வலய நாடுகளிலதான் டெங்கு நிறைய பரவுது."

"டெங்குவை பரப்பும் கொசு"

Comments