மாணவர்களுக்கு பெற்றோர் வழங்கிய கைபேசிகளை மீளப்பெற காலக்ெகடு | தினகரன் வாரமஞ்சரி

மாணவர்களுக்கு பெற்றோர் வழங்கிய கைபேசிகளை மீளப்பெற காலக்ெகடு

(என்.கே.விஜயரத்தினம்,

வெல்லாவெளி தினகரன் நிருபர்)

பாடசாலை மாணவர்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை வாங்கிக் கொடுத்து கல்வியையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் வீணடித்த பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்பு கையடக்க தொலைபேசிகளை மீளப்பெற்றுக் கொள்ளுங்கள்.

அவ்வாறு நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் கையடக்கதொலைபேசிகளை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், நீதிமன்ற அனுமதியுடன் பாடசாலைகளிலும், பிரத்தியேக ரியூசன் நிலையங்களிலும் சென்று கையடக்கதொலைபேசிகளை பொலிஸ் திணைக்களம் பெற்றுக்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட சிறுவர், பெண்கள் பிரிவு நன்னடத்தை பொறுப்பதிகாரி என். சுசீலா மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.

மட்டகளப்பு தலைமை பொலிஸ் நிலையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 'கைதொலைபேசியின் பாதிப்புக்களும், மாவட்டத்தின் கலாசார சீரழிவுகளும்' எனும் தலைப்பில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை செய்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பொலிசாரினால் வெள்ளிக்கிழமை (26) விழிப்புணர்வுக்கூட்டம் அதிபர் ஜே. ஆர். பீ. விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர், பெண்கள் நன்னடத்தை பிரிவு பொறுப்பதிகாரி என். சுசீலா பிரதமஅதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்:-

இன்றைய தமிழ் சமூகம் பிள்ளைகள் மீதும், மாணவர்கள் மீதும் கவனக்குறைவால் நடந்துகொள்கின்றது. வயது வந்த பிள்ளைகளையும், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களையும் ஒவ்வொரு பெற்றோரும் பாடசாலைக்கு முறையாக செல்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

அதேபோன்று உங்கள் பிள்ளைகளாகிய மாணவர்கள் புதிதாக வெளியிடப்படும் படமாளிகைக்கு சென்று தென்னிந்திய விரியன் படங்களை பாடசாலைக்குப் போறேன் என்று திரைப்படமாளிகைக்குப் போகின்றார்கள். இவர்களுக்கு படம் பார்ப்பதற்கு பணம் கொடுப்பது பெற்றோர்கள். இவையெல்லாவற்றையும் பெற்றோர்கள் நிறுத்தவேண்டும்.

மட்டக்களப்பு நகர்புற பாடசாலை மாணவிகள் அண்மையில் தமது பெற்றோருக்கும், பாடசாலைக்கும் தெரியாமல் கள்ளக்காதலனுடன் உன்னிச்சைக்குளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். இதெல்லாம் நடப்பதற்கு காரணம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த அலைபேசியாகும்.எனவே எதிர்வரும் முதலாம் திகதி முன்னர் கையடக்க தொலைபேசிகளை பிள்ளைகளிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார். 

Comments