சுற்று நிருபங்களுக்குக் கட்டுப்படாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் | தினகரன் வாரமஞ்சரி

சுற்று நிருபங்களுக்குக் கட்டுப்படாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

 லோரன்ஸ் செல்வநாயகம்

 

 >150 மில். ரூபா ஒதுக்கீடு

>நட்ட ஈட்டுத் தொகை நாளை அறிவிப்பு

 

அரசின் சுற்றறிக்கைகளை கவனத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் நட்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக அரசாங்கம் 150 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நட்ட ஈட்டு தொகை தொடர்புகளை திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நட்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுக்க

உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று களுத்துறை மாவட்டத்துக்கு விஜயம் செய்து பாதிப்புகளை நேரில் பார்வையிட்டுள்ள ஜனாதிபதி அங்கு அரச உயரதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் போதே இப் பணிப்புரையை விடுத்துள்ளார். இதே வேளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக 150 மில்லியன் ரூபா நிதியை முதற்கட்டமாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

நட்ட ஈடுகள் வழங்குவதை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்துள்ள ஜனாதிபதி சுற்று நிருபங்களுக்கு கட்டுப்பட்டு செயற்படாமல் நீதியான வகையில் அவசியமான சேவைகளை துரிதமாகப் பெற்றக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பை முழுமையாக அரசாங்கப் பொறுப்பேற்கும் என அதிகாரிகள் மத்தியில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரோக்கியமான சமைத்த உணவுகளை உடனுக்குடன் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் அப்பொறுப்பு முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சகல சமைத்த உணவுகளும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கூடாக மக்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் 24 மணித்தியாலமும் இடம்பெறும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதற்காக அரசாங்கம் இரண்டு நிலையங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இதற்கிணங்க இரத்மலானை விமானப்படை முகாமிலும் பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்திலும் இந்த நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. (ஸ) 

 

Comments