பெருந்தோட்டப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் எதிர்கால சவால்களும் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் எதிர்கால சவால்களும்

லங்கையின் சனத்தொகையில் பெண்கள் 52 வீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் பெருந்தோட்டத்துறையில் 52 வீதமானோர் பெண்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நமது நாட்டின் வருமானத்தில் பெரும்பகுதியைத் தேடித்தருவது பெண்களாகும். ஆனால் இவர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கும், கொடுமைகளுக்கும் முகங்கொடுப்பது பலருக்கு தெரியாத விடயமாகும்.

பெருந்தோட்டத்துறையை எடுத்துக்கொண்டால் தேயிலைத் தோட்டங்களின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குவது பெண்களாகும். ஆனால் அவர்கள் எதிர்நோக்கும் அவலங்களும் சுரண்டல்களும் வெளிவராமல் மறைக்கப்படுகின்றன. தனியார் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் பரிதாபகரமானதாகும்.

தேயிலைத் தொழிலுக்குச் செல்லுமுன் பெருந்தோட்டப் பெண்கள் தமது வீட்டு வேலைகளையெல்லாம் குறுகிய நேரத்திற்குள் முடித்தாக வேண்டும். வீட்டிற்கு தேவையான தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயம், தோட்டங்கள் அமைந்துள்ள மலைப் பிரதேசங்களிலிருந்து நீர் ஊற்றெடுத்தாலும் தோட்ட மக்களுக்குத் தேவையான சுத்தமான நீர் கிடைப்பதரிது.

தேயிலை கொழுந்து பறிக்க மலைக்குள் காலடியெடுத்து வைக்குமுன் தமது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளவேண்டியுள்ளது. தேயிலை மலையில் அட்டைகள், தேயிலைச் செடிக்குள் கூடுகட்டியிருக்கும் தேன் பூச்சிகள், கதண்டுகள், பாம்புகள், பன்றிகள், காட்டெருமைகள், மான், சிறுத்தை போன்ற மிருகங்கள், மற்றும் கொஸ்லாந்தை பகுதியில் காட்டு யானைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.

தேயிலை மலைகளிலும் சுற்றுச்சூழலிலும் புல் பூண்டுகள் செடிகொடிகள் வளர்ந்து காடுகளாகிவிட்டதால் மிருகங்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். வேலை செய்யும்போது ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நட்டஈடுகள் வழங்குவதற்கு பதிலாக அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள நிருவாகங்கள் பலவிதமான தந்திரங்களை கையாள்கின்றன. தொழில் செய்யும்போது விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு விபத்து ஏற்பட்ட நாளில் சம்பந்தப்பட்ட தொழிலாளி முழுநாளும் தொழில் செய்ததாக செக்ரோலில் பதிவு செய்துகொள்வதோடு சம்பளமும் வழங்கப்படுகிறது. அப்பாவித் தொழிலாளியோ தோட்ட நிருவாகம் தம்மீது கருணை காட்டியுள்ளதாக நினைத்துக் கொண்டிருப்பார். ஆனால், நட்டஈட்டு கோரிக்கையை முன்வைக்கும்போதுதான் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளி சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் முழுநாளும் வேலை செய்து சம்பளமும் வழங்கப்பட்டதாக நிருவாகத்தால் உறுதிப்படுத்தப்படுவதுடன் தோட்டத்தில் தொழில் செய்யும்போது எவ்வித விபத்தும் ஏற்படவில்லையென தெரிவித்து நட்டஈடு மறுக்கப்படுகிறது.

இக் காரணத்தால் பலருக்கு நட்டஈடுகள் மறுக்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தோட்ட நிருவாகத்தின் இந்த அநீதிக்கு எதிராக தொழிலாளர் நட்ட ஈட்டு ஆணையாளரிடம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அங்கும் இதே காரணம் தெரிவிக்கப்படுகின்றது. கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான உபகரணங்களான கொழுந்து கூடை, மட்டக் கம்பு போன்றவை முன்னர் வழங்கப்பட்டன ஆனால் தற்போது எந்த உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை.

தொழிலாளர்கள் தங்களால் இயன்றளவு தேயிலைச் செடிகளைச் சூழந்துள்ள புல் பூண்டுகள், செடிகொடிகளை அகற்ற வேண்டும். இதற்காக மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. முன்பு கொழுந்து பறிக்கும் மலைகளுக்கு அருகாமையில் இருக்கும் மடுவங்களில் கொழுந்தை நிறுத்து எடுப்பது வழக்கமாகும். தற்போது பாதைகள் முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாத அந்த வீதிகளில் கொழுந்து நிறுப்பது வழமையாகிவிட்டது. இதனால் தொழிலாளர்கள் பறித்த கொழுந்தை மலையிலிருந்து சுமந்து வரவேண்டியிருக்கிறது.

ஆரம்ப காலங்களில் தொழிலாளி ஒரு நாளைக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு (Norm) 14 இறாத்தலாகும். ஆனால் மெட்றிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்த அளவு படிப்படியாகக் கூடி தற்போது 20, 23 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்டக் கம்பனிகளோ இந்த அளவை மேலும் அதிகரிக்கவே முயற்சிக்கின்றன.

(தொடரும்...)

பெருந்தோட்டப் பெண்கள்...

அதற்கு உதாரணமாக கென்யாவில் 40 கிலோவும், தென் இந்தியாவில் 34 கிலோவும், அஸாமில் 24 கிலோ கொழுந்து பறிப்பதாகவும் நமது நாட்டில் குறைந்தளவு கொழுந்து பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்திற்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை தீர்மானிப்பதில் பல தில்லுமுல்லுகள் இருப்பதால் தொழிலாளர்கள் பல தொல்லைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இதனால் ஒருநாள் சம்பளத்திற்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை தோட்ட நிர்வாகமும் தோட்டத் தொழிற் சங்கத் தலைவர்களும் கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டுமென சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் நிருவாகங்கள் தன்னிச்சையாக தேயிலைக் கொழுந்தின் அளவை தீர்மானிக்கின்றனர்.

நிருவாகம் தீர்மானித்த கொழுந்தின் எடையைவிட சிறிதளவு குறைந்திருந்தாலும் தின ஊக்குவிப்புக் கொடுப்பனவான 140 ரூபா வழங்கப்படிவதில்லை. கொழுந்து நிறைய உள்ள காலங்களில் மேலதிகமாக பறித்தால் ஒரு கிலோவிற்கு 25 ரூபாவீதம் வழங்க வேண்டுமென கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இவ்விடயங்கள் தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் திகதி தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்கள், தோட்ட முதலாளிமார் சம்மேளனம், தோட்டக் கம்பனி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை.

தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் மற்றொரு பாரிய பிரச்சினைதான் தொழிலாளர்கள் பறித்த கொழுந்தை காலை, பகல், மாலை என மூன்று வேளை நிறுத்து தோட்ட நிருவாகத்தால் பாரமெடுக்கப்படுகின்றன. இதன்படி ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்து ஆகக்குறைந்தது 02 கிலோ வீதம் ஒரு நாளைக்கு 06 கிலோ அறிவிடப்படுகின்றது. தோட்டத்தில ஒரு நாளைக்கு ஆகக்குறைந்தது 100 தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பார்களானால் ஒரு தொழிலாளியிடமிருந்து ஒரு நாளைக்கு 06 கிலோ வீதம் 100 தொழிலாளர்களிடமிருந்து 600 கிலோ அறவிடப்படுகின்றது. ஒரு தொழிலாளியின் ஒரு நாளைய வேலைக் கணக்கு 20 கிலோ எனில் 600 கிலோவிற்கும் 30 தொழிலாளர்களின் சம்பளம் அதாவது ஒரு நாளைய சம்பளம் ரூபா 720.00 படி 30 தொழிலாளர்களுக்குரிய சம்பளம் 21,600.00 ரூபாவாகும். இந்தக் கணக்கின் பிரகாரம் 100 தொழிலாளர்களின் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பகுதி உழைப்பு அப்பாவி தொழிலாளர்களிடமிருந்து சுரண்டப்படுகின்றது. தேயிலை மலைகளில் பறித்த கொழுந்தை மூடைகளில் கட்டி தொழிற்சாலைக்கு அனுப்பும் கொழுந்தின் நிறையும் குறைவாகவே காட்டப்படும் அதாவது தேயிலை மலையிலிருந்து 300 கிலோ அனுப்பப்பட்டால் தொழிற்சாலை நிறையாக 225 அல்லது 250 கிலோ என்றே கணக்கிடப்படும். கடந்த காலங்களில் தொழிலாளர்களை மேற்பார்வை செய்தல் அவர்களுக்குரிய செக்ரோல் பதிவுகள்,

கொழுந்து நிறுத்தல், பறித்த கொழுந்தை தொழிற்சாலைக்கு அனுப்புதல் போன்ற வேலைகளை அதற்குரிய உத்தியோகத்தர்களே மேற்கொண்டனர். ஆனால் அண்மைக் காலமாக தோட்டங்களில் உத்தியோகத்தர்கள் இல்லாமல் மேற்குறிப்பிட்ட கடமைகள் அனைத்தும் கங்காணிமாரைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது. கங்காணிகளுக்கோ சாதாரண தொழிலாளியின் நாள் சம்பளமே வழங்கப்படுகின்றது. உத்தியோகத்தர்களால் மேற்கொண்ட கடமைகளை கங்காணிகளால் நிறைவேற்றிக்கொள்வதால் தோட்டக் கம்பனிகளுக்கு பெரும் இலாபம், ஆனால் கங்காணிகளுக்கோ தாங்கள் உத்தியோகத்தர் என்ற மனப்பிரமை மட்டுமே.

தோட்டங்களில் கைவிடப்பட்ட மலைகளிலுள்ள புல் பூண்டு, செடிகொடிகளை அகற்றி சுத்தம் செய்து அப்படிப்பட்ட மலைகளிலுள்ள தேயிலைக் கொழுந்தை பறித்து கொடுக்கும் முறையான வெளியார் உற்பத்திமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் தொழிலாளர்களுக்கு சட்டப்படி நீண்ட காலமாக வழங்கப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவை காலப் பணம், விடுமுறைச் சம்பளம், பிரசவ சகாய நிதி போன்றவைகளை இழக்கவேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல முதலாளி தொழிலாளி என்ற சம்பந்தம் இல்லாததினால் மேற்குறிப்பிட்ட வெளியார் உற்பத்தி முறையில் ஈடுபட்டிருக்கும்போது விபத்துகளோ அல்லது வேறு ஏதும் சம்பவங்கள் ஏற்பட்டாலோ பொறுப்புக்கூற எவரும் இல்லை.

இது சம்பந்தமான ஒப்பந்தத்தில் தோட்ட நிருவாகங்கள் மிகவும் தந்திரமாக தொழிலாளர்களின் கையொப்பத்தை பெற்றுள்ளதோடு இதன் நகல்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு கொடுப்பதும் இல்லை. இந்த முறையால், தொழிலாளர்களும் அவா்களின் முழுக் குடும்பமும் தோட்டத்திற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதோடு கல்வியில் பிள்ளைகள் ஓரளவு முன்னேறிவரும் இக்காலக்கட்டத்தில் வெளியார் உற்பத்தி முறையால் பாடசாலை செல்ல வேண்டிய பிள்ளைகளும் தனது பெற்றோருடன் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொடுத்து பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். தோட்ட அதிகாரிகளும் இந்த முறைக்கு ஆதரவு நல்குகின்றனர். ஏனெனில் தோட்டத் தொழிலுக்கும் அவர்களின் உல்லாச வாழ்விற்கும் உழைக்கும் பட்டாளங்கள் தேவையென்பதால். மேற்குறிப்பிட்ட வெளியார் உற்பத்திமுறையால் தொழிலாளர் குடும்பங்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவதோடு பிள்ளைகளின் கல்வி கேள்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாகும்.

இதைப்போல வெள்ளையரின் காலத்தில் புல் வெட்டு கொந்தராத்து முறை இருந்தது. ஒரு ஏக்கருக்கு ரூபா. 2.00 வீதம் வழங்கப்பட்டதோடு, அதிகமான தோட்டங்களில் தொழிலாளர்கள் கட்டாயமாக இந்த கொந்தரப்புகள் எடுக்க வேண்டும், இல்லையேல் நிருவாகத்தின் தண்டனைக்கு உள்ளாகவேண்டும்.

இதனால் தொழிலாளர்களும் அவர்களின் வீடுகளில் இருந்த பெரியவர், சின்னவர் என அனைவரும் புல் வெட்டும் கொந்தராத்து வேலைகளில் ஈடுபடுவர். இந்தக் கொந்தராத்து முறையை ஒழிக்க 1972ஆம் ஆண்டுகளில் மாபெரும் தொழிற் சங்கப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக நமது வயோதிப பெற்றோர் பாதுகாக்கப்பட்டனர்.

அண்மையில் தொழில் பிரச்சினைகள் சம்பந்தமாக தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பாடசாலை விடுமுறை நாட்களில் தொழிலாளர் பிள்ளைகளும் வெளியார் உற்பத்தி முறையில் கொழுந்து பறித்துக் கொடுக்கலாம் என தோட்ட அதிகாரியொருவர் சொன்னதற்கு தோட்டத் தலைவர் தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழுந்து பறித்துக் கொடுக்கவும் உங்கள் பிள்ளைகள் தோட்ட அதிகாரிகளாகவும் பணிப்பாளர்களாகவும்தான் இருக்க வேண்டுமா என கேட்டு அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தார். புல்வெட்டு கொந்தராத்து முறையையொத்த வெளியார் உற்பத்தி முறையால் நமது தொழிலாளர் குடும்பங்கள் சுரண்டல்களுக்கு முகம் கொடுப்பதால் எதிர்காலத்தில் பெரும் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாகலாம். ஆகையால் அற்ப சொற்ப நன்மைகளுக்காக நமது எதிர்கால சந்ததிகளின் எதிர்காலத்தை வீணாக்காமலிருக்க நாம் அனைவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

பதுளை ஆ. முத்துலிங்கம் 

Comments