குறுங்கதை | தினகரன் வாரமஞ்சரி

குறுங்கதை

இன்னும் இருட்டுக்குள்​ளேயே கிடக்கின்றது"

என்று தொடங்குகின்ற ஹைக்கூக் கவிதையின் கிளைமாக்ஸ் கடைசியில் அதுவரை பொறுத்தார் கவியாழ்வார்.

நகர சபை...

நகரசபை என்ற புதியபோக்கு அதே அதரப் பழசான கட்டடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கட்டடத்தைப் பார்க்கின்ற போதெல்லாம் 'ஓல்ட் வைன் இன் எ நிவ் கிளாஸ்' என்ற ஆங்கிலப் பழமொழி அநாவசியத்துக்கு வந்து தொலைந்து விடுகின்றது.

காலை மணி பத்து!

தவிசாளரின் கதிரை தனியே எந்தவிதப் பொறுப்புமின்றிச் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. அடுத்தவர்களைச் சுமந்து சுமந்தே முதுகு வளைந்த கதிரைகளுக்கு, ஒரு ரிலாக்ஸ் வேணாமா என்ன? செக்ரட்டரி, எப்போதடா ஒரு சிகரற் பற்ற வைக்கலாம் என்ற அவதியில் நெளிந்த கொண்டிருந்தார். எனினும், அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் எறும்பு இமய மலையைத் தோன்றும் எண்ணம் அவருக்குள் மின்னலடித்தது.

பக்கத்துக் கதிரையில் ரியாஸ் தூங்குவதும் திடீரென எழும்புவதுமாக இருந்தான். இரவு விசிடி ப்ளேயரில் சுப்ரமணியபுரத்துக்குப் போய் வந்ததன் உபாயமது. இன்னுமொரு தடவை சசியைச் சந்தித்துத் துரோகத்தின் நிழல் பற்றிய சாருநிவேதிதாவின் வியாக்கியானங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டிருந்தான்.

“சார்... அஞ்சு தரம் எழுத்துல முறைப்பாடு குடுத்திருக்கம்... எந்தவிதமான எக்சனும் இதுவரை எடுக்கப்படல... ஆயிரம் தடவையாது இங்க வந்து சொல்லிச் சொல்லி அலுத்துப் போட்டம்... ஆனது ஒண்ணுமில்ல... அதனால்தான் இன்னிக்கு ஏரியால வசிக்குற இருபது ரெசிடென்ஸஸ் எல்லாருமா சேர்ந்து வந்திருக்கம்...” வந்தவர்களில் கொஞ்சம் பேசத் தெரிந்த ஒருவர் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

“கடந்த ஆறு மாசமா எங்கட ஏரியால பிரதான வீதி இருட்டுல மூழ்கிக் கிடக்கு. மூணு மாசத்துக்கு முந்தி அடிபட்ட பல்பு இன்னும் அப்படியே கிடக்கு... புதுசா பல்பு எதுவும் மாத்தல... பல்ப மாத்தச் சொல்லி எழுத்து மூலமாவும், வாய் மூலமாவும் பல தடவ நகர சபைக்கு அறிவிச்சும்... நகர சபை கண்டும் காணாமயும் இருக்கு... சேர்மன்ட்ட சொன்னா சிரிச்சே சமாளிச்சுராரு... இது சின்ன வேல... செய்வோமே என்று சொல்லிச் சொல்லி கெடப்புல விட்டுட்டாரு. சேர்மன் சீட்டுக்கு வந்தாப் பிறகு நல்லா கத சொல்ல கத்துக்கிட்டாரு... அதனால இன்னிக்கு ஒரு முடிவோட வந்திருக்கம்... ரெண்டுல ஒண்ணு இன்னிக்கு எங்களுக்கு தெரிஞ்சாகணும்... எத்தின நாளைக்கு இப்படி எங்கள ஏமாத்தப் போறீங்க” நீட்டி முழக்கினார் நிசார் நாநா... அவரது குரலில் சற்று ஆவேசம் தெரிந்தது... நியாயமான கோபம்.

“ஓகே... ஓ... கே... நாங்களும் எங்களால் முடிஞ்ச அளவுக்கு படிப்படியா ஒவ்வொரு தெருவுக்கும் லைட் போட்டுக் கிட்டுத்தான் வாறம். நீங்க மட்டுமல்ல ஏராளமான ரிக்வெஸ்ட் கடிதங்களும்... முறைப்பாட்டுக் கடிதங்களும் வந்து குவிஞ்சு கிடக்கு. ஒண்ணொண்ணாத்தான் செய்ய முடியும். நீங்க இப்படி ஆவேசப்படுறதுல்ல அர்த்தமில்லங்க... வெகு சீக்கிரத்துல உங்கட தெருவுக்கு லைட் போட நான் நடவடிக்கை எடுக்குறன்” வழமையான பதில் போலத்தான் இருந்தது செக்ரட்டரியின் வார்த்தைகள்.

“இல்ல சேர்... முதத்தடவ நாங்க கம்ப்ளைன் பண்ணியிருந்தா பரவாயில்ல... எத்தின தரம் இது சம்பந்தமா ஒங்களுக்கு அறிவிச்சிருக்கம் யூஸ்லெஸ்... நாங்க அறிவித்தல் தாறதும்... நீங்களும் வழமையா இதே பதிலத்தாறதும்... எக்ஸ்ட்ரீம்லி பொய்ன்ட்லெஸ்... வீ வோன்ட் இம்மீ டியட் சொலூசன்” ஆங்கிலமும் தமிழும் காதர் நாநாவின் வார்த்தைகளில் கலப்புத் திருமணம் செய்து கொண்டன.

“தெரு லைட் இல்லாம படுற சிரமம் ஒண்ணா ரெண்டா... போனவாரம்கூட இரவு ஒன்பது மணிபோல வெளியே போய் வீட்டுக்கு வந்திண்டிருந்த ஆயிஷாட அஞ்சு பவுண் சங்கிலிய முகம் தெரியாத ஒருத்தன் அறுத்திண்டு ஓடிட்டான். மனுஷி பொலிஸ்ல என்ட்ரீ போட்டும் இதுவர களவு போன சங்கிலி கிடைக்கல்ல... சங்கிலி திருடுபோனதிலிருந்து எழவு விழுந்த கணக்கா மனுஷி அன்னம் தண்ணி இல்லாமக் கிடக்கு. கொள்ளையில போற கள்ளன்ட மொகத்தக்கூட பார்க்க முடியாதளவுக்கு பேயிருட்டு... ஒரு லைட் தெருவுல இருந்திருந்தா இப்படி அநியாயத்துக்கு ஆயிஷாட சங்கிலி களவு போயிருக்குமா... பாவம் மனுஷி, இந்தச் சங்கிலிய வச்சிட்டுத்தானே சனங்கள்ட்ட பந்தா காட்டி முறுக்கிட்டு திரிஞ்சுச்சு” உச் கொட்டினார் உஸ்மான்.

“நீங்க கட்டாயம் இரவைல வங்க எங்க தெருவப் பாக்கணும்... அப்ப வௌங்கும்... குருடன் யானைக்கு கண்ணுவச்ச கத”

ஒரு மாசமில்ல ரெண்டு மாசமில்ல ஆறு மாசம்... ராவைல இருட்டுல ரோட்டுல நடக்க முடியல... சைக்கிள் ஓட முடியல... மோட்ட பைக் ஓட முடியல... எங்க திட்டி இருச்சு... எங்கே பள்ளம் இருக்கின்னு ராவு இருட்டுல ஒண்ணுமே தெரியல... அன்னிக்கு என்னடான்னா என்ட மச்சான் மஹ்ரூப் சைக்கிள்ல வறக்க தடுமாறி பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகரையெல்லாம் ஒரே ரத்தக்களறி... போதாக்குறைக்கு முன்பல் ரெண்டும் பேந்துடுச்சு... இன்னும் ஆஸ்பத்திரில படுக்கைல கெடக்கான்... இனியும் பொறுக்கேலா... கட்டாயமா இன்னிக்கே நீங்க எங்க தெருவுக்கு லைட் போட்டே ஆகணும்.”

ஆளாளுக்கு அரை மணித்தியாலயத்துக்கு மேல் ஆதங்கங்களை அள்ளித் தீர்த்தார்கள். மனசுக்குள் நகர சபையைத் திட்டித் தீர்த்தார்கள். லைட் போட்டே ஆக வேண்டும் என்று இறுதித் தீர்ப்பை தமக்குள் தீர்த்தார்கள். எத்தனை தீர்த்தார்கள்... எத்துணை தீர்த்தார்கள்.

“ஓ...க்கே... ஓகே... ஐ அரன்டர்ஸ்டன்ட் யுவர் ப்ராப்ளம்... இந்த விஷயத்துக்கு நான் ப்ரையோரிட்டி கொடுக்குறன். ஐ ப்ராமிஸ் நாளை இரவு உங்க தெருவுல வெளிச்சமிருக்கும்...” என்ற செக்ரட்டரி பேனையை விரல்களின் இடுக்குகளில் மூச்சுத் திணற வைத்தவாறு கேட்டார்... "உங்க தெருவின்ட பேரச் சொல்லுங்க... நோட் டவுன் பண்ணிக்குறன்”

வந்தவர்களில் ஒருத்தன் சொன்னான்,

“மின்சார நிலைய வீதி”

(ஹைக்கூவின் மூன்றாவது வரியது... கதையின் ஆரம்ப இரண்டு வரிகளோடு சேர்த்து இதனை வாசிக்கவும்... அப்போது புரியும்) 

Comments