பிரேமை என்கின்ற அன்பு! | தினகரன் வாரமஞ்சரி

பிரேமை என்கின்ற அன்பு!

இன்று ஞாயிற்றுக்கிழமை மு.ப 6.30 க்கு தாமரைத் தடாகத்தில் இருந்து ஆரம்பமாகும் “மனித விழுமியங்களுக்கான நடைபவனி” இனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுமாகின்றது.

‘பிரேமை என்றால் என்ன?’ இந்தக் கேள்வியை எழுமாற்றான சாதாரண ஒருவாிடம் கேட்டால் “என்ன ஹிந்திச் சொல்லுக்கெல்லாம் என்னிடம் அர்த்தம் கேட்கிறீர்கள்?” என்று பதில் கேள்வி கேட்கக் கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவரது மனைவி, மகன், மகள் அல்லது தனக்குத் தொிந்த யாராவது ஒருவரை பிரேமா, பிரேமிளா, பிரேம் என்றெல்லாம் அழைத்துக்கொண்டிருப்பார். இதைநான் ஏன் சொல்கின்றேன் என்றால் உண்மையில் நம்மவர்களுக்கு சாதாரணமாக பயன்படுத்துகின்ற பல சொற்களின் விளக்கங்களும் அவற்றின் மகத்துவங்களும் தொிவதில்லை அல்லது தொிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.

உண்மையில் ‘பிரேமை’ என்பது தூய்மையானதொரு தமிழ்ச் சொல். தமிழ் அகராதி ஒன்றை எடுத்து அதற்கு அர்த்தம் தேடினீர்கள் என்றால் பிரேமை என்றால் அன்பு, காதல், நேசம், பாசம் ஏன் மோகம் என்றும் கூட ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் நான் இங்கு கதைக்க இருப்பது பிரேமை என்கின்ற அன்பைப் பற்றி மட்டுமே. காதல் மற்றும் இன்னபிறவைப் பற்றியல்ல.

இந்தஅன்பை பலவிதங்களில் வரைபிலக்கணப்படுத்தலாம். ‘வரைபிலக்கணங்களுக்குள் அகப்படாத ஒரு மாபெரும் சக்தி அன்பு எனப்படும்’என்பது அவற்றில் முக்கியமானதொன்று. இங்கு நான் அதை என்னால் இயலுமானவகையில் இலகுவாக வரைபிலக்கணப்படுத்த முயற்சிக்கின்றேன். எம்மிடமிருக்கின்ற ஒரு பொருளின் சிறு பகுதியை வேறொருவருக்கு வழங்கும்போது சாதாரண பெளதிகவியல் விதிப்படி என்ன நடக்க வேண்டும்? எம்மிடம் இருக்கின்ற அந்த குறித்த பொருளின் அளவு குறைவடைய வேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கும் போது, நாம் எவ்வளவு கொடுக்கின்றோமோ அந்த அளவை விட பல மடங்கு அதிகமாகவும் அத்தோடு நாம் யாருக்கு அதைக் கொடுக்கின்றோமோ அவர்களிடம் உள்ள அந்த பொருளின் அளவும் சேர்ந்து எம்மிடம் அதிகாிக்குமாயின் நாம் கொடுக்கின்ற அந்த பொருள் அன்பைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இந்த அன்பைக் கொடுக்கின்ற விடயத்தில் எம்மை நாமே வாலியிலும் பலம்மிக்கவர்கள் என்று கூறிக் கொள்ளலாம். ஏனென்றால் வாலி யாரை எதிர்க்கின்றாரோ அவாின் பாதிப் பலம் மட்டுமே வாலிக்கு வந்துசேரும். ஆனால் இங்கு கதை அப்படியல்ல. அதற்கும் மேலே.

உலக வழக்கில் இந்த அன்பு என்ற சொல் தாய்க்கும் குழந்தைக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், ஆசிாியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள உறவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் உண்மையான அன்பு என்று சொல்ல முடியாது. அதாவது இவையெல்லாம் பிரேமையாகாது. ஏனெனில் இவ் அன்புகள் எல்லாமே சுயநலமானவை. அவை ஏதோவொரு நோக்கத்துக்காகவே குறித்தவர்களின் மீது செலுத்தப்படுகின்றன. இந்த அன்புகளால் குறித்த நோக்கங்கள் நிறைவேறுகின்றனவோ இல்லையோ என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அவற்றால் ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டும் அளவுக்கதிகமாக அதிகாிக்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

எவ்வித சுயநலன்களோ அல்லது நோக்கங்களோ இன்றி செலுத்தப்படுகின்ற அன்பைத்தான் பிரேமை என்று சொல்லலாம் என்றால் அத்தகைய அந்த பிரேமையை நாம் எங்கு உணர முடியும்? ஆம். இந்த பிரேமை என்கின்ற பேரன்பை நாம் இறைவனிடத்தில் மட்டுமே உணர முடியும். ஏனெனில் இறைவனிடத்தில் கொள்கின்ற அன்பில் மட்டுமே எந்தவித சுயநலமோ அல்லது உள்நோக்கங்களோ இருக்காது என்பதோடு இங்கு மட்டுமே எவ்விதமான ஏமாற்றங்களும் கூட ஏற்படாது. மேலும் இந்த பிரேமை என்கின்ற அன்பு மட்டுமே தூய்மையானது. நிரந்தரமானது. அழிவற்றது. தெய்வீகமானது.

சரி. இத்தகைய இந்த பிரேமையை எவ்வாறு ஏற்படுத்தலாம்? அல்லது உருவாக்கலாம்? என்று பார்ப்போம். இதற்கு முதலில் பொறுமையையும் மன்னிக்கும் இயல்பையும் எங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு பொறுமையை எடுத்துக்கொண்டால், உங்களை ஒருவர் காரணமே இல்லாமல் திட்டிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் பதிலுக்கு அவரைத் திட்டாமல் பொறுமையுடன் இருந்து பாருங்கள்.சில காலங்களில் அவர் உங்களைத் திட்டுவதை நிறுத்தியே விடுவார்.“அட.. நான் இவ்வளவு திட்டிய பின்பும் அவன் பொறுமையாக இருக்கின்றானே. எவ்வளவு நல்லவன் அவன்.” என்று எண்ணி காலப்போக்கில் உங்கள் மீது அன்பு செலுத்துவதற்கும் கூட வாய்ப்பிருக்கிறது. மன்னிப்பின் பலம் இதைவிட இன்னும் அதிகமானது என்பதை இப்போது நான் சொல்லித்தான் உங்களுக்கு தொியவேண்டும் என்பதில்லை.

சேவை செய்வதில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். சேவை என்றால் நிறைய பணம் வேண்டும், அதிக மனித பலம் வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. பலனை எதிர்பாராமல் செய்கின்ற எல்லாம் சேவையே. ஒருவருடன் அன்பாக சில மணி நேரம் கதைப்பது என்பதே ஒருவிதத்தில் சேவை தான். எனவே சேவை மனநிலையை வளர்த்துக் கொள்வதால் பல எண்ணுக் கணக்கற்றவர்களுடன் அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியும். காலப்போக்கில் அது பிரேமையாக பாிமாணமடையும்.

அடுத்ததாக எம்முள் ஏற்படுகின்ற ஆசைகளைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவ் உலகியல் ஆசைகள் நிறைவேறுவதால் கர்வம், தற்பெருமை போன்றனவும் அவ் ஆசைகள் நிறைவேறாது விட்டால் ஏமாற்றம், கவலை போன்றனவும் ஏற்பட்டு எமக்குள் இருக்கின்ற அன்பின் அளவை வெகுவாகக் குறைத்து விடுகின்றன. எனவே இவ் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதால் எமது மனதை இலகுவாக நல்ல விடயங்களை நோக்கியும் இறைவனிடமும் திருப்ப முடியும். இதனால் எமது அன்பானது பலமடங்காக அதிகாிக்கும்.

எம் மனதை நல்ல பல எண்ணங்களால் நிரப்பிக் கொள்வதால் தீய எண்ணங்களும் கெட்ட நடத்தைகளும் எம்மில் பிரதிபலிக்காது. இதனால் எம்மில் ஆழமான உறுதியான அன்பு உருவாகும். இவ் அன்பை இறைவனை நோக்கித் திருப்பும்போது அது ஆழ்ந்த பக்தியாகவும் பிரேமையாகவும் உருவெடுக்கும். இதை சொல்வதென்பது மிக எளிமையானது.

(20 ஆம் பக்கம் பார்க்க)

 

 

Comments