பொருளாதார ரீதியில் சிறந்த பயணப்பாதையில் | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார ரீதியில் சிறந்த பயணப்பாதையில்

பல விடயங்களை கருத்தில்கொண்டு இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. அரசாங்கம் எனும் வகையில் நடவடிக்கை எடுக்கும் போது விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள், நிந்தனைகள், தூற்றுதல்கள் போன்றவற்றையெல்லாம் சுதந்திரமான ஜனநாயக நாட்டில் உள்ள உச்சக்கட்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அனுபவிக்கும் ஒரு சந்தர்பமாகவே பார்க்கிறோம். ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களைக் குறைத்தல் மற்றும் பதவியை இல்லாமற் செய்தல் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியே நாட்டு மக்கள் என்னை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். அந்த இரண்டு விடயங்களில் எந்த ஒன்றுக்கும் அன்றும் இன்றும் நான் தயாராக இருக்கிறேன்.

அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
எமது நாட்டில் ஒரு காலத்தில் தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை நீடித்த அனுபவம் இருக்கிறது. அந்த முறையை மாற்றுவதற்காக அதிகாரத்துக்கு வந்த நாம் எந்தவிதமான சவால்கள், பிரச்சினைகள் வந்தாலும் நீண்ட கால அனுபவமுடையவர்கள் என்ற வகையில் அரசியல் துறையைப் போன்றே அனைத்து துறைகளிலும் புத்திஜீவிகளுடன் இணைந்து இந்த நாட்டை சிறந்த நாடாக்குவதே எமது தூய்மையான உயர்ந்த குறிக்கோளாகும். அந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்கிறோம்.
எமது நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்கள், வெளியிடும் கருத்துகள் இருக்கின்றன.

வெளிநாட்டு சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சர்வதேச கடன் காரணமாகவே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக அரசாங்கம் என்ற வகையில் நாமும் கூறியிருந்தோம். இனிவரும் காலங்களில் அவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட மாட்டாதென்பதே நாம் தெளிவாகவும், துணிச்சலாகவும் நாட்டுக்கு வழங்கும் புது வருட செய்தியாகும்.

நாம் பொருளாதார ரீதியில் நல்ல பயணப்பாதையில் தடம் பதித்துள்ளோம். பிரதமரும் நானும் அமைச்சரவையும் மத்திய வங்கியின் பொருளாதார நிபுணர்களும் நல்ல பெறுபேறுகளைப் பெறக்கூடியவாறு எமது பொருளாதாரத்தின் பயணப்பாதையைக் கொண்டுவந்துள்ளோம். இன்றைய நிலமையை எடுத்துக்கொண்டால் எமது வெளிநாட்டு சொத்துக்கள் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரைவிடவும் கூடுதலானதாகும். அடுத்துவரும் சில மாதங்களில் அந்த நிலை மேலும் வளர்ச்சியடையும்.

எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆலோசகராக செயற்படுகிறது. நிதி அமைச்சரும் எமது பொருளாதார நிபுணர்களும் இப்போது வாஷிங்டனில் நிற்கிறார்கள். அங்கிருந்து வரும் தகவல்கள் மிகவும் சாதகமாக உள்ளன. பெரும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக உருவகித்துக்கொண்டு பாதகமாக சிந்தித்து, பொருளாதாரம் வீழ்ச்சியடையப் போகிறது எனக் கூறுவோருக்கு வழங்கும் பதில் அதுவே.
நாம் மருந்து விலைகளை பெருமளவு குறைத்துள்ளோம்.

எந்தவொரு அரசாங்கமும் ஒருபோதும் செய்யாத வேலை. எவரும் கைவைக்காத வேலை. அது தொடர்பில் தலைமையேற்று நாட்டிலுள்ள ஏழைகளுக்காக மருந்து விலைகளைக் குறைத்ததுடன், இலவச சுகாதார சேவை ஊடாக மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்கியமைக்காக சுகாதார அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன். இருதய சத்திரசிகிச்சைகளுக்கு தேவையான ஸ்ரென்களை இலவசமாக வழங்குதலும் அதிலடங்கும்.

கண்வில்லைகள் தொடர்பான மோசடி வர்த்தகம் நீண்ட காலமாக இருக்கிறது. மருத்துவமனைகளுக்கு முன்பாக கடைகளைப் போட்டுக்கொண்டு ஏழைகள் கொள்வனவு செய்யமுடியாத விலையில் விற்றார்கள். ஆனால் இன்று அந்த வில்லைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவ்வாறான விடயங்கள் மக்களுக்கு நிவாரணமளிப்பவையாகும். ஆனால் நாம் ஒரு வேலையும் செய்வதில்லையென பலர் கூறுகிறார்கள்.
இலங்கை போக்குவரத்து சபை 12 பில்லியன் ரூபாய்களை நுீகுஇ நுவுகு ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய நிலையில் பல வழக்குகள் இருந்தன. இபோச தலைவர் தொடக்கம் அலுவலர்கள் வரை நீதிமன்றத்தக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இன்று அந்த அனைத்து வழக்குகளும் முடிவுற்றுள்ளன.

ஒன்றரை வருட காலத்தினுள் 12 பில்லியனாக இருந்த தொகை 6 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. நிமல் சிறிபால டி சில்வா போக்குவரத்து அமைச்சராக பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்பட்டார். ஊழியர் நலன்புரி, செயற்திறன் விருத்தி, நிறுவன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இபோச மற்றும் புகையிரத திணைக்கள காணிகளை அனைத்து அரசாங்கங்களும் சிக்கலாக்கிக் கொண்டன. இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. புகையிரத திணைக்களக் காணிகள் எப்போதும் கொள்ளையிடப்பட்டன. ஆனால் எமது அரசாங்கத்தின் கீழ் அனைத்துப் பிரச்சினைகளையும் சீர்செய்து, அவற்றை நிதி அமைச்சின் கீழுள்ள நிறுவனத்துக்கு ஒப்படைக்க முடிந்துள்ளது.
அதே போன்று கட்டுநாயக்கா விமான நிலையம் தொடர்பில் சில விமர்சனங்கள் இருந்தன. நான் அது தொடர்பில் தொடர்புடைய நிறுவனங்களிடம் கேட்டேன். இப்போது ஓடுபாதை 380 ரக விமானங்கள் தரையிறங்கக்கூடிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. குறுகியகாலத்தினுள் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடிந்துள்ளது.

விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற கடைகள் அனைத்து அரசாங்கங்களாலும் தமக்கு நெருக்கமானவர்களுக்கே வழங்கப்பட்டன. கடந்த காலத்தில் அவற்றில் அதிகமானவை அமைச்சர்களுக்கே சொந்தமாக இருந்தது. முதற்தடவையாக இந்த கடைகளை அரசாங்கம் கேள்விமனுக் கோரல் முறையில் வழங்கியது. முன்னர் இலஞ்சம் பெறப்்பட்டு கடைகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் 24 வீத வருமானமே கிடைத்தது.

இந்த கேள்வி கோரல் முறையினால் வருமானம் 40 வீதமாக அதிகரித்துள்ளது.
மருத்துவ பட்டத்துக்காக அரசாங்கம் தீர்மானித்திருக்கும் முறைமைகளில் மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தகைமையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. வருடாந்தம் நாட்டிலிருந்து எழுபத்தைந்து ஆயிரத்தக்கும் எண்பத்தைந்து அயிரத்துக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

வருடாந்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரையிலான மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தாலும் இருபத்தியையாயிரம் பேரே அரசாங்கத்தின் இலவச கல்வி வாய்ப்பில் பல்கலைக்கழகம் செல்ல முடியும்.
முன்னரென்றால் வசதிபடைத்தவர்களே பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். இப்போது ஏழை குடும்பத்தினரும் ்தம்மிடம் உள்ள நகைகளை விற்று காணிகளை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்.
அதனையும் நாம் சிந்திக்க வேண்டும். உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள கல்வி முறைகள் போன்று கல்வி திறந்து விடப்பட வேண்டும். கல்விக்கு வயது இல்லை. பிள்ளைகளின் கல்விதான் முக்கியமானது. இலவசக் கல்வியைப் பலப்படுத்துவோம்.

பல்கலைக்கழக துறையை மேலும் பலப்படுத்துவோம்.
மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பில் அனைவரது கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலமைக்கான பொறுப்பு, அதன் சட்டபுூர்வ அதிகாரம் மற்றும் உரிமையுள்ள நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படும். நிறுவன அதிகாரம் தொடர்பில் நிலவும் கயிறு இழுப்பே இந்த அனர்த்தத்துக்கு காரணமாகும். மறுபக்கம், உங்களுக்குத் தெரியும் இந்த குப்பை மேட்டை வைத்திருக்க வேண்டிய தேவை சிலருக்கு இருந்தது. இங்கு குப்பை நிறைவது சிலருக்கு விருப்பம்.

குப்பை லொறியொன்று வரும்போது அங்குள்ள தரகர்களுக்கு 1500 ரூபா வழங்க வேண்டும். திரும்பிச் செல்லும் போது 1000, 1500 ரூபா வழங்க வேண்டும். இவ்வாறான நிலைதான் இருந்தது. எவரையும் குற்றம் சாட்டத் தேவையில்லை. பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நேரத்தில் தீர்க்காது விட்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நாட்டில் இடம்பெறக் கூடாது. அதற்கு அரச அலுவலர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கினாலும் அவர்கள் மீளப் பிறக்க மாட்டார்கள். நாம் நாடென்ற வகையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க அனைத்து துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments