பென்குயின்கள் | தினகரன் வாரமஞ்சரி

பென்குயின்கள்

பென்குயின்கள் தென் அரைக் கோளத்தில் வாழும் பறக்காத பறவைகளாகும். இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப்பகுதிகளில் மட்டுமல்ல, வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு.

பென்குயின் வகைகளில் மிகப் பெரியது சக்கரவர்த்தி பென்குயின் ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதிலும் கூடிய எடையைக் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின்களே மிகச்சிறிய பென்குயின் வகையாகும்.

இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்ளே வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப் பகுதிகளில் வாழக்கூடியவை. சிறிய வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகளிலிலோ வெப்பக் காலநிலைப் பகுதிகளிலோ கூடக் காணப்படுகின்றன.

பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு மிகச் சிறப்பாக இசைவாக்கம் பெற்றுள்ளன. Flipper களாக மாற்றம் பெற்றுள்ள இவற்றின் சிறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் நீரில் பென்குயின்கள் பிரமிக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை.

இவற்றின் இறகுகளிடையே ஒரு படைக் காற்று இருப்பதால், நீரில் மிதப்பதற்கு இலகுவாக உள்ளது. இதனால் தான் நீரில் சுழியோடும் பென்குயினின் பின்னால் தொடராக நீர்க்குமிழிகளைக் காணலாம். இறகின் கீழுள்ள இக்காற்றுப் படலம், அத்லாந்திக்கின் குளிரில் உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப வலயங்களில் வாழும் பென்குயின்களின் இறகுகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவை.

சுழியோடும் பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் சுழியோடுவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு சுழியோட்டமும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்குச் சுழியோடவும் அவற்றால் முடியும். பெரிய சக்கரவர்த்திப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன.

ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இவற்றின் செவிப்புலன் மிகச்சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். 

Comments