கே.கே.எஸ் தொழிற்சாலையும் மீளுயிர்ப்புக் கனவுகளும் | தினகரன் வாரமஞ்சரி

கே.கே.எஸ் தொழிற்சாலையும் மீளுயிர்ப்புக் கனவுகளும்

ரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் ஒன்று. ஆனாலும் இன்னும் சில வருடங்களில் அப்படி ஒரு தொழிற்சாலை இருந்த சுவடே தெரியாமல் உருக்குலைந்து போகும் நிலை உருவாகியுள்ளது. யுத்தம் முடிவுற்று இன்றைக்கு 08 வருடங்கள் கடந்தும் அபிவிருத்தி என்ற போர்வைக்குள் அகப்படாமல் முடக்கப்பட்டுள்ள வளங்களுள்ளே காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் உள்ளடங்குகின்றது. பல தரப்பு விசனங்களுக்கு மத்தியிலும் எந்தவொரு விமோசனமுமின்றி கொடிய முட்செடிகளால் சூழப்பட்டுள்ளது அந்த தொழிற்சாலை.

1950 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய பொக்கிசங்களுள் ஒன்றாக காணப்படுகின்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையானது யாழ். மாவட்டத்தில் அமையப்பெற்ற மிகப் பெரிய தொழிற்சாலையாக காணப்படுகின்றது. சுமார் 687 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இத் தொழிற்சாலையானது 1300 வரையான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர இதர பணிகளுக்காக தற்காலிக தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர். இத் தொழிற்சாலையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தொழில் ஸ்தாபனமாக அமைந்திருந்தது. இங்கு வருடமொன்றுக்கு760,000 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தியும் இடம்பெற்று வந்தது.

1990ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலை காரணமாக சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டதுடன் பாரியளவு தொழில் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் நிர்க்கதியாக்கப்பட்டனர். போராட்ட சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு சீமெந்து தொழிற்சாலையையும் அதனுடனான பாரியளவிலான நிலப் பரப்பையும் இலங்கை இராணுவத்தினர் கையகப்படுத்திக்கொண்டு குறித்த நிலப்பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயமாகவும் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

இப்போது காங்கேசன்துறைப் பிரதேசத்தின் ஒரு பகுதி நிலம் விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் மீளக்குடியேறி வருகின்றனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் ஒரு பகுதி எல்லை வரை மக்களின் காலத்தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று கைகூடியுள்ள போதும் சீமெந்து தொழிற்சாலையின் புனரமைப்புச் செயற்பாடுகள் எதுவுமே முன்னெடுக்கப்படாமல் இன்னமும் உருக்குலைந்த எலும்புக்கூடாகவே நின்றுகொண்டிருக்கின்றது.

மீள ஆரம்பித்தல் தொடர்பான

நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தைகளும்

தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பல தடவைகள் வெவ்வேறான அறிவிப்புகள் வந்தவண்ணமே இருந்தன. 2008 இல் இந்திய நிறுவனமொன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பொறுப்பேற்று நடத்தப் போவதாகக் கூறப்பட்டது. அதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தன தொழிற்சாலையை மீளமைக்கும் பணிகளும் இடம்பெற்றன. ஆனால் என்ன நடந்ததென்று தெரியவில்லை அந்தப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டன. 2014 ஆம் ஆண்டளவில் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் அதன் அரச பங்காளர்களும் இணைந்து 1.5 பில்லியன் ரூபா முதலீட்டில் தொழிற்சாலையை பகுதியளவில் கட்டியெழுப்ப முன்வந்திருந்தனர் ஆயினும் இச் செயற்பாடுகள் பேச்சளவிலேயே முற்றுப்பெற்று விட்டன.

இதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு அடிப்படையில் முன்வந்திருந்தனர். சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு 4 ஆயிரம் கோடி ரூபா நிதி தேவைப்படுகின்ற போதும் குறித்த நிதியை முதலீடு செய்வதற்கு கொரியா, இந்தியா, சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்வந்த போதும் அவை தொடர்பான பேச்சுக்கள் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றது. அதன் பின்னரும் இதோ அதோ என காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீளுயிர்ப்பு கதைகள் உலவவே செய்தன எல்லாமே கானல் நீர்தான்.

கடைசியாக கடந்த 25.04.2016 அன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், சீமெந்துக் கூட்டுத்தாபன தலைவர் ஹூசைன் பைலா சீமெந்துக் கூட்டுத்தாபன பணிப்பாளர் ரியாஸ் சாலி போன்றோர் தமிழ் தலைமைகளுடனும் வடக்கு மாகாணசபை பிரதிநிதிகளுடனும் யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. இதில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் காரசாரமான முறையில் இடம் பெற்று தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை அமைச்சர்கள் அதிகாரிகள் போன்றோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். ஆனால் இற்றைக்கு பலமாதங்கள் கடந்தும் அது தொடர்பான எந்தவொரு காய் நகர்த்தலையும் முன்னெடுக்கவில்லை. செயற்பாடுகள் வெறுமனே வாய்ப்பேச்சுக்களோடு நின்று விடுகின்றனவே தவிர வேறொன்றும் இல்லை.

சூறையாடப்படும் வளங்கள்

பொதுமக்களால் உள் நுழைய முடியாத உயர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளே அகப்பட்டிருந்த கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரப் பாகங்கள், இரும்புக் கேடர்கள், உபகரணத் தொகுதிகள், இரும்பு உலைகள் போன்றவை மிக அண்மைக் காலங்களில் துண்டாடப்பட்டு பழைய இரும்பு விற்பனைக்காக அவை அகற்றப் பட்டிருந்ததாகவும் அதன் மூலம் கிடைத்த 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களில் கொள்ளுப்பிட்டியில் 25 மாடிகள் கொண்ட அலுவலகம் அமைக்கப்படுவதாக ஜே.வி.பி பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன் நெத்தி 15-. 12. -2015 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு வெளியிட்டிருந்தார்.

தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதால்

ஏற்படக் கூடிய நன்மைகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீளவும் புத்துயிர் பெறுமாக இருந்தால் வடக்கில் பல நூற்றுக் கணக்கானோர் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடிய சாதகமான சூழல் உருவாகும். சுமார் 1200 தொடக்கம் 1300 வரையான தொழிலாளர்களை உள் வாங்கிக் கொள்ளும் இத் தொழிற்சாலை மூலமாக பல நூற்றுக் கணக்கானோர் நேரடியாகவும் மறை முகமாகவும் தொழில் வாய்ப்பினை பெற முடியும்.

இன்று சந்தையில் 50 கிலோ கிராம் சீமெந்துப் பை ஒன்றின் விலை 950 தொடக்கம் 1000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு சீமெந்தைக் கொண்டு வருவதில் உள்ள போக்குவரத்துச் செலவீனங்கள் உள்ளடங்கலாகவே சீமெந்துப் பையின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. குறித்த விலையானது மாவட்டத்துக்கு மாவட்டம் தளம்பல் நிலையில் உள்ளது. எனவே, யாழ்ப்பாணத்தில் சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் விலையில் ஏற்ப்படும் தளம்பல் நிலையினை கட்டுப்படுத்த முடிவதுடன் நியாயமான விலையில் சீமெந்தைக் கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும்.

உள் நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிக்கப்படுவதனால் சீமெந்து உற்பத்தியை கணிசமான அளவு குறைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அத்துடன் விலை நிர்ணயத்தில் சாதகமான தன்மையை ஏற்படுத்தவும் முடியும்.

எதிர்வு கூறப்படும் சவால்கள்

எப்பொழுதும் எந்தவொரு விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். அந்த வகையில் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதில் உள்ள பிரதானமான சவாலாக சுண்ணாம்புக்கல் அகழ்வுப் பிரச்சினை காணப்படுகின்றது. சீமெந்து உற்பத்தியின் பிரதான மூலப் பொருளாக சுண்ணாம்புக்கல் காணப்படுகின்றது. இத் தொழிற்சாலைக்கு தேவையான சுண்ணாம்புக்கல் அதனை அண்மித்த பிரதேசங்களிலேயே அகழ்ந்தெடுத்து உற்பத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதர சேர்க்கைப் பொருட்களான களிமண் மன்னார் முருங்கன் பிரதேசத்தில் இருந்தும் கிளிங்கர் என்ற மூலப்பொருள் இறக்குமதி மூலமாகவும் எடுத்துவரப்பட்டு சீமெந்து உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வந்தது.

சுண்ணாம்புக்கல் அகழ்ந்து எடுக்கப்படுவதனால் கடல்நீருடன் நன்னீர் கலக்கும் அபாயம் இருப்பதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் வட மாகாணசபையில் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்து தொழிற்சாலை மீளஆரம்பிக்கும் செயற்பாட்டை கைவிடுமாறும் கூறியிருந்தார்.

இதன்படி தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்பட்டால் அதிலிருந்து வெளியேறும் தூசு மாசுக்களால் மக்கள் உடல் நலக்கேடுகளையும் விவசாயப் பாதிப்புக்களையும் எதிர்கொள்வர் என்பதையும் கருத்தில் கொண்டு தொழிற்சாலை மீள ஆரம்பிக்கும் செயற்றிட்டத்தை கை விடக்கோரி குறித்த பிரேரணையில் மேற் கூறிய நியாயங்கள் முன்வைக்கப்பட்டன.

சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்பாக அங்கு பணியாற்றிய எம்.அருளானந்தன் என்பவர் கூறுகையில் தொழிற்சாலை இயங்கி வந்த காலத்தில் தொழில் நிலையில் அனைவரும் திருப்தி கொண்டிருந்ததாகவும் இன்று தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதில் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினையும் எமது பிரதேச தலைமைத்துவங்களின் பொறுப்பற்ற தன்மைகளையும் அவர் சாடினார்.

தொழிற்சாலையின் ஆரம்ப காலம் தொட்டு 1990 வரை தொழிற்சாலைச் செயற்பாடுகள் சுமூகமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் தொழிற்சாலைக் கழிவகற்றல் மற்றும் தூசு அகற்றுவதற்கான பொறிமுறைகள் நிறுவப்பட்டிருந்ததாகவும் சுற்றுச் சூழலுக்கு பெருமளவில் பாதிப்புக்கள் இடம் பெற்றிருக்கவில்லை என்றும் அங்கு பணி புரிந்த சிலரது அனுபவங்களினுாடாக அறிந்து கொள்ள முடிந்தது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையானது தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவினுள்ளேயே அமைந்துள்ளது. தொழிற்சாலை தொடர்பான சில தகவல்களையும் நிலைப் பாடுகளையும் பற்றித் தெரிந்து கொள்வதற்காக தெல்லிப்பளை பிரதேசசெயலாளரிடம் நேரில் சென்று கலந்துரையாடிய போது குறித்த தொழிற்சாலையும் அதனுடைய செயற்பாடுகள் மற்றும் செயற்றிட்டங்கள் யாவும் அரசியல் மயப்படுத்தப் பட்டதாகவும் சில தகவல்களை வெளியிடுவதில் அரசியல் ரீதியான அழுத்தங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதனையும் காரணம் காட்டி தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.

சுண்ணாம்புக்கல் அகழ்வதனால் தான் பிரச்சினை என்றால் அதற்கான மாற்று வழிகளில் ஒன்றை தெரிவு செய்ய முடியும். சுண்ணாம்புக்கல் அகழும் இடங்கள் மண்ணால் நிரவப்பட்டு சமதரையாக்கப்பட்டு மரங்கள் நடப்பட முடியும். இல்லையேல் வேறு இடங்களில் இருந்து சுண்ணாம்புக்கல்லை எடுத்து வந்து உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறக்கூடிய தூசுக்களை தொழிற்சாலைக்குள்ளேயே கட்டுப்படுத்தி சேமித்து வைக்கும் திட்டங்களைக் கொண்டு வந்து அதற்கான தொழில் நுட்பங்களை கையாண்டு பூரணமான பயன்களை அடைந்து கொள்வதுடன் அதன் மூலம் சுற்றுச் சூழல் தொடர்பான பாதிப்புக்களை கணிசமான அளவு குறைத்துக் கொள்ளவும் முடியும்.

எனவே பிரச்சினைகளை மாத்திரம் பிரேரணையாக முன்வைப்பதை நிறுத்திவிட்டு உரிய திட்டமிடல்களை மேற் கொண்டு உரிய முறையில் செயற்படுவோமானால் பாரியளவிலான முன்னேற்றங்களை அடைந்து கொள்ளலாம்.

எது எவ்வாறாயினும் வட பிரந்தியத்தில் ஒரு பாரியளவிலான தொழிற்சாலை மீள நிறுவப்படுதலும் அதனுாடாக வேலைவாய்ப்பு பொருளாதாரம் போன்றன கட்டியெழுப்பப் படுவதற்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முடியும். தொழிற்சாலை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அதன் சாதக பாதக தன்மைகளைப் பரீசிலனை செய்து திட்டத்தை அமுலாக்கம் செய்ய வேண்டியது துறைசார்ந்தவர்களின் கடமையல்லவா?

ஆர் . ஜெயந்தன்.

ஊடகக் கற்கைகள்,

யாழ். பல்கலைக்கழகம்.

Comments