கண்ணீரும், கைகுட்டையும் | தினகரன் வாரமஞ்சரி

கண்ணீரும், கைகுட்டையும்

அறையைப் பூட்டி விளக்கணைத்து

இருளுக்குள் அமர்ந்திருந்து

என் விழிகள் வடித்த கண்ணீர்

எவருக்குமே தெரியாது என்றெண்ணினேன்

என் கைக்குட்டையோ என் கண்ணீரால்

நன்றாக நனைந்து என் கரங்களையும் ஈரமாக்கியது

நனைந்த கைக்குட்டை மெல்லிய குரலால் பேசியது

என் காதில் விழுந்தது

கவியே என்னைப் போன்ற கைக்குட்டைகள் எல்லாம்

இந்நேரம் எத்தனை அழகாக மடிக்கப்பட்டு

வாசனை திரவியங்களால் சுகந்தமூட்டப்பட்டு

இத்தனை சுகமாக இருக்க வேண்டிய இடங்களில்

இருக்கும் நானோ இங்கே அளவில்லாத கண்ணீரில்

நனைந்து ஊறிப் போய்விட்டேனே என்றது

என்று புலப்படாது

அந்த கைக்குட்டையின் புலம்பலால்

என் கண்ணீர் மேலும் அதிகமாகியது

கைக்குட்டையே கேள்!

நிலத்தின் மீது கண்ணீர் சிந்தினேன்

நிலமகள் என்னை நிந்தித்தாள்

விளங்காது இந்தப் பூமி உன் கண்ணீரால் என்றாள்

நீண்டு நெளிந்து செல்லும்

கங்கையிலும் கண்ணீர் சொரிந்தேன் – அந்த

கங்கையும் காதலர்களின் கண்ணீர்

வேண்டாமெனக் கடிந்துகொண்டாள்

ஆற்று நீரால் அகமகிழ்ந்து வாழ்வோரெல்லாம்

உங்கள் கண்ணீரால் கவலையுற்று

கடுஞ்சோர்வு கொள்வரே என்றதுள்

கடைசியாக கடலலைகளோடு என்

கண்ணீரைக் கலந்தேன்

கடலன்னையும் என்னைக் கைவிட்டு

கரித்து வைதாள்

காதலர் கண்ணீரால் கடல்நீர்

மேலும் உப்பு கரித்து யாருக்கும்

உதவாமல் போகுமென்றாள்

என் கண்ணீரை சிந்த ஏற்ற இடம்

இந்த மண்ணகத்தில் இல்லையா

சொல் கைக்குட்டையே!

நீருக்குள் மீனழுதால்

யாருக்கும் தெரியாது

தேருக்குள் தெய்வம் அழுதால்

ஊருக்குத் தெரியாது

பூவுக்குள் தேனழுதால்

சாமிக்குத் தெரியாது – ஒரு

பூவையால் அழுகின்றேன்

உனக்கது புரியாது கைக்குட்டையே 

Comments