மாகாண சபைத் தேர்தல்களில் ஏமாற்றியவர்களுக்கு உரியபாடத்தை முஸ்லிம்கள் புகட்டுவர் | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைத் தேர்தல்களில் ஏமாற்றியவர்களுக்கு உரியபாடத்தை முஸ்லிம்கள் புகட்டுவர்

நேர்காணல் 
எம்.ஏ.எம்.நிலாம்  

முஸ்லிம் காங்கிரஸ் என்ற வாகனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பழுதடையவில்லை. அதன் சாரதியான எமது தலைமைத்துவம் உறுதிமிக்கதாகவே காணப்படுகிறது. அதில் பயணிக்கும் சிலர் வேறு வாகனத்தில் பயணிக்க ஆசைகொண்டுள்ளார். மற்றும் சிலர் புதிய வாகனமொன்றை எடுத்து சாரியாகச் செயற்பட முனைப்புக் காட்டுகின்றனர் எனத்தெரிவித்த மேல் மாகாணசபை, கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபிரஹீம் பாதை மாறிச் செல்வோரின் எதிர்காலம் எவ்வாறாக அமையும் என்பதற்கு காலம் பதில் சொல்லும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரக் கூடிய உள்ளூராட்சித்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது முஸ்லிம்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள். எம்மை ஏமாற்றியவர்களுக்கு உரியபாடத்தைப்புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணசபை உறுப்பினர் ஷாபி ரஹீம் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த சிறப்புப் பேட்டியின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவரது பேட்டியின் முழு விபரம் வருமாறு.

 

கேள்வி – இவ்வருட இறுதிக்குள் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலையும் அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸிடம் இருக்கின்றதா?

பதில் – எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும், சக்தியும் முஸ்லிம் காங்கிரஸிடம் இருக்கின்றது. சிலரது சில்லறைச் சலசலப்புகளால் கட்சி ஆட்டம் கண்டிருப்பதாக முரண்பட்டு வெளியேறியிருப்பவர்கள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அது ஒருபோதும் நனவாகப் போவதில்லை.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் எமக்குக் கிடைத்த நல்லவாய்ப்பை நாம் இழக்கவேண்டியேற்பட்டது. அன்று நாம் மோசம் போனோம் விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப் போனதால்தான் இந்த நிலை ஏற்பட்டது. இதில் ஒன்றிரண்டு விடயங்களை சுட்டிக்காட்டமுடியும்.

மினுவாங்கொடை பிரதேச சபைத்தேர்தலின் போது நாம் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தோம். இறுதி நேரத்தில் கல்லொளுவை வட்டாரத்தில் பிரதான கட்சிகளிரண்டும் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தத் தயாராகின. மு.காவும் இறங்கினால் முஸ்லிம் வாக்குவங்கி சிதறிப் போகலாம் என்பதாலும். அன்றைய முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க எமக்களித்த வாக்குறுதி காரணமாகவும் நாம் ஐ.ம.சு மு வேட்பாளருக்கு ஆதரவளிக்க உடன்பட்டோம். அதற்குப் பதிலீடாக மினுவாங்கொடை நகர சபைத்தேர்தலின் போது நாம் நிறுத்தும் வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பதாக உத்தரவாதமளிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஐ.தே.க – ஐ.ம.சு.மு இரண்டிலும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதலமைச்சரின் வாக்குதியை நம்பி அவரது வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச்செய்தோம். அடுத்துவத்த மினுவாங்கொடை நகர சபைத்தேர்தலில் எமது வேட்பாளருக்கு இடமளிக்கப்பட்டபோது அவர் திட்டமிட்டு மறைமுகமாகச் செயற்பட்டு தோற்கடிக்கப்பட்டார். இதன்போது தான் நாம் நம்பி மோசம் போனதை உணர்ந்தோம். அது மட்டுமல்ல காலப்போக்கில் தாம் புறக்கணிக்கப்பட்டோம். இந்தத் தவறை இனியொருபோதும் நாம் செய்யமாட்டோம்.

 

கேள்வி – வரக்கூடிய தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் எவ்வாறு செயற்படப்போகிறீர்கள்?

பதில் – இவ்வருடத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலின் போது நாடுமுழுவதிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடுவது என்ற முடிவை எடுத்திருக்கின்றது. அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் பிரதேச சபை எல்லைகளில் தாம் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றோம்.

ஆனாலும் இங்கு இன்னுமொரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மினுவாங்கொடை பிரதேச சபையின் கீழ்வரும் கல்லொளுவை கிராம வட்டாரம், அதேபோன்று, நீர்கொழும்பில் கூடுதலாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் பிரதான கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் பட்சத்தில் எமது வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர் வெற்றி பெறவாய்ப்பு இருப்பதால். இம்முறையும் தாம் இணைத்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது எமது வேட்பாளருக்கு வாய்ப்பைக்கோருவோம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப சில முடிவுகளை எடுக்க நேரிடலாம். சில இடங்களில் தனித்துப் போட்டியிடக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. அதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் கிடையாது. உறுதியாகவே இருப்போம்.

 

கேள்வி – உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாளப்போகிறீர்கள்?

பதில் – இந்த விடயத்தில் நாம் சமூகம் சார்ந்து நின்று சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒன்று கூடித்தீர்மானிக்கவேண்டும். எமது மக்களிடம் போய்ப் பேசி தெளிவு ஏற்படுத்த வேண்டும். பள்ளிவாசல் நிருவாகம், பொது அமைப்புகள் சிவில் சமூகத்தவர்களை அணுகி கலந்துரையாடி போட்டித் தவிர்ப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. மக்களாதரவை பெற்றவர்களை தேர்ந்தெடுத்து களமிறக்கித் திட்டமிட்டுள்ளோம்.

 

கேள்வி – தேர்தலொன்றுக்கத் தயாராகும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உட்கட்சிப்பூசல் பாதக விளைவுகளை தோற்றுவிக்காதா?

பதில் – உட்கட்சிப்பூசல் எந்தக் கட்சியில் தான் இல்லை. இதனைப் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கட்சியிலும் தலைமைத்துவத்திலும் குறை காண்பவர்கள் தமது சுயநலனுக்காகவே அவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

மு.கா.வாகனத்தில் எந்தக் குறையும் கிடையாது. சாரதியும் தகுதி மிக்கவராகவே உள்ளார். அனுபவம் மிக்கவர். ஆனால் அதில் பயணிப்போரில் சிலர் மற்றைய வாகனங்கள் மீது ஆசை கொண்டு அவற்றுக்கு மாறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். ஒரு சிலர் தமக்காக புதுவாகனத்தை வாங்கும் முயற்சியில் உள்ளனர். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. விரும்பினால் போவதற்கு தடைகிடையாது. ஆனால் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதைத்தான் கண்டிக்கின்றோம்.

முகாவிலிருந்து யாரையும் நாம் வெளியேற்றவில்லை. தவறிழைத்தவர்களைக் கூட திருத்தி நல்வழிக்குக் கொண்டுவரவே முயற்சிக்கின்றோம். தாமாக வெளியேறியோர் குறித்து எம்மால் எதுவும் செய்ய முடியாது. தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ளவா முடியும்?

முகா தலைமைத்துவத்தின் மீது எமக்கும், எமது மக்களுக்கும் பூரணமான நம்பிக்கை இருக்கின்றது. வரக்கூடிய தேர்தல்களின் போது இதனை எம்மால் நன்கு கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கும். மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள். உண்மையான போராளிகள் ஒருபோதும் கட்சியையோ, தலைமைத்துவத்தையோ காட்டிக்கொடுக்க மாட்டார்கள். உண்மையான மு.கா போராளிகள் பணத்துக்கும், பதவிக்கும் ஒருபோதும் சோரம் போகமாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் ஆழமான வேரூன்றிய மரம். அதனை எவராலும் அசைக்க முடியாது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

Comments