குப்பைமேடு சரிந்து 16 பேர் பலி; 145 வீடுகள் புதையுண்டன | தினகரன் வாரமஞ்சரி

குப்பைமேடு சரிந்து 16 பேர் பலி; 145 வீடுகள் புதையுண்டன

கொலன்னாவ, மீதொட்டமுல்ல பாரிய குப்பைமேடு சரிந்து விழுந்ததில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 145 வீடுகள் முற்றாக அழிந்ததுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் பகல் 3.00 மணியளவில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகளில் முப்படையினரும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். விமானப் படையினரின் விசேட பெல் ஹெலிகொப்டர் தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளதுடன், விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் புதுவருட தினமான, நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற குறித்த அனர்த்தம், அப் பகுதி மக்களை மாத்திரமன்றி முழு இலங்கையிலுமுள்ள மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் 5 சிறுவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் இறுதிக் கிரியைகளை முற்றுமுழுதாக அரச செலவில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பல ஆயிரம் தொன் அளவில் நிறைந்து காணப்படும், கொலன்னாவ பகுதியிலுள்ள மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி, மக்கள் குடியிருப்பின் மீது திடீரென சரிந்ததை அடுத்து இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், பல்லாயிரம் எடை கொண்ட குப்பைகளால் மூடப்பட்டதோடு, பல வீடுகள் முற்றுமுழுதாகவும், பல வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ள நிலையில், இடிபாடுகள் மற்றும் குப்பை மேட்டுக்குள் சிக்கி மற்றும் சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அனர்த்தம் காரணமாக 145 வீடுகள் சேதமடைந்து, அப்பிரதேசத்தில் வசித்து வந்த சுமார் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டவர்கள், கொலன்னாவ ட்ரான்ஸ் டி சில்வா மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயினும், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றதோடு, குறித்த சம்பவத்தில் காயமுற்ற 13 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கும், அவர்கள் தொடர்பான உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும், மீதொட்டமுல்ல ராகுல வித்தியாலயத்தில் விசேட தகவல் மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு சமூகமளித்து, காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்கள் தொடர்பான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்பின் கீழ், முப்படையினர் மற்றும் பொலிசார், தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதோடு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் கீழ், மேற்கு பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் முனசிங்க, பொது ஒழுங்குகள் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மீட்புப் பணிகளுக்காக சுமார் 500 இற்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது தவிர பொலிசார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உறுப்பினர்களும் இப்பணியில் இணைந்துள்ளனர்.

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கும், அவர்களின் நலநோம்பு நடவடிக்கைகளுக்காகவும் அனர்த்தத்திற்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும், உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி முப்படையினர், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, அவசர உதவிகளுக்காக, கடற்படையின் பெல் 212 (Bell 212) மற்றும் இரு எம்.ஐ 17 (MI 17) ரக ஹெலிகொப்டர்கள், இரத்மலானை வான்படை தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குப்பைமேடு சரிவுடன் குப்பைமேட்டில் தீ அனர்த்தமும் ஏற்பட்டது. இத்தீயினை அணைப்பதற்கு விமானப் படையினர் ஹெலிக்கொப்டர்களையும் பயன்படுத்தி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக, நேற்றைய தினம் (15), பேராதெனிய பல்கலைக்கழகத்தின், புவியியல் பிரிவைச் சேர்ந்த 10 பேரைக் கொண்ட குழு ஒன்று வரவழைக்கப்பட்டதோடு, சுரங்கவியல் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளின் குழு ஒன்றும், குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் (SOCO) குழு ஒன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

குப்பைமேட்டு அனர்த்தில் பாதிப்படைந்துள்ள மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரயதர்சன யாப்பா தெரிவித்தார்.

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.