கரீபியன் மண்ணில் மீண்டெழுமா பாகிஸ்தான்? முதலாவது ரி/20 போட்டி இன்று | தினகரன் வாரமஞ்சரி

கரீபியன் மண்ணில் மீண்டெழுமா பாகிஸ்தான்? முதலாவது ரி/20 போட்டி இன்று

தொடர் தோல்விகளினால் பல விமர்சனங்களுக்குள்ளான பாகிஸ்தான் அணி நான்கு ரி/20 போட்டி 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டித் தொடர்களில் பங்குகொள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் முதல் ரி/20 போட்டி பாபடோஸில் இன்று நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணி அண்மைக்காலமாக டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து பின்தங்கிய நிலையிலேயே இச்சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அவ்வணி கடைசியாக மோதிய 6 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளையே சந்தித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய ரி/20, சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் வென்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் அவ்வணி முதல் முறையாக முதலிடம் பெற்று புகழின் உச்சிக்கே சென்றது.

அதன் பின்னர் நடைபெற்ற நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட், அவுஸ்திரேலியாவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களை முழுமையாக தோல்வியடைந்தது. இத்தோல்விகளின் பின் அவ்வணித் தலைவருக்கெதிராகவும் முன்னணி வீரர்களுக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. பல இழுபறிகளுக்கு மத்தியில் அணியில் பல மாற்றங்களுடன் டெஸ்ட் அணிக்கு மிஸ்பாஉல் ஹக் தலைமை பதவிக்கு மீண்டும் தெரிவானார். அவரின் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது.

பாகிஸ்தான் தேர்வுக் குழுவால் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு சப்ராஸ் அஹமட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த கால ஒருநாள் போட்டிகளின் மோசமான தோல்விகளுக்கு முகம் கொடுத்த ஒருநாள் அணித் தலைவர் அஸார் அலி தலைவர் பதவியிருந்து மட்டுமல்ல ஒருநாள் போட்டி அணியிலிருந்தே ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியைப் பொறுத்த வரை பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் மேற்கிந்தியத் தீவுகளை விட சற்று முன்னிலையிலேயே உள்ளது. அவ்வணியின் சுழற் பந்து வீச்சாளர் யசீர் ஷா பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முக்கிய பந்துவீச்சாளராகவுள்ளதுடன் பாகிஸ்தான் அணியின் பல வெற்றிகளுக்கு இவரின் பந்து வீச்சே கைகொடுத்தது. இத்தொடரிலும் இவரையே பெரிதும் நம்பியுள்ளது பாகிஸ்தான் அணி. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கமரன் அக்மல், அஹமட் ஷெசாட் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அனுபவ வீரர்களான யூனிஸ்கான். மிஸ்பாஉல் ஹக், அஸார் அலி, சபீக் போன்ற முன்னணி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் எதிரணி பந்து விச்சாளர்களுக்கு சவாலாக விளங்குவாரகள்.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் கடைசியாக கடந்த வருடம் இந்திய அணியுடன் தன் சொந்த மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளில் தோல்வியுற்று தொடரை இழந்தது. பல சிறந்த பந்து விச்சாளர்கள், பல அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் தேர்வுக் குழுவுடனும், அந்நாட்டுக் கிரிக்கெட் சபையுடனும் அடிக்கடி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வதால் ஒரு சிறந்த அணியை உருவாக்குவதற்கு கடந்த பல வருடங்களாக மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் முடியாமலுள்ளது.

இத்தொடர் தன் சொந்த மண்ணில் நடைபெறுவதாலும், தொடர் தோல்விகளால் பல விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள இவ்வணி இத்தொடரிலாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் மோதும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி அட்டவணை-

ரி/20

மார்ச் 26ம் திகதி 1வது போட்டி

மார்ச் 30ம் திகதி 2வது போட்டி

ஏப்ரல் 01ம் திகதி 3வது போட்டி

ஏப்ரல் 02ம் திகதி 4வது போட்டி

சர்வதேச ஒருநாள் போட்டி

ஏப்ரல் 07ம் திகதி 1வது போட்டி

ஏப்ரல் 09ம் திகதி 2வது போட்டி

ஏப்ரல் 11ம் திகதி 3வது போட்டி

டெஸ்ட் போட்டி

ஏப்ரல் 22ம் திகதி 1வது போட்டி

ஏப்ரல் 30ம் திகதி 2வது போட்டி

மே 10ம் திகதி 3வது போட்டி

எம். எஸ். எம். ஹில்மி 

Comments