சிறு கதை | தினகரன் வாரமஞ்சரி

சிறு கதை

மல்லிகை சி. குமார்

நெனச்சதைவிட ரொம்ப சிறப்பாக கல்யாணம் நடந்திருச்சி’ என்று பெருமையாக எண்ணிய படியே சாப்பாட்டு ஹோலுக்குள் நுழைந்த தங்கமணி...

பரிமாறும் மேசையில் பீங்கான்களுக்கு லஞ்ச் சீட்டை போட்டுக் கொண்டிருக்கும் ரத்னம் அருகில் போய்,

“ரத்னம், இந்த வெடிங் எவ்வளவு சிறப்பா நடந்திச்சோ அதே மாதிரி கல்யாண பந்தியும் சிறப்பா நடக்கணும், அதுலக் கொற இதுல கொறன்னு யாரும் எதுவும் சொல்லக்கூடாது. எல்லாமே நேர்த்தியா நடக்கணும்” என்றார்.

இவர்தான் மாப்பிள்ளையின் தகப்பன். எதிலேயும் ஒரு நேர்த்தி திருப்தி இருக்க வேண்டுமென்று நினைப்பவர். இவரை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் ரத்னம்,

“நீங்கள் எதைப் பத்தியும் கவலப்படாதீங்க. யார் யாருக்கு எது எது பிடிக்குமோ அப்படி எல்லா... ஐட்டமும் இங்க சமைச்சி வச்சிருக்குங்க... வேணு மின்னா நீங்களே ஒருதரம் எல்லாத்தையும் பார்த்துக்கங்க. எத்தனைப் பேத்துக்கு நீங்க சமைக்கணுமின்னு சொன்னீங்களோ அதைவிட அதிகமாகவே சமைச்சிருக்கோம். அப்படியே பத்தாமப் போயிட்டாலும் ஒடனே சமைக்கிறதுக்கு சமையல் காரங்க ரெடியாத்தான் இருக்காங்க...” என்று ரத்னம் சொன்னார்.

“என்னப்பா நீ ஒரு மதிப்பு வச்சியின்னா எல்லாமே சரியாத்தான் இருக்கும்... எதிலும் குறைவு ஏற்படாது, நிறைவாகத்தான் இருக்கும்” என்ற தங்கமணி.

“இப்ப டைம் சரி... சாப்பிட ஆட்களை அழைக்கலாம்தானே?” எனக் கேட்டார். ஓ... தாராளமா அழையுங்க எல்லாம் ரெடியா இருக்கு” என்றார் ரத்னம்.

“ந்தா நீங்க வந்து நில்லுங்கப்பா” என்று சப்ளை செய்யும் இளந்தாரிகளை அழைக்க, அவர்கள் மேசை மீது இருக்கும் ஒவ்வொரு உணவு பாத்திரங்கள் மின்னும் கரண்டியோடு நின்றனர்.

“ஏய் பிரபு, சாதம் சமையல் எல்லாம் எவ்வளவு தான் தாராளமாக இருந்தாலும் நாம கொஞ்சம் கண்டிஷனாகத்தான் இருக்கணும். கரண்டிக்கு வந்த மாதிரி எதையும் அள்ளி வச்சிடக்கூடாது.” என்றான் ராகவன்.

“ஏய் அது மட்டுமில்ல... இங்க இன்னொரு சங்கடமும் இருக்கு எவனாவது வெளியாளுங்க கூட்டத்தோடு கூட்டமா வந்து சாப்பிட்டிட்டு போயிருவானுங்க. அதிலேயும் நாம கவனமா இருக்கணும்” என்றான் சேகர்.

“பாவண்டா எவனாவது வந்து சாப்பிட்டிட்டுப் போவட்டும். திருடவா வருவானுங்க, இல்லையே பசிக்கு சாப்பிடத்தானே வருவானுங்க...” கொஞ்சம் இரக்கப்பட்டு சொன்னான் சுரேஸ்.

அவனை முறைத்துப் பார்த்த ரத்னம்,

“ந்தாப்பாரு சுரேஸ்.... இது அப்படி ஒண்ணும் தர்ம சத்திரமில்ல. வர்றவனுக்கெல்லாம் வாரிக் கொடுக்க. இது ஐயா வீட்டுக் கல்யாணம் நாமத்தான் கவனமா இருக்கணும். அந்த சேகர் சொன்னதில எந்தக் குத்தமுமில்லை. வீணா ஒரு கோப்பை சோறு போறதையும் நான் அனுமதிக்கமாட்டேன். அன்னத்த வீணா விரயம் பண்ணக்கூடாது” என்றான் ரத்னம்.

“பாவமின்னு ஒருத்தனுக்கு ஒரு கோப்ப சோறுக் கொடுத்திட்டாப் போதும், பத்து பேரு கியூவில வந்து நிப்பானுங்க. அப்படி எவனாவது கியூவில நொழைஞ்சி வந்தா தொரத்தியே புடணும்...” என்று கடுமையாகவே சொன்னார்.

இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தங்கமணி,

“இந்தாப் பாருங்க.... இப்ப எதுக்கு அந்தக் கதையெல்லம். இங்க அப்படி எந்தப் பயலும் வரமாட்டானுங்க” என்றவர்,

“வெடிங்கிக்கு எங்க வராம இருந்திடுவாரோன்னு நான் சந்தேகப்பட்ட நம்மத் தலைவர்... இந்தக் கல்யாணத்துக்கு வந்ததுல எனக்கு ரொம்பப் பெரும... அவருக்குத்தான் முதல் விருந்த கொடுக்கணும். அவர் அவசரமா கண்டிக்குப் போக இருக்குதாம். முதல் பந்தியை அவருக்கே வச்சிடுங்க.” என்று சொன்னார்.

“சரிங்க தலைவரையும் அவரோட வந்தவுங்களையும் அழைச்சிக்கிட்டு வாங்க” என்று ரத்னம் சொன்னதோடு மற்ற சப்ளையர்களையும் சுறுசுறுப்பாக இயங்க வைத்தார். சிறிது நேரத்தில் தலைவரையும் அவரோடு சேர்ந்து வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு வந்தார் தங்கமணி.

அவர்கள் சாப்பாட்டு ஹோலை விட்டு வெளியேறும் வரை வேற எவரையும் அதற்குள் அனுமதிக்கவில்லை.

தலைவர் மத்திய மாகாண சபையில் ஓர் உறுப்பினராக இருப்பதால், அவர் இன்று பள்ளேகலைக்குப் போக வேண்டும். எனவே இந்த ஈட்டிங் ஹோலில் அவருக்கும் அவரோடு வந்தவர்களுக்கும் விசேஷ விருந்துபசாரம் நடந்தது.

***

மெயின் வீதியில் கிழக்கு திசை கடைகளின் கடைசித் தொங்கலிலுள்ள சாராயத் தவறணையை கடந்து அப்பாலுள்ள போக்கில் நீர் வடிந்து போகாமல் அடைப்பட்டுக்கிடப்பதால், அதை துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முருகேசு – வடிகான் ஓரத்தில் இருக்கும் மைல் கல்லில் உட்கார்ந்து இருக்கும் சுக்ருவை அண்ணார்ந்து பார்த்துவிட்டு,

“ஏண்டா சுக்கு... பக்கத்து அன்ன பூரணா கல்யாண மண்டபத்தில கல்யாணம் நடக்குதே சாப்பாட்டுக்குப் போகலையா?” என்று கேட்டான்.

“ஆமாண்ணே போகணும்தான்” என்ற சுக்ரு. “இந்நேரம் சாப்பாடு போட்டிருப்பாங்கத்தானே?” எனக் கேட்டான்.

“நேரம் சரி” என்ற முருகேசு தன் வேலையில் ஈடுபட்டான்.

“அங்கப் போறதைப் பத்தி ஒண்ணுமில்ல, ஆனா... கூட்டத்தில நின்று சோறு வாங்குறதுக்குள்ள நல்ல நெரிப்படணும். கியூவில நிக்கவே சங்கடமாக இருக்கும்” என்றான் சுக்ரு.

“அதுக்கென்னா கியூவில நின்று நெரிப்பட்டாலும் ருசியான கொழும்பு கறி வகையோட நல்ல சாப்பாடு கிடைக்கும் தானே...” என்ற முருகேசு போக்குக்குள் கையைவிட்டு எட்டிய தூரம் வரைக்கும் கிடந்த குப்பைகளை இழுத்து வெளியில் போட்டான்.

“அங்க சோறு கெடைக்காதுன்னு யாரு சொன்னது? அது வெல்லாம் கிடைக்கும். ஆனா... சோத்த வாங்கி நான் அங்க வச்சி சாப்பிட மாட்டேன். லஞ்சி சீட்டோட சோத்த சுற்றி எடுத்துக்கிட்டு வெளிய வந்திடுவேன்” என்றான்.

“ஏன்... மண்டபத்துக்குள்ள நல்லா உடகார்ந்திரு சாப்பிடத்தான் மேசை நாற்காலியெல்லாம் இருக்குமே அதுல வச்சி சாப்பிட்டா என்னாவாம்?”

“மாட்டேன்.... சுற்றி எடுத்த சாப்பாட்ட அப்படியே சுடருப் புள்ளைக்கிட்டக் கொண்டு போய் கொடுத்திடுவேன். அது சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரிதான்”

“சுடருப்புள்ளையா? அது யாருடா சுடரு?

“அது வந்து சுடருதான். அதுக்கு வீடெல்லாம் இல்ல. ஸ்டேசனுக்குப் பக்கத்தில பழைய எண்ணக் காம்பிரா இருக்குதில்ல, ஒரு பக்கம் பாதி சுவர் இடிஞ்சி பாழடைஞ்சிக் கெடக்கே... அதுலத்தான் சுடர் இருக்கா..., பாவம் ரெண்டு கண்ணும் தெரியாது. கூனிக் கூனி நடக்குமே ஒரு கெழவி அவத்தான் சுடரோடப் பாட்டி. அந்த ஒயில் ரூம் பக்கம் ஸ்டேஷன்காரங்க யாரும் வரமாட்டாங்க. அதுதான் ஒடைஞ்சிக் கெடக்க. பாவம் அந்த சுடருக்கு அந்த கெழவியம்மாத்தான் துணையா இருக்கா.... ஆனா அது எங்கேயாவது போயி அந்திக்குத்தான் ஏதாவது கொண்டு வரும். முன்னயெல்லாம் கெழவி எங்கப் போனாலும் சுடரையும் கூட்டிக்கிட்டதுதான் போவும். இப்ப அநேகமா சுடர அது தன்னோடக் கூட்டிக்கிட்டுப் போவாது. கெழவிக்கே இப்ப நடக்க முடியாது. இந்த லச்சணத்தில அந்த குருட்டுப் பொண்ணையும் இழுத்துக் கிட்டு அதுவால போக முடியுமா?

அதோட சுடருக்கு ரெண்டு காலும் சமமா இல்ல. வலது காலு கொஞ்சம் குட்ட. அது அவ பொறந்தப் பொறவியாம். ஒரு பத்து வருஷத்துக்கு முன்ன ஸ்டேஷன்ல வச்சி யாரோ ஒருத்தி....

“அம்மா இந்த கொழந்தையை கொஞ்சம் பிடிங்க.... வெளியப் போயிட்டு வந்திடுறேன்னு... சொல்லிப்டு டோயிலட் பக்கம் போனவத்தானாம்... இன்னும் அந்த தாய்க்காரி வந்து சேரல்லயாம்... பாவம் கெழவிதான் இந்தப் பத்து வருஷமா சுடர வளர்க்கிறாள்.” என்றான் சுக்ரு.

கெழவி அங்க இல்லாத நேரத்தில நான் அடிக்கடி போயி சுடருக்கு ஏதாவது திங்க வாங்கிக் கொடுத்திட்டு வருவேன். பாவம் அந்தப் புள்ள அங்க தனியா இருக்கிறத நெனச்சா எனக்குப் பயமாக இருக்கு. ஏன்னா சில பொறுக்கிப் பயலுக அந்த ஒயில் ரூம் பக்கம் போயித்தான் கஞ்சாவ சுருட்டிக் குடிப்பானுங்க. ஆனா... இப்ப கொஞ்ச நாளா எவனும் தண்டவாளத்தை தாண்டி அங்க வர மாட்டானுங்க. போன வாரம் கஞ்சாப் பொட்டணத்தோட அந்த கோஷ்டில ரெண்டு பேரு பொலிசுக்கிட்ட மாட்டிக் கிட்டானுங்க. அதோட எவனும் அந்த ஒயில் ரூம் பக்கம் வர்றதில்ல. இருந்தாலும் எனக்கு பயமாகத்தான் இருக்கு” என்றான் சுக்ரு.

“ஏண்ணே நீ வேலை செய்யுற யு. சி.யில எனக்கும் ஒரு வேல வாங்கித்தர முடியுமா...?” எனக் கேட்டான்.

“அங்க வேலப் பிடிக்கணுமின்னா நகர சபையில சரியான ரூல்ஸ்ஸெல்ாம் இருக்கு. முன்ன மாதிரி இப்ப இல்ல. தகுந்த அத்தாட்சி எல்லாம் காட்டணும். குறிப்பாக ‘பேர்த் சட்பிக் கேட்.... அது ஒங்கிட்ட இருக்கா?” என்று முருகேசு கேட்டதும்,

“அண்ணே... நான் எப்ப பொறந்தேன், எங்கப் பொறந்தேன், என் அப்பான் யாருன்னு எனக்கே தெரியாது. அம்மாவத் தெரியும். அது ஆத்துல விழுந்து செத்ததுக்கப்புறம்... யாருமேயில்ல. எப்படியோ வளர்ந்திட்டேன்.

கடைசியா பாஞ்சாலையில வேல செஞ்சேன். அங்க யாரோ ‘எச்சப் பனிக்கத்த’ திருட... கடைசியில அது ஏந்தலையில விழுந்திருச்சி. நான் எதுவும் செய்யல்ல. ஆனா... பழி..? அப்புறம் மூட்டத் தூக்கலாமின்னு பஜாருக்குப் போனா... ஒரே கலபலா... அங்க உள்ள நாட்டாமக்காரனுங்க என்ன வேலை செய்ய விடாம வெரட்டிட்டானுங்க.”

“அவனுங்க எதுக்கு வெரட்டணும்?” என்ற முருகேசு கானை விட்டு மேலே ஏறினான். அவன் சாரத்தில் சேற்று நீர் வடிந்தது.

“அவனுங்களுக்கின்னு ஒரு சங்கம் இருக்காம். அதுல சந்தாக்கட்டி நெம்பராகணுமாம். அவுங்க ஒரு கார்ட் கொடுப்பாங்களாம். அதுக்கு அப்புறந்தான் நான் டவுன்ல மூட்டத் தூக்க முடியுமாம்.” என்றான் சுக்ரு.

“பிற கென்னா நீ அவுங்க யூனியன்ல சேர்ந்துக்க”

“சந்தாக்கட்ட சல்லி்...?’

“ஏன் கட்ட முடியாதா?”

“ஒரு வருஷ சந்தாப் பணத்த முதல்லேயே கட்டணுமாம். அதுக்கு நான் எங்கப் போவேன்?” உதட்டைப் பிதுக்கினான் சுக்ரு.

இதைக் கேட்டு சற்று யோசித்த முருகேசு.

“இன்னிக்கி பின் நேரத்தில பிரவேட்டா ஓர் இடத்தில ஒரு வேல இருக்கு. எனக்கு ஒதவியா நீ வர்றியா? ஒனக்கு சம்பளம் வாங்கித் தாறேன்...” என்றான்.

“என்னா வேல....?”

“ஒரு வீட்டுல டொயிலட் புலோக்காக்கிக் கெடக்காம். அதை எடுத்து விட்டு குழியையும் துப்பரவாக்கணும். நல்ல சம்பளம், சாராயமெல்லாம் கெடைக்கும்.”

“நான் சாரயமெல்லாம் குடிக்கமாட்டேன். சம்பளத்த கொஞ்சம் கூட்டிக் கொடுத்தா சரி....”

“அதுக்கென்னா... கரைக்டா தர்றேன்...”

“சரி... ஆனா... இப்ப ஏதாவது சல்லி இருந்தா கொடே...”

“ஏமாத்தாம... கண்டிப்பா வருவத்தானே?”

“ஏந் தலைக்கு சத்தியமா நீ சொல்லுற எடத்துக்கு வந்திடுறேன்...” தன் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான் சுக்ரு.

சாரத்தை இடுப்ப வரைக்கும் சுருட்டி உள்ளே போட்டிருக்கும் கலுசனின் பின் பக்க பையிலிருந்து எடுத்த தாள் சல்லியை சுக்ருவிடம் கொடுத்தான் முருகேசு. அதை பணிவோடு வாங்கிக் கொண்ட சுக்ரு....

“அண்ணே... எங்கே எந்த எடத்துக்கு நான் வரணுமின்னு சொல்லலையே...?” என்று கேட்டான்.

“பழைய தியேட்டருக்கு மேலே ஆரியாபுரம் கொலனி இருக்கில்ல. அதுல... போன முகப்புலையே இருக்கிற வீடுகளில் ஒன்று. அதாவது, பத்தாம் நெம்பர் வீடு. பேபி புளு கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும். முன்பக்க சுவரில் சிவப்பு கலரில் நெம்பர் பத்துன்னு எழுதியிருக்கும்.”

“வீட்டுல நாய் இருக்கா...?”

“அந்த பயமெல்லாம் வேணா... அங்க எந்த நாயுமில்ல...”

“அப்ப சரி மூணு மணிக்கு முன்ன வந்து சேர்ந்திடுறேன்.” – என்றான் சுக்ரு.

“இந்த வேல செஞ்சி கிடைக்கிற சல்லியில அந்த சுடருப் புள்ளைக்கு ஒரு பாவாட வாங்கித் தரணும். பாவம் அது ஒரு கிழிஞ்சப் பாவாடையைத்தான் கட்டியிருக்கு” என்ற சுக்ரு, “அண்ணே நீ கொடுக்கிற சம்பளத்தில ஒரு பாவாடை வாங்கலாம் தானே?” எனக் கேட்டான்.

“ஏய் ஒனக்கும் சேர்த்தே வாங்கிக்கலாம்...” என்ற முருகேசு... சாரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு.

“அடே நீ மட்டும் இந்த வேலையை செஞ்சிப் பழகிட்டா... அப்புறம் நீ தான் ராஜா.

இந்த வேலையை செய்ய இப்ப ஆட்கள் குறைவு. இவன் வர மாட்டானா, அவன் வரமாட்டானான்னு அந்தந்த வீட்டுக்காரனும் காத்துக் கிட்டிருக்கானுங்க. நீ பிரவேட்டா இந்த வேலையைச் செய்யத் தொடங்கிட்டா... கையில காசுதான். இது ஒண்ணும் அடிமைத் தனமான தொழில் இல்ல.” என்று முருகேசு சொன்னான்.

சுக்ருவின் மனதிலும் ஒரு நம்பிக்கை பிறந்தது. ‘எவனையும் நாம தேடி போற வேலையில்ல. ஆட்களே நம்மைத் தேடி வருவாங்க. முருகேசண்ணே சொல்லுற மாதிரி இந்த வேலையை தொடர்ந்து செய்ய வேண்டியதுதான்”. என்று எண்ணிக் கொண்டான் சுக்ரு.

“அண்ணே இப்ப நான் கல்யாண மண்டபத்துக்குப் போகப் போறேன். சுடரு பசியோட இருக்கும். அதுக்கு நான் கல்யாண சாப்பாட்டக் கொடுத்திட்டு மூணு மணிக்குள்ள அந்த ஆரியாபுர வீட்டுக்கே வந்து சேர்ந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு. அன்னபூரணா கல்யாண மண்டபம் இருக்கும் திசையை நோக்கி நடந்தான்.

***

கல்யாண மண்டபத்தின் ஈட்டிங் ஹோல் அல்லோலோல கல்லோலப்பட்டது.

“பாரு சாப்பாட்டுக்கு இப்படி கியூவில நெரிபட வேண்டி இருக்கு...”

“பாரு மந்திரி, தலைவர்ன்னு வந்திட்டா அவுங்களுக்கு ஸ்பெஷலா ஒரு கவனிப்புதான். ஆனா... நம்ம மாதிரி ஆளுங்களுக்கு எந்த கவனிப்பும் இல்ல. அவுனுங்களும் மொய்தான் கொடுக்குறானுங்க, நாமலும் மொய் தான் கொடுக்குறோம். ஆனா... நமக்கு சாப்பாட்டு விசயத்தில எந்த சப்போட்டுமில்ல... கியூவிலத்தான் நிக்கணும்.”

“சரி சரி கதைச்சதுப் போகும் முன்னால தள்ளிப் போங்க... “

ஹோலின் உட்பக்க சுவரில் ஒட்டி நின்றபடி சாப்பாட்டுக்காக நெரிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களையும் அவர்கள் பலவிதமாக பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்த சுக்ரு... தனக்கு முன்னால் கியூவில்...

சிறிது சந்து விழுந்த இடைவெளியில் பசக்கென ஓடிப்போய் நின்று கொண்டான்.

“ஏய்.. ஏய்! என்னா இடையில வந்து நொழையிற...” பின்னால் நின்ற ஒருவன் கத்தினான்.

“அடேயப்பா... எதுக்கு என்னப் பிடிச்சு தள்ளுற...” முன்னால் நின்ற ஒரு பெண் கத்தினாள்.

சுக்ருவின் உடையையும் கலைந்துபோய் கிடக்கும் தலை மயிரையும் பார்த்து

‘இவன் கல்யாணத்துக்காக வந்த ஆளே இல்லை. யாரோ பிரவேட் ஆள். ஒருவேளை டவுன் ரௌடியாகவும் இருக்கலாம்” என்று பின்னால் நிற்பவன் சுக்ரு மீது சந்தேகப் பட்டாலும்... அதை வெளிக்காட்டாமல் அதேநேரம் நெருங்கி ஒட்டி நிற்காமல் சிறிது தள்ளியே வந்து கொண்டிருந்தான். கியூ... மெல்ல மெல்ல நகர்ந்தது. சுக்ரு உணவு பரிமாறும் இடத்தை அடைந்து லஞ் சீட் போடப்பட்டிருக்கும் பீங்கான் கோப்பையும் எடுத்துவிட்டான். கறி குழம்பு எல்லாம் மணம் வீசியது.

‘இந்தச் சாப்பாட்டைக் கொண்டு போய் சுடருக் கிட்டக் கொடுத்தா... நல்லா ருசித்து சாப்பிடுவா... என்று எண்ணிக் கொண்டே சோற்றுப் பாத்திரம் இருக்கும் இடத்தை நெருங்க...

“ஏய்...! ஏய்...! நீ என்னாடா இதுக்குள்ள நொழைஞ்சி வர்ற... வையிடா கோப்பையை அங்க.. கொண்டுப் போய் வை!” என்று கத்தினான் ராகவன்.

“அண்ணே... சாப்பாடு எனக்கிலண்ணே... கண்ணுத் தெரியாத அந்தக் குருட்டுப் பொண்ணு சுடருக்குத்தானே...” கெஞ்சினான் சுக்ரு.

“போடா நீ எல்லாம் டவுன சுத்துற நாய்ங்க. ஒனக்கெல்லாம் இங்க ஏதுட சாப்பாடு!” கையில் இருக்கும் சோற்றுக் கரண்டியால் சுக்ருவின் முகத்தில் குத்தப் போன ராவன் சுக்ருவின் கையிலிருந்த கோப்பையை பிடுங்க முயற்சித்தான்.

“அண்ணே... வேணாண்ணே... அந்த சுடரு ரொம்ப பாவம் ண்ணே...” சுக்ரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே... அவனுக்குப் பின்னால் போன ரத்னம்....

அவனின் பிடரியில் ஒரு அடியை கொடுத்து அவனின் பின் பக்க சட்டைக் கலரை இழுத்துப் பிடித்தபடி முன்னால் தள்ளிவிட, அவன் கதவு ஓரத்தில் போய் விழுந்தான். அவனின் தலை கதவின் நிலைப்படியில் அடிபட... அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. தடுமாறி எழுந்தவன் பக்கத்தில் கிடந்த கதிரையில் அப்படியே உட்கார்ந்து கொண்டான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும்... கியூவில் நின்ற பலரும் சுக்ருவை திரும்பி பார்த்தனர். ஏதோ ஒரு சாதனையை நடத்திவிட்டவர் போல... பரிமாறும் இடத்தில் போய் கம்பீரமாக நின்றான் ரத்னம். கியூவில் நிற்பவர்களிடமிருந்து ஒரே சலசலப்பு.

“டவுன் ஓரத்தில உள்ள கல்யாண மண்டபத்தை புக் பண்ணினாலே இதே கரைச்சல்தான். சோத்துக்கின்னே ஒவ்வொருத்தனும் ஓடி வந்திடுவானுங்க”

“ஆமா அவன் என்னா... முழுப்பான சோத்தையுமா கேட்டான்...? பாவம்... ஒரு கோப்ப சோத்தை மட்டுந்தானே கேட்டான்... அதைக் கொடுத்தா... என்னாக் கொறையப் போவுது?”

“மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க சரியான கஞ்சத்தனம் பிடிச்சவனுங்க. இப்படிதான் இருப்பானுங்க...” பலரும் இப்படியாக பேசிக் கொண்டிருக்கும் போதே....

வெளியிலிருந்து உள்ளே புகுந்த மூன்று நான்கு பேர்... கியூவை உடைத்துக் கொண்டு முன்னால் போய் சோறு பரிமாறும் இடத்தில் போய் நின்றனர். அவர்கள் குடித்திருக்கிறார்கள் என்பது அவர்கள் தடுமாற்றத்தோடு நிற்கும் நிலையிலிருந்தே தெரிந்தது.

“சோறப் போடய்யா...! நாங்க சுருக்காப் போவணும்!” – ஒருத்தன் கத்த

“என்னய்யாப் பார்க்கிற! நான் சொல்லுறது ஓங் காதுல்ல வௌங்கலையா ?” என்றான் மற்றவன். அவர்களை முறைத்துப் பார்த்த ரத்னம்...

“இப்படி ஊடையில புகுந்து வந்தாக் கேட்டா எப்படி...? போங்க கோய் கியூவில நில்லுங்க!” என்றான்.

“ஏய் என்னா... என்னைப் போய் கியூவில நிக்க சொல்லுறியா....? நான் யாரு தெரியுமா... பொண்ணோட அக்காப் புருஷன்! என்று சொன்னதோடு,

“ஏண்டா... உங்க கட்சித் தலைவர் வந்தா ஸ்பெஷலா கூட்டிப் போய் சாப்பாடு போட்டு விருந்து வைப்பீங்க. ஆனா... பொண்ணு கொடுத்தவன் வந்து சோறு கேட்டா... நெரிப்பட்டு கியூவில நிக்கணுமா?” என்று சொல்லிக் கொண்டே ரத்னத்தின் நெஞ்சி சட்டையைப் பிடித்து இழுக்க அது ஒருபக்க சேப்போடு டர்ர்ரென்று கிழிந்தது. ரத்னத்தின் கை சும்மா இருக்குமா? அடிக்கு அடி உதைக்கு உதை...., அந்த மூன்று பேர்களும் ரத்னத்தை தாக்க... உணவு பரிமாறும் ராவகன், பிரபு, சுரேசெல்லாம் அவர்களை தாக்கு... மேசையில் இருந்த சோறு, கறி, குழம்பெல்லாம் பறந்தன. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சாப்பாட்டை போட்டுவிட்டு ஓடினர். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கும் பெண் வீட்டுக்காரர்களுக்குமிடையில் பெரிய சண்டையே நடந்து. பீங்கான் கோப்பைகள் கண்ணாடி கிளாசுகள், பிளாஸ்டிக் நாற்காலிகள் எல்லாம் உடைபட்டன.

“ஏய் நம்ப பொண்ணு வீட்டுக்காரனுங்க எவனும் இங்க சாப்பிடாதீங்க! எல்லாரும் வெளிய வாங்க!” ஒருவன் கத்த பலரும் வெளியேறினர். தங்கமணி, பெண் வீட்டாரை சமாதானப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஏய் செதறிக் கெடக்கும் சோத்தையெல்லாம் கூட்டி எடு.. ஒனக்கு ஒரு கோப்ப சோத்த தர்றோம்” என்று சுக்ருவை பார்த்துச் சொன்னான் ராகவன்... சுவரில் சாய்ந்தபடி இங்கு நடந்தவைகளை யெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுக்ரு,

“வேணாய்யா.... ஒஞ்சோறு! இப்ப எனக்கு எதுக்கு. ஏங்கையில முருகேசண்ணே கொடுத்த காசு இருக்கு. சுடருப்புள்ளைக்கு இதுல நான் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிக் கொண்டு போய் கொடுப்பேன். இப்ப நான் ஆரியா புரத்து வீட்டுக்குப் போய் வேலை செய்தாலும் எனக்கு சல்லிதான். இனிமே இந்த எச்சி சாப்பாட்டுக்கு வரவே மாட்டேன். கீழே கிடக்கிற சோத்தப் பொறுக்கி நீயே சாப்பிடு!” உரக்க சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியெறினான் சுக்ரு. 

Comments