குறுங்கதை | தினகரன் வாரமஞ்சரி

குறுங்கதை

சகாப்தீன் கந்தளாய் முஸ்தபா

கிராமத்திலே நன்றாகக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரின் தரமான கற்பித்தலை அவ்வூர் மக்களும் பாராட்டினர். ஆனால், அவரிடம் ஒரு கெட்ட பழக்கமிருந்தது. கற்பிக்கும் போது விளங்காத மாணாக்கரை ‘எருமை மாடு’ என்று திட்டும் பழக்கமிருந்தது.

ஒரு நாள் அந்த ஆசிரியரின் வீட்டுக்கு அருகால் ஓர் இடையன் போய்க்கொண்டிருந்தான். அவன் கல்வி அறிவற்ற ஒரு பாமரன் அவனிடம் சில எருமை மாடுகள் இருந்தன. அவற்றில் பால் கறந்து விற்று அவனின் குடும்ப சீவியம் நடந்தது. அவனுக்குப் பிள்ளைகளில்லை அவனும் அவனது மனைவியுமே வீட்டிலிருந்தனர்.

அவன் ஆசிரியரின் வீட்டருகால் போகும் சந்தர்ப்பத்தில் அந்த ஆசிரியர் மாணவனொருவரைத் திட்டிக் கொண்டிருந்தார்.

“எத்தனை எருமை மாடுகளைப் படிப்பித்து ஆளாக்கி இருக்கிறேன், உன்னைத் திருத்துவது பெரும்பாடு” என்று உரக்கக் கத்தியது இடையனின் காதுகளில் விழுந்தது.

“உன்னையும் மனிதனாக்கியே தீருவேன்" என அந்த ஆசிரியர் அழுத்தமாகக் கத்தினார். இடையன் தீர்மானத்துக்கு வந்தான் தன் மனைவிடம் நடந்தவைகளைக் கூறினான். நமக்கோ பிள்ளைகளில்லை நமது எருமைகளில் ஒன்றான வீமா என்ற எருமையை ஆசிரியரிடம் கொண்டு படிப்பித்து மனிதனாக்கலாம் தானே? என மனைவியிடம் ஆலோசனை செய்தான். மனைவியும் உடன்பட்டாள் மறுநாள் காலை தனது வீமா எருமையை இழுத்துக் கொண்டு ஆசிரியரிடம் சென்றான்.

"ஆசானே எனது இந்த எருமை வீமாவைக் கற்பித்து மனிதனாக்கித் தர வேண்டும்" எனக் கெஞ்சினான். ஆசிரியர் எப்படிச் சொல்லியும் கேட்காத இடையன் தான் வீதியால் வரும்போது ஆசிரியர் சொன்னதை ஞாபகப்படுத்தினான். நீங்கள் எத்தனை எருமைகளைக் கற்பித்து மனிதனாக மாற்றியிருக்கிறீர்கள் இதையும் செய்தால் புண்ணியம்தானே என வலியுறுத்திக் கூறினான்.

செய்வதறியாத ஆசிரியர் எருமையையும் அவருக்கான தட்சணையான ஐநூறு ரூபாவையும் பெற்றுக் கொண்டார். அன்றிரவே அவரது தூரத்துக் கிராம நண்பனிடம் எருமையைக் கொண்டு சென்று பொறுப்பளித்து விடயத்தையும் கூறி எருமையின் பராமரிப்புச் செலவினத்தையும் கொடுத்து மீண்டார்.

இடையில் ஒரு நாள் ஆசானிடம் தன் எருமை பற்றி இடையன் விசாரித்தான். ஆறு மாத காலத்தில் அது படித்து மனிதனாகிவிடும் என்று ஆறுதல் கூறித் திருப்பி அனுப்பினார்.

ஆறு மாதம் கழிந்ததும் இடையன் தன் எருமையை மனிதனாகப் பார்க்கும் ஆவலுடன் ஆசிரியரிடம் வந்தான்.

ஆசிரியர் அவனைக் கண்டதும் ஏற்கனவே திட்டமிட்டபடி “ஐயா! உமக்கு அறிவிக்க முடியாமல் போய்விட்டது. உன்னுடைய மகன் மனிதனாக அடுத்துள்ள நகரத்தில் நீதிபதியாகிவிட்டான். நீர் சென்று பார்க்கும் போது நீ வழக்கமாகப் பாவிக்கும் பால் கறக்கும் செம்ைபயும் கொண்டுபோ! அப்போதுதான் உன்னை அவன் அடையாளம் காண்பான்" எனச் சொல்லி அனுப்பினார்.

இடையன் தன் மனைவியிடம் போய் விடயத்தை மகிழ்வுடன் சொல்லியவன், மறுநாள் நகரத்துக்குச் சென்றான். நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. நல்ல வாட்ட சாட்டமான ஒருவர் நீதிபதியாக இருப்பதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தான்.

தூரத்தில் இருந்தவாறு செம்பைக் காட்டிச் சிரித்தான். அடிக்கடி சிரித்ததை நீதிபதி கண்ணுற்றார். நீதிபதிக்கு அது இடையூறாக அமைந்தது. நீதிமன்றச் சேவகனை அழைத்து உடனே அவனை வெளியேற்றப் பணித்தார்.

இடையன் மனம் வேதனையடைந்தது. உடனடியாக ஆசிரியரிடம் சென்றான் “ஐயா! ஆசானே உடனே அவனை மீண்டும் எருமையாக்க வேண்டும்” என்று அதற்கான கூலியையும் கொடுத்துச் சென்றான்.

ஆசிரியர் அன்றிரவோடிரவாக நண்பரிடம் சென்று எருமையைக் கொண்டுவந்தார். அது நன்றாகக் கவனிக்கப்பட்டதால் கொழுத்திருந்தது.

விடிந்ததும் இடையன் அங்கு வந்தான். இடையனின் முகம் கடுகடுவென இருந்தது. மாட்டைக் கயிறோடு இழுக்கத் தொடங்கினான். தான் கொண்டுவந்த தடியினால் நன்றாக நையப்புடைக்கத் தொடங்கினான்.

“பதவி வந்தால் வளர்த்தவர்களை மதிக்கத் தெரியாது” என்றவாறு சினந்து கொண்டு அடித்தான் பாவம் எருமை அலறத் தொடங்கியது.

ஆசிரியர் ஒருவாறு தப்பிப் பிழைத்தார். புத்தி குறைந்த இடையனிடம் சமயோசிதமாகத் தப்பிக் கொண்டது தனது திறமையே எனத் தன்னைத்தானே மெச்சிக் கொண்டார். அன்றிலிருந்து மாணவர்களை “எருமை மாடு” என்று திட்டுவதை நிறுத்திக் கொண்டார்.

Comments