சரிந்தது | தினகரன் வாரமஞ்சரி

சரிந்தது

தமிழ் எழுத்துலகின் பிதாமகர்களில் முக்கியமானவரான அசோகமித்திரன் கடந்த வியாழனன்று சென்னையில் காலமானார். தியாகராஜன் என்ற இயற்பெயர்கொண்ட 86 வயதான அசோகமித்திரனின் மறைவுக்கு இந்திய இலக்கிய உலகமே இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில் பிறந்தவர் (1931) அசோகமித்திரன். இவரது இயற்பெயர் ஜ.தியாகராஜன். தந்தை, ரயில்வே இலிகிதர். 1952-ல் தந்தையின் திடீர் மரணத்துக்குப் பின் சென்னையில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1956களில் எழுதத் தொடங்கினார். 1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

'அசோகமித்திரன்' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். எட்டு நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனப் படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார். அசோகமித்திரனின் படைப்புகள் பலவும் பிற இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கணையாழியில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 'ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்', 'தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்', 'ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்' உள்ளிட்ட இவரது ஆங்கில நூல்கள் மிகவும் பிரபலம்.

செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட இவரது ‘18வது அட்சரக்கோடு’ என்னும் நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து - முஸ்லிம் இடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது. 'நாடகத்தின் முடிவு', 'வாழ்விலே ஒரு முறை', 'காலமும் ஐந்து குழந்தைகளும்', 'பிரயாணம்', 'தண்ணீர்', 'இன்று', 'மானசரோவர்', 'ஒற்றன்', 'ஆகாசத் தாமரை', 'விடுதலை' முதலான இவரது பல படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

சாகித்ய அகாடமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது, திரு.வி.க. விருது, சாரல், இலக்கியச் சிந்தனை, அக்ஷரா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நோபல் பரிசு பெறத்தக்க எழுத்தாளர் என விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டவர். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கி வந்த அசோகமித்திரன் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்களிலும் தனது பங்களிப்பை நல்கியவர். கடந்த ஜனவரி மாதம் விகடன் ‘தடம்’ இதழில் பிரசுரமான அவரது பேட்டியின் சில பகுதிகளைஅவரது நினைவாக தருகின்றோம்...

86 வயது அசோகமித்திரன்! எங்களை எதிர்பார்த்து பால்கனியில் நின்றிருந்தார். பார்த்துச் சிரித்து, கைகளை வாஞ்சையோடு அசைத்து, மேலே வரச்சொன்னார். கதவை முறையாகச் சாத்தி, மின்விசிறியை அளவாக வைத்து, மிகமிக மெல்லிய குரலில் நலம் விசாரிக்கிறார். ஜன்னலுக்கு வெளியே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பக்கத்துக் கட்டடத்தில ரெண்டு பறவைகள் இருந்துச்சு... ஒண்ணு எங்கோ காணாமப் போயிடுத்து...

சில நாட்களாவே அதைத் தேடி விடாம சத்தம் போட்டுட்டிருந்த இன்னொரு பறவையையும் இன்னிக்குக் காலையில இருந்து காணல... இந்த அமைதி என்னவோ பண்ணுது” என்றார். அந்த அமைதியை உணர்ந்தோம். பின், மௌனம் கலைத்தோம்.

'உங்களுடைய எழுத்துகளை ‘அதிகம் அதிர்ந்து பேசாதவை’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லி இருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’

'வேண்டாமே... அதிர்வு எதுக்கு? யாருடைய எழுத்தும் இப்படித்தான் இருக்கணும்னு கிடையாதே. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியத்துக்கான பொதுக்குணமா ஒன்றைக் குறிப்பிடுவாங்க. அது காலத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும். அதேசமயம், அதிகமா இல்லேன்னாலும் அதிர்ந்து பேசுற விஷயங்கள் என்னோட எழுத்திலயும் இருக்கத்தான் செய்யுது.’’

'உங்கள் கதைகளிலும், மேடைப் பேச்சுகளிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வு இருக்கும். அதை எப்படிக் கைக்கொண்டீர்கள்?”

'எனக்குத் தெரியலை. அந்தந்த இடங்களில் உண்மையைச் சொல்றேன் (சிரிக்கிறார்). ஒரு பெரிய அரங்கம்; நிறையக் கூட்டம்... ஏராளமான கலைஞர்கள். அந்தக் கூட்டத்துக்கு இளையபாரதி இரண்டு புத்தக வெளியீடுனு சொல்லி என்னைக் கூப்பிட்டிருந்தார். ஆனா, உண்மையில அது வேறொரு கூட்டம். நிறையப் பேர் வந்திருந்தாங்க. புத்தக வெளியீட்டுக்கா இவ்வளவு கூட்டம்னு நினைச்சு ஆச்சர்யப்பட்டேன். கலைஞர் வந்திருந்தார். கூட இருந்தவங்க எல்லாரும் எழுந்துபோய் கலைஞரோட கையைப் பிடிச்சு, வணக்கம் சொல்லி, கால்ல விழுந்து என்னென்னமோ பண்ணினாங்க. எனக்கு அப்படிச் செய்ய முடியலை.

அதெல்லாம்கூட எனக்குப் பிரச்னையா இல்ல. அந்த ஹால்ல ஏர்கண்டிஷன் ஓடுது. பக்கத்துலயே ஒரு ஃபேனும் ஓடுது. குளிர் நடுக்குது. தாங்க முடியலை. எனக்குப் பொன்னாடை போர்த்தினாங்க. 'அப்பாடா... சரியான நேரத்துல போர்த்தினீங்க. இந்த இடத்துல இந்தப் பொன்னாடை ரொம்பத் தேவையா இருக்கு’னு சொன்னேன். பல சமயங்களில் உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு.’’

“போரும் அமைதியும், கரமசோவ் பிரதர்ஸ் போன்ற அளவில் பெரிய அதே சமயம் க்ளாசிக் தன்மையுடைய தமிழ் நாவல்கள் பற்றி...?”

“மகா நாவல்கள்னு சிறப்பிக்கப்படுற எல்லா படைப்புகளையும் இப்போ மறுபரிசீலனை செய்யணும். அது அவசியம்னு நினைக்கிறேன். என் வரையில் இந்த மகா நாவல்களோட சிகரம்னு கருதப்படுற ‘போரும் அமைதியும்’ எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. இந்த மகா நாவல்கள்லாம் அந்தக் காலகட்டத்தோட பிரசுரத் தேவையால உருவாக்கப் பட்டவையோனு சந்தேகப்படுறதுண்டு. 'போரும் அமைதியும்’ மூலநூல் ஆசிரியராலேயே பலமுறை திருத்தப்பட்டது. அது மட்டுமில்லாம உள்ளே ரெண்டு பின்னுரைகளை வேறு கொடுத்திருக்காங்க. எந்தப் படைப்பிலக்கியமும் என்னைப் பொறுத்தவரை முன்னுரை, பின்னுரை இல்லாம, அதன் அளவிலேயே அது சிறந்து விளங்கணும்னு சொல்வேன்.

தமிழிலும் மகா நாவல்கள் எழுதப்பட்டிருக்கு. சுந்தர ராமசாமியின், ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’, ஜெயமோகனின், 'பின் தொடரும் நிழலின் குரல்’, அவர் இப்போ எழுதிட்டு வர்ற மகாபாரதத் தொடர் நாவல்கள், பூமணியின் 'அஞ்ஞாடி’ இதெல்லாம் என் நினைவுக்கு வருது. இன்னும் பல இருக்கலாம். புனைகதைங்கிறது மகிழ்ச்சிக்காகப் படிக்கப்படுறது. படிக்கிறதுக்கே அதிக உழைப்பு தேவைப்படுறபோது, எழுத்தாளனோட இலக்கு பற்றி சந்தேகம் வருது.

ஜோ டி குரூஸின் ரெண்டு படைப்புகளும் (ஆழிசூழ் உலகு, கொற்கை) மகா நாவல்கள்தான். பல நாட்கள் உழைத்துத்தான் அதைப் படிக்க முடிஞ்சது. இன்றைய மனநிலையில ஒரு வாசகனை வியர்வை சிந்தவைக்காம ஓர் உயரிய நிலையில உற்சாகம் (இது சோகத்துக்கும் பொருந்தும்) தருகிற படைப்புகளா எழுதப்படணும்னு விரும்புவேன். இதையே எல்லாரும் ஏத்துக்கணும்னு நான் வற்புறுத்த மாட்டேன். வாசிப்புங்கிறது முழுச் சுதந்திரத்தோட நாம செய்ய வேண்டிய ஒரு விஷயம்.”

“சிறுகதை, குறுநாவல், நாவல் இவற்றுக்கு உங்களது இலக்கணம் என்ன?”

“கறாரா இதை வரையறுக்க முடியாது. இதில நமக்கு சமரசப் பார்வை தேவை. சிலர் தங்களோட ஒரு சிறுகதைக்கு பல ஆயிரம் சொற்களை எடுத்துக்கிறாங்க. சிலர் சில நூறு சொற்களை எடுத்துக்கிறாங்க. பல சம்பவங்கள், பல கதாபாத்திரங்கள்னு ஓரளவுக்கு மேல் விரிஞ்சிட்டுப் போகிற கதைகளை சிறுகதையிலிருந்து குறுநாவல், நாவல்னு பிரிக்கலாம்.

தமிழ் உரைநடையில படைப்பிலக்கியம் உருவானதே ரொம்பத் தாமதமாத்தானே. முதல் தலைமுறைக் கதாசிரியர்களுக்கு அவங்களோட வாசகர்கள் யார்னே தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல. அவங்க எழுதின நூல்களை அவங்களோட வாரிசுகள் பள்ளிப் பாடப் புத்தகமா மாத்துறதை விரும்பினாங்க. கேட்க ஆச்சர்யமா இருக்கலாம். 'பிரதாப முதலியார் சரித்திரம்’ ‘கமலாம்பாள் சரித்திரம்’ ரெண்டாவது மூணாவது பதிப்பிலேயே பாட நூல்களா திருத்தப்பட்டுருச்சு.”

“ஒரு படைப்பு அந்தப் படைப்பாளியின் உரிமையின்றித் திருத்தப்படலாமா?”

“இப்பல்லாம் பலர் இணையத்தில அவங்க நினைக்கிறதையெல்லாம் எழுதிடுறாங்க. ‘எடிட்டிங்’கிற விஷயத்தை இந்தத் தலைமுறை கத்துக்கணும். ஒரு கதையில பத்திரிகையாசிரியர் செய்ற சிறுசிறு திருத்தங்களை நாம அனுமதிக்கணும். எழுத்தாளர்கள் தங்களோட எழுத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிற விஷயமா இதைப் பாக்கக் கூடாது. எந்தப் படைப்பானாலும், அது ஒரு நல்ல எடிட்டர் பார்வைக்கு உட்படுவது நல்லது.

செய்தி, கருத்து, கிண்டல், கவிதை, படைப்பிலக்கியம்னு மிகச் சிறப்பா வெளியிடுறதுல புகழ் பெற்றது ‘நிய்யோர்க்கர்’ வாரப் பத்திரிகை. அந்தப் பத்திரிகையைத் தோற்றுவித்த ஹரால்ட்ராஸ் ஒருமுறை சொன்னார்... 'யார் வேண்டுமானாலும் எழுத்தாளராகிடலாம். ஆனா, மிகக் கூர்மையான அறிவு உடையவங்கதான் பத்திரிகை ஆசிரியராக முடியும்.”

'இதுவரை உங்களுக்குக் கிடைத்ததில் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’’

'நீங்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில், உங்களுக்குப் போட்டியாக யாரையாவது நினைத்தது உண்டா?’’

'போட்டினு யாரையும் நெனைச்சது கிடையாது. நண்பர்கள் நிறைய கிடைச்சாங்க. வா.மு.சேதுராமன் அப்படிக் கிடைச்சவர்தான். அவரோட சகோதரர் வருமானவரி அலுவலகத்தில் வேலை பார்த்துட்டிருந்தார். அவருக்கு என் படைப்புகள்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. (18 ஆம் பக்கம் பார்க்க)

 

Comments