தினகரன் இணையத்துக்கு இரண்டு விருதுகள் | தினகரன் வாரமஞ்சரி

தினகரன் இணையத்துக்கு இரண்டு விருதுகள்

இலங்கையிலுள்ள மிகச் சிறந்த இணையத்தளங்களில் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

இலங்கையின் lk இணையத்தள பதிவு நிறுவனத்தால் வருடாந்தம் நடத்தப்படும், மிகச் சிறந்த இணையத்தளத்தைத் தேர்ந்தெடுக்கும் போட்டியிலேயே வெள்ளி மற்றும் வெண்கல பதக்க விருதுகளை தினகரன் இணையத்தளம் பெற்றுள்ளது. சிறந்த தமிழ் மொழி மூலமான இணையத்தளத்திற்கு (Special Category- Best Tamil Website) விருதுகளில் தினகரன் இணையத்தளத்திற்கு வெள்ளிப் பதக்கமும் சிறந்த ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் (Media, Sports & Entertainment Category), தினகரன் இணையத்தளத்திற்கு வெண்கல விருதும் கிடைத்துள்ளது. அத்துடன், இத்துறையில் விருது பெற்றுள்ள ஒரேயொரு தமிழ் இணையத்தளம் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன் இணையத்தள வாசகர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேவேளை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் எமது சகோதர சிங்கள மொழி ஊடகமான தினமின (www.dinamina.lk) இணையத்தளம், சிறந்த சிங்கள இணையத்தள பிரிவில், Merit (சிறப்புத் தகுதி) விருதை பெற்றுள்ளது.

அதே போன்று எமது சகோதார ஆங்கில மொழி ஊடகமான டெய்லி நியூஸ் (www.dailynews.lk) இணையத்தளம் சிறந்த ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் (Media, Sports & Entertainment Category) Merit (சிறப்புத் தகுதி) விருதை பெற்றுள்ளது.

கடந்த மார்ச் 08 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெற்ற குறித்த போட்டியில், நடுவர்களின் புள்ளிகள், இணையத்தின் ஊடான வாக்குகள், இணையத்தின் வாசகர் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டிருந்ததோடு, மிகச் சிறந்த தேர்ச்சியைக் கொண்ட நடுவர் குழுவின் கண்காணிப்பின் கீழ் குறித்த போட்டிகள் இடம்பெற்றதாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (24) Bestweb.lk இணையத்தளம் குறித்த முடிவுகளை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த அடிப்படையில் லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு மாத்திரம் 4 விருதுகள் கிடைத்துள்ளன. என்பதோடு, இவ்வாண்டு (2017) இடம்பெற்ற குறித்த போட்டியில் மிக அதிகளவான விருதுகளை லேக் ஹவுஸ் நிறுவனம் வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்களாகிய உங்களுக்கு, லேக்ஹவுஸ் நிறுவனம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி யடைகின்றது.

Comments