பலமான அரசியலமைப்பில் | தினகரன் வாரமஞ்சரி

பலமான அரசியலமைப்பில்

கருணாகரன் 

"உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பற்றித் தமிழ் மக்களின் தரப்பு நியாயத்தைச் சொல்ல முடியுமா?“ என்று கேட்டார் கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள அச்சு ஊடகமொன்றின் ஊடகவியலாளர்.

இதைப்பற்றிச் சொல்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. ஏனென்றால், கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் வழமையைப்போல, இனரீதியான அரசியல் போக்கை அனுசரித்தே இந்த அரசியலமைப்புத்திருத்தமும் உள்ளதாகத் தெரிகிறது.

உத்தியோகபூர்வமாக அரசாங்கம் இன்னும் இதை வெளிப்படுத்தவில்லை. என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியமான அரச பிரதிநிதிகள் தெரிவித்து வருவதைப் பார்த்தால், சிங்களப் பெரும்பான்மையினரின் விருப்பங்களையும் நம்பிக்கையையும் அனுசரித்தே இந்த அரசியமைப்புத் திருத்தமும் உள்ளதாக விளங்க முடிகிறது. இப்படியான அரசியலமைப்பினால் எந்தப் பெரிய முன்னேற்றமும் நம்பிக்கையும் கிடையாது“ என்றேன்.

“ஆனால், பெரும்பான்மை மக்களின் விருப்பங்களை எப்படி ஒரு அரசாங்கத்தினால் புறக்கணிக்க முடியும்? அதை அனுசரித்துச் செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளதல்லவா?” என்று பதில் கேள்வியை எழுப்பினார் அந்த ஊடகவியலாளர்.

“அப்படியென்றால், சிங்களப் பெரும்பான்மை மக்களின் விருப்பமாக மகிந்த ராஜபக்ஸவே கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவர்தான் இன்று ஜனாதிபதியாக இருந்திருக்க வேணும். ஆனால், அப்படியா அமைந்தது? இல்லையே! மகிந்த ராஜபக்ஸ தோற்கடிக்கப்படுவதற்கும் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவதற்கும் தமிழ் மற்றும் முஸ்லிம்,

மலையக மக்களுடைய வாக்குகளே பயன்பட்டன. அப்படி ஒரு இணைந்த ஆதரவும் பங்கேற்பும் வாக்களிப்பும் இருந்தபடியால்தான் அவரால் வெற்றியடைய முடிந்தது. அதுவே இன்று நடைமுறையிலும் உள்ளது.

ஆகவே இந்த உண்மையை விளங்கிக்கொண்டே அரசியலைப்பையும் திருத்தம் செய்ய வேணும். அதாவது, தமிழ், முஸ்லிம், மலையகத்தரப்பினரின் பங்கேற்பும் விருப்பங்கள் – நலன்களும் இணைந்ததாக.

இது ஒன்றும் புதிய சங்கதியல்ல. இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இதைப்போல சிறுபான்மைச் சக்திகளின் பங்கேற்புடன்தான் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. மிக அபூர்வமான சந்தர்ப்பங்களில் மட்டுமே தனிச்சிங்களத்தரப்புப் பலமாக இருந்திருக்கிறது. அதுவும் தொடக்க காலத்தில் மட்டுமே.

இனிமேல் தனிப்பெரும்பான்மையோடு சிங்களக் கட்சிகள் மட்டும் ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இனி இன்னும் நெருக்கடிகளை சிங்களத் தரப்புகள் சந்திக்கும். ஆகவே ஆட்சியை அமைப்பதற்கு ஏனைய தரப்பின் ஆதரவு தேவைப்படுவதைப்போல அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கும் பிற சமூகங்களின் பங்கேற்பும் விருப்பங்களும் கவனிக்கப்பட வேணும்“ என்றேன்.

அவரால் அதைப் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாமலிருந்தது. தீவிரமாக யோசித்தார். “அரசியலமைப்பில் எப்படியான மாற்றங்கள் அல்லது அடிப்படைகள் இருக்க வேணும் என்று தமிழ் மக்கள் யோசிக்கிறார்கள்?“ என்று இன்னொரு கேள்வியை எழுப்பினார்.

”எந்த ஒரு சமூகத்துக்கும் எந்த ஒரு பிரிவினருக்கும் முதன்மை அளிக்கும் வகையில் அரசியல் அமைப்பு இருக்கக்கூடாது. அது ஏனைய தரப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும். முதலில் அரசியல் அமைப்பை உருவாக்கும்போது, தேர்தலை மனதில் கொண்டு, அதனுடைய லாபநட்டக் கணக்கின் அடிப்படையில் சிந்திக்கக்கூடாது.

ஆனால், இங்கே அப்படியான நிலைமைதான் நீடிக்கிறது. இது அதற்கு அப்பால் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. பன்மைத்துவத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பை உருவாக்குவதென்பது உண்மையில் மிகப் பெரிய சாதனையே. ஏனென்றால் ஒரு அரசியலமைப்பு கடந்த காலத்துக்குரியதல்ல.

அது உருவாக்கப்படும் நாளிலிருந்து அதைத் தொடர்ந்து வரும் எதிர்காலத்துக்குரியது. ஆகவே எதிர்காலத்தில் நாடும் உலகமும் எப்படியிருக்கும் என்று தீர்க்கதரிசனமாக முன்னுணரக்கூடியவர்களாலேயே அரசியல் சாசனத்தை உருவாக்க முடியும்.

இன்றைய உலகம் கட்டவிழ்ந்தது. எந்த ஒரு நாடும் இனிமேல் தனியே ஓர் இனத்தின் அடையாளத்தோடும் அடிப்படைகளோடும் இருக்க முடியாது. தொடர்பாடலும் பொருளாதாரமும் பிற காரணங்களும் ஒரு நாட்டுக்குள் பலரையும், பல தரப்பினரையும் உள்ளடக்குகிறது.

ஆகவே அதற்குரிய மாதிரியே இனிமேல் அரசியல் அமைப்புகளும் ஆட்சிகளும் அமையப்போகின்றன. இப்பவே அப்படித்தான் உள்ளது. தங்களை நெகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடுகள்தான் பொருளாதாரத்திலும் பிற நிலைகளிலும் வளர்ச்சியடைந்து செல்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி முரண்பாடுகளைத் தீர்த்திருக்கின்றன? என்று பார்த்தால் தெரியும்.

பன்மைத்துவத்துக்கு இடமளிப்பதே அந்த நாடுகளின் சிறப்பு. இதில் இன்னொரு உண்மையையும் நாங்கள் பார்க்கலாம். இங்கே சொந்த நாட்டு மக்களே இருக்க முடியாமல் வெளியேறுகிறார்கள். அங்கே பிறத்தியிலிருந்து வருவோருக்கு இடமளிக்கிறார்கள்.

இது எத்தகைய நேர் நிலை மாற்றம் என்று பார்த்தீர்களா? இதற்குக் காரணம், இங்கே ஒரு தரப்பு தன்னை மட்டும் சிந்திக்கிறது. அங்கே மற்றவர்களுககும் நாங்கள் இடமளிக்க வேணும் என்று சிந்திக்கிறார்கள். இதற்குக் காரணமாக இருப்பது நெகிழ்ச்சியையும் விரிந்த பார்வையையும் கொண்ட அரசியல் அமைப்புத்தான்.

மிக எளிய உதாரணம், இலங்கையைத் தமது பூர்வீகமாகவும் தாயகமாகவும் கொண்ட தமிழர்கள், இங்கே, தாம் பிறந்த நாட்டில் இருக்க முடியாது என்று புலம்பெயர்ந்து போகிறார்கள். இது எவ்வளவு பெரிய தோல்வி இந்த நாட்டுக்கு? தங்கள் மூத்த சகோதரனுடன் வாழ முடியாது. அவனிடம் நீதி கிடைக்காது.

நியாயத்தைப் பெற முடியாது என்று தம்பியர்கள் வெளியேறிச் செல்வது என்றால் இதனுடைய அர்த்தம் என்ன? பிறத்தியாருடைய வீட்டை நம்பி, பிற நாட்டை நம்பிச் செல்வதற்கு அங்கே இடமிருக்கிறது.

ஆனால், சொந்த இடத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்றால், அது பெருந்தோல்வியே. இதுதான் நாங்கள் கவனிக்க வேண்டியது. ஆகவே முதலில் உங்களுடைய இந்தக் கேள்வியை அல்லது உங்களுடைய சிந்தனையைத் திருத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் மக்களுக்கு, முஸ்லிம் மக்களுக்கு, சிங்கள மக்களுக்கு எனத் தனித்தனியாக சிந்தித்து, அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றமாதிரி, அவர்களுக்கு இனிக்கிறமாதிரி அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. ஆனால், அப்படித்தான் ஒவ்வொரு சமூகத்துக்கும் இனிக்கிற மாதிரி அரசியலும் அரசியல் கட்சிகளும் இருக்கின்றன.

இதனால் நாட்டிலே என்ன நடந்தது? இனி ரீதியாகச் சனங்கள் பிளவுபட்டு மோதுண்டு, அழிவை உண்டாக்கியதைத் தவிர, வேறு என்ன நடந்திருக்கிறது? இதற்கு அடிப்படையாக இருந்ததும் அரசியலமைப்பே.

சிறுபான்மை இனங்களின் நலன்களையும் அவற்றின் பாதுகாப்பையும் கவனத்திற் கொள்ளாத அரசியலமைப்பு அந்தச் சமூகங்களுக்கு எதிராக மாற்றப்பட்டது.

இதனால் அந்தச் சமூகங்கள் நிர்க்கதிக்குள்ளாகின. நிர்க்கதிக்குள்ளாகும் சமூகங்கள் நிச்சயமாகத் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும். அதுவும் மூர்க்கமாக அதை வெளிப்படுத்தும். இதுதான் நடந்தது.

இதனால்தான் பசுமையான இலங்கை இரத்த வெள்ளத்தில் மிதந்தது. அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அடையாளமான பௌத்தம் பேரழிவுக்கான சின்னமாக இலங்கையில் மாறியது.

ஆகவே, அனைத்துச் சமூகங்களின் நலனையும் பாதுகாப்பையும் பேணக்கூடிய சிந்தனையைக் கொண்ட அரசியலமைப்பே இலங்கைக்குத் தேவை. ஒற்றை ஆட்சியை வலியுறுத்துகின்றவர்கள் பன்மைத்துவத்தைப்பற்றிச் சிந்திப்பதில்லை.

பன்மைத்துவத்துக்கு இடமளிக்கும் அரசியல் யாப்பு இருந்திருக்குமாக இருந்தால் இனமுரண்கள் இலங்கையில் இப்படித் தலையெடுத்திருக்காது. அரசியல் அமைப்பின் தோல்வியே இன ஒடுக்கு முறையை உருவாக்கியது. அரசியலமைப்புச் சரியாக இருந்திருந்தால், பலமாக இருந்திருந்தால் இன ஒடுக்குமுறைக்குச் சந்தரப்பம் இருந்திருக்காது“ என்றேன்.

உண்மை இதுதான். பாரம்பரியமாக அதிகாரத்திலிருக்கும் தரப்பு, பிரபுத்துவ மனப்பாங்கின் வழியாகவே சிந்திக்கிறது. மற்றவர்களுக்கு இடமளித்து, அவர்களைச் சமனிலைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

இது உளவியல் ரீதியான பிரச்சினையே. இந்தப் பிரச்சினை தனியே சிங்களச் சமூகத்துக்கு மட்டும் என்றில்லை. தமிழ்ச் சமூகத்துக்குள்ளும் இருக்கிறது. முஸ்லிம்களையும் பிற சாதிப்பிரிவினரையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனப்பாங்கு.

ஆகவே இலங்கையில் அரசியலமைப்பை உருவாக்கும்பொழுது, அதை அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் சிந்திக்காமல், உலகப் போக்கு, எதிர்கால நிலவரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, இலங்கைச் சமூகங்களின் நலனை முதன்மைப்படுத்திச் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், அப்படியான நிலைவரம் தெரியவில்லை.

இப்போதைய தகவல்களின் படி அரசியல் ஆதாயங்களைப் பெறும் முனைப்பில்தான் அரசியலமைப்பு உருவாக்க வேலைகள் நடக்கின்றன என உணர முடிகிறது. இதை வெளிப்படுத்துகின்ற விதமாகவே பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், ஒற்றையாட்சிக்கு எதிராக சிந்திக்க மாட்டோம் என்றெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சொல்லி வருகிறார்கள்.

இதைப்போலவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளை உள்ளடக்காத அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்த்தரப்பினர் வாக்குறுதி அளித்து வருகின்றனர். உண்மையில் என்ன நடக்கப்போகிறது? இரண்டு விதமாகவும் அமைய முடியாதல்லவா! அப்படியென்றால் ஏனிந்தப் பொய்கள்? தவிர, ஏனைய சமூகங்களைப் புறக்கணித்து விட்டு, மீண்டும் பழைய இறுக்கத்தோடு ஏன் இன்னொரு திருத்தம் கொண்ட யாப்பு? 

Comments