குழந்தைப்பேற்றை வியாபாரமாக்கும் மருத்துவமனைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைப்பேற்றை வியாபாரமாக்கும் மருத்துவமனைகள்

1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் அன்றைய அரசாங்கத் தலைவரான ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் முதல் தடவையாக அமுலாக்கி சகலவித வர்த்தக முயற்சிகளுக்கும் வரிச்சுமையைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பல செல்வந்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெருமளவான பணத்தை முதலீடு செய்து நாடெங்கிலும் தனியார் ஆஸ்பத்திரிகளை ஆரம்பித்தனர். குறிப்பாக கொழும்பை அண்டிய பிரதேசங்களில் புற்றீசல் போல் தனியார் ஆஸ்பத்திரிகள் பெருக தொடங்கின. இந்த ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கென்று தனியான அறைகள் அவற்றில் தொலைக்காட்சிப் பெட்டிகள்,தொலைபேசி வசதி மற்றும் குளிரூட்டி வசதி அனைத்தும் பெற்றுக்கொடுக்கப்படுவதால் ஓர் அறைக்கு 8 முதல் 10 ஆயிரம் வரை நாளொன்றுக்கு கட்டணமாக அறவிடப்படுகின்றது. இவைதவிர மருந்து சத்திரசிகிச்சை வசதிகளுக்கு என்று தனியாக நோயாளிகளிடம் பணம் அறவிடப்படுகின்றது. அதுவும் சத்திரசிகிச்சைகளுக்கு 5 முதல் 6 இலட்சம் வரை செலவிட வேண்டியிருக்கின்றது.

அரசாங்க ஆஸ்பத்திரிகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறந்த சிகிச்சையும் பாதுகாப்பும் இருப்பதனால் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் தங்கி நோயைக் குணமாக்குவதற்கு பதிலாக பெருமளவான பணத்தை செலவழித்து தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைகளை பெறுவதற்காக செல்கின்றனர். கைவசம் வைத்திருக்கும் பணத்தையும் செலவிட்ட பின்னரும் மேலதிகமாக கடன்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான கட்டணத்தை செலுத்துகின்றார்கள்.

அதுமட்டுமின்றி இன்றையகால பெண்கள் தமது குழந்தையை தனியார் ஆஸ்பத்திரிகளில் பிரசவிப்பதே இலகுவான வழி என்று எண்ணுகின்றார்கள். குழந்தை கருவில் உருவான நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை தனியார் ஆஸ்பத்திரிகளிலிருக்கும் மகப்பேற்று வைத்தியர்களிடம் சிகிச்சைகளுக்காக செல்கின்றார்கள். இங்கு குழந்தை பிரசவத்துக்கென்று தனியான கட்டணத்துடன் பக்கெஜ் முறையொன்று நடைமுறையிலுள்ளது. அதற்கேற்ப சிலர் நல்ல நாள் ராசி, நட்சத்திரம் பார்த்து தனியார் ஆஸ்பத்திரிகளில் சிசிரியேன் மூலமாக குழந்தை பெறுகின்றார்கள்.

அரசாங்க தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் பெண்களை பொறுத்தவரை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வழங்கப்படுகின்ற கர்ப்பகால கொடுப்பனவு, காப்புறுதி வசதிகளும் கைவசம் இருப்பதால் தனியார் ஆஸ்பத்திரிகளில் குழந்தை பிரசவிக்க செல்லும் போது பணம் ஒரு பிரச்சினையாகவிருப்பதில்லை. இதனால் மகப்பேற்று வைத்தியர்களும் அதற்கேற்ப குழந்தை பிரசவத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்கின்றனர்.

ஆனால் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க பல தனியார் ஆஸ்பத்திரிகள் மக்களுடைய உயிருடன் விளையாடி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாகவிருக்கின்றன. இதன்விளைவாக பலர் பரிதாபகரமாக உயிரிழப்பதுடன் சிலர் தமது அங்கங்களையும் உறுப்புகளையும் இழந்து பரிதவிக்கின்றார்கள்.

அந்தவகையில் தனியார் வைத்தியசாலையொன்றில் வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மகப்பேற்று விசேட நிபுணத்துவ வைத்தியர் ஒருவருக்கு எதிராக இரண்டு பிள்ளைகளின் தாய் 10 கோடி ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்த சம்பவமொன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றது. எம்.சீ.ரீ.டி பெரேரா என்ற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சட்டத்தரணியின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி மகப்பேற்றுக்காக கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதனைதொடர்ந்து சில மாதங்களாக கடுமையான வயிற்றுவலி உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சையின் பின்னர் குறித்த தாய் வயிற்றுவலி குறித்து வைத்தியரிடம் கூறிய போதிலும் உரிய பரிசோதனை எதனையும் செய்யாது வலி நிவாரணிகளை மட்டும் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

சில மாதங்களாக வயிற்றுவலி மற்றும் ஏனைய உடல் உபாதைகளினால் அவதியுற்ற குறித்த பெண் வேறு ஓர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட போது அறுவை சிகிச்சையின் போது ஒரு தொகுதி பஞ்சு வயிற்றுக்குள் வைத்து வயிற்றை தைத்துள்ளமை கண்டறியப்பட்டது. அதன்பின்னர் சிகிச்சையின் போது குடலின் ஒரு பகுதியையும் வெட்டி அகற்றவும் நேரிட்டுள்ளது. இதனால் சில மாதங்களாக குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக பெருமளவு பணத்தை செலவிட நேரிட்டதாகவும் உடல், உளரீதியாக பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் குறித்த பெண் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக தமக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

எனவே, இதைபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலங்களிலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில சம்பவங்கள் வெளிவந்த நிலையில் பல சம்பவங்கள் உள்ளுக்குள்ளேயே மூடிமறைக்்கப்படுகின்றன. தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளில் சில வைத்தியர்களின் அலட்சியத்தினாலும், கவனகுறைவினாலும் மாற்றுத்திறனாளிகள் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி அண்மைகாலமாக அதிகமாக பேசப்பட்ட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறுநீரக கடத்தலில் பல தனியார் வைத்தியசாலைகளும் தொடர்புப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிசேரியன், அறுவைசிகிச்சைகளின் போது மிகவும் சூட்சுமமாக சிறுநீரகங்கள் அகற்றப்படும்சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே எதற்கெடுத்தாலும் தனியார் வைத்தியசாலைகளை மட்டும் நம்பி செல்லுபவர்கள் இதுதொடர்பில் விழிப்புடன் இருக்கவேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக குரல்கொடுக்கும் அரசாங்க வைத்தியர்கள் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு எதிராகவோ தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் அறவிடுவது தொடர்பிலோ ஏன் கோஷங்களை எழுப்புவதில்லை. காரணம் அரசாங்க ஆஸ்பத்திரிகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகம் பணம் சம்பாதிக்க அவர்களால் முடிக்கின்றது. 

Comments