இதற்கு தானா ஆசைப்பட்டாய் சசிகலா? | தினகரன் வாரமஞ்சரி

இதற்கு தானா ஆசைப்பட்டாய் சசிகலா?

பெரும் போராட்ட மனநிலையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பமான தமிழக சட்டசபைக் கூட்டம் அமளித்துமளிகளுடன் நடந்தது. இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை, பிரிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் 122க்கு 11 என்ற வகையில் பெரும்பான்மைப் பலத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்து அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு தானே முதல்வர் என்பதை பிரகடனப்படுத்தியுள்ளார்.

அம்மா பூஜை செய்து கொண்டிருந்தவர்கள் திடீரென சின்னம்மா பூஜை செய்ய ஆரம்பித்த மர்மம் என்ன? மக்கள் விருப்பத்துக்கு மாறாக லஞ்சம் லாவண்யங்களை மட்டுமே நம்பி ஒரு ஆட்சியை நடத்த முடியுமா? ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியை ஊழல் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுவதா? சிறை பிடிக்கப்பட்டு, ஹோட்டலில் வெளியுலக மற்றும் தொகுதி மக்கள் தொடர்பின்றி வைக்கப்பட்ட அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக சிந்தித்தும் கையூட்டு பெறாமலும்தான் சசிகலாவின் எடப்பாடிக்கு வாக்களித்தார்களா?

இப்படி ஏராளமாக கேள்விகள் தமிழகமெங்கும் கேட்கப்படுகின்றது. தமிழக சட்டசபை மாண்பு கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பலரும் வேதனைப் படுகிறார்கள். ஆளுநர் ஆட்சி அமுலாகி இன்னொரு தேர்தல் வந்தால்தான் சரிப்படும் என்று எண்ணும் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இச் சந்தர்ப்பத்தில் முன்னர் நடந்த ஆட்சிக் கலைப்புகள் பற்றிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா? என்று அறுபதுகளில் அண்ணா கேட்டார். ஆனால் இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் அரசியல் குழப்பங்கள் வரும்போது அக் குழப்பங்களில் சிக்காத, ஜனாதிபதியின் பிரதிநிதியின் தேவை அவசியப்படுகிறது என்பதை இந்திய நிலப்பரப்பில் அவ்வப்போது ஏற்படும் அரசியல் குழப்பங்கள் நிரூபித்துள்ளன.

ஆனால் கவர்னர் தேவையில்லை என்று சொல்வோர், அவரது அதிகாரங்களை மாநில பிரதம நீதியரசருக்கு வழங்கலாம். அரசியல் குழப்பங்கள் எப்போதாவதே நிகழும், சுதந்திர தினத்துக்கு கொடியேற்றுவது வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்பதால் இவற்றைச் செய்வதற்காக மாநில ஆளுநர் ஒருவர் பெரும் செலவில் வைக்கப்பட வேண்டுமோ என்று கேட்கிறார்கள்.

மாநில உயர் நீதியரசரிடம் இப் பொறுப்பை வழங்கினால் மத்திய அரசின் அரசியல் தலையீடின்றி அவரால் ஆளுநராக கடமையாற்றக் கூடியதாக இருக்கும் என்பது தி.மு.க தரப்புவாதமாக இருந்தது. எதிர்த்தரப்போ, உயர் நீதிமன்ற நீதியரசர் அரசியல் பார்வையற்றவராகவும், கட்சி சார்பற்றவராகவும், சட்டத்தின்படி மட்டுமே நடப்பவராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட, சுயாதீனமான ஒரு நீதிமன்ற அமைப்பின் மாநிலத் தலைவராகவுள்ள ஒருவரிடம் அரசியல் கலந்த ஆளுநர் பொறுப்பை வழங்கினால் அவர் அரசியல் சேற்றில் வீழ்ந்து தன் சுயாதீனத்தை இழந்து விடக் கூடும். எனவே மாநில அரசியலில், கட்சி அரசியலில் அதிகார பூர்வமாக இயங்க உயர் நீதியரசருக்கு அதிகாரம் அளிக்கப்படக்கூடாது. மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் என்ற இப்போதைய நடைமுறை நீடிப்பதே உசிதம் என்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் மாகாண ஆளுநர்கள் உள்ளனர். அவர்களின் பணி மற்றும் அதிகாரங்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. இப்போதும் அவர்களின் செயற்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன.

ஆளுநர் என்பவர் அரசின் பொம்மையாக செயல்படுகிறார். என்றும் மாநில முதல்வரின் கடமைகளை அவர் செய்வதோடு, மாகாண சபை முடிவுகளில் தலையீடு செய்கிறார் என்னும் பல குற்றச் சாட்டுகள் இங்கும் உள்ளன. ஆளுநர் என்றாலேயே, இலங்கையிலும்இந்தியாவிலும் பார்வை ஒன்றாகத்தான் இருக்கிறது!

ஒரு மாநிலத்தில் அரசியல் குழப்ப நிலை, ஸ்திரமற்ற ஆட்சி, சட்ட ஒழுங்கு சீரழிவு போன்ற ஒரு நெருக்கடியான நிலை தோன்றும் போது அங்கே சட்ட ஆட்சியைக் கலைத்து மாநிலத் தேர்தலுக்கு, மக்களின் விருப்பத்துக்கு வழிசெய்வதே ஒரு ஆளுநரின் பொறுப்பாக இருக்கும், ஆனால், ஒரு மாநில அரசியலில் குழப்பநிலை ஏற்படும் போது அங்கே மத்திய அரசு கட்சி ரீதியாகச் செயற்பட்டு தனது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கே முதலிடம் தருகிறது என்பது என்றைக்குமே எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டாக இருந்து வந்திருக்கிறது.

1976ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க ஆட்சி கலைஞர் கருணாநிதித் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த ஆட்சி ஊழல் மிகுந்தது என்றும் மதுவிலக்கை படிப்படியாக கருணாநிதி தளர்த்தி வருவதாகவும் குற்றச் சாட்டுகள் எழும்பின. இக் குற்றச் சாட்டுகளை முன்னிலைப்படுத்தி கலைஞரை எதிர்க்கும் குழுவுக்கு தலைமை வகித்தவர், அப்போதுதான் கலைஞரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர் ‘எம்.ஜி.ஆர். அவரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரமும் ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஊழல் பட்டியலையும், தி.மு.க அரசு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆளுநரைச் சந்தித்து நேரிலேயே கையளித்தனர்.

அப்போது மத்தியில் இருந்தவர் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி, பலம் வாய்ந்த கட்சியாகவும், அசைக்க முடியாத ஆட்சியாகவும் விளங்கிய தி.மு.கவை அசைத்தே ஆக வேண்டும் என்பதிலும், இப்படியே நீடிக்கவிட்டால் தனிநாடு கோரிக்கையையும் தி.மு.க எழுப்பலாம் என்ற கருத்திலும் உடன்பாடு கொண்டவராக இந்திராகாந்தி இருந்தார்.

பிரபாகரனிடமிருந்து கருணாவை பிரித்ததில் ஐ.தே.க.வுக்கு எவ்வளவு பங்கு உண்டோ, இ.தொ.காவில் இருந்து எம்.எஸ். செல்லசாமியை பிரித்ததில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு எவ்வளவு பங்கு உண்டோ, அதேமாதிரி கலைஞரிடமிருந்து எம்.ஜி.ஆரைப் பிரித்து தனிக்கட்சியை ஆரம்பித்து வைப்பதில் திரைமறைவில் இந்திராகாந்தி செயற்பட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. பெரும்பாலும் அது சரியானதாகவே இருக்கலாம். ஏனெனில் எம்.ஜி.ஆரின் மனுவை அன்றைய ஜனாதிபதி சாதகமாகவே எடுத்துக்கொண்டு தி.மு.க ஊழலை விசாரிக்க சர்க்காரியா கமிஷனை நியமித்தார். விசாரணையும் நடைபெற்றது. கோதுமை பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல் எல்லாம் விசாரிக்கப்பட்டன. இந்த விசாரணைக் கமிஷனில் தி.மு.க சார்பாக வாதாடும் சட்டத் தரணிகளுக்கு ஆலோசனை வழங்குபவராக மறைந்த நமது சட்ட மேதை ஜி.ஜி. பொன்னம்பலம் விளங்கினார். அவர் முதல் முறையாக இவ்விடயமாக சென்னை சென்றபோது தி.மு.க அவருக்கு சென்னை நீதிமன்றத்தில் ஆரவாரமான வரவேற்பு அளித்தது.

விசாரணை முடிவில் சர்க்காரியா கமிஷன் கலைஞர் கருணாநிதியை குற்றவாளியாகக் கண்டது. மேல் நடவடிக்கைக்காக மத்திய அரசியிடம் விசாரணை அறிக்கையை அளித்தது. இந்திரா காந்தி கலைஞர்மீது வழக்கு தொடர ஏற்பாடு செய்திருக்கலாம்.

ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம். மிக உறுதியான தி.மு.க.வை பிளந்து பலவீனப்படுத்த வேண்டும் என்பதும் மக்கள் செல்வாக்கு மிக்க எம்.ஜி. ஆரைப் பயன்படுத்தி அதைச் செய்ய வேண்டும் என்பதும் தான். கலைஞர் கருணாநிதிக்கு அது இக்கட்டான ஒரு காலப்பகுதி, கழகத்தை விட்டு நீங்கியதும் எம்.ஜி.ஆர் செல்வாக்கு இழப்பார் என்ற அவரது எதிர்பார்ப்பு நனவாகவும் இல்லை: மாறாக அ.தி.மு.க மாற்றுக் கட்சியாக வளரவும் தொடங்கியது. எனினும் கருணாநிதியை அடக்கிவைக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது தனக்கு சாதகமான ஆயுதமாக அவரைப் பயன்படுத்திக்கொள்ளவுமே சர்க்காரியா கமிஷன் அறிக்கையை இந்திரா காந்தி பயன்படுத்திக் கொண்டார். இந்திரா காந்தி சென்னை வந்தபோது அவருக்கு கருப்புக் கொடிகாட்டிய அதே கலைஞர் கருணாநிதியே பின்னர் ‘அன்னை இந்திராகாந்தி’ என்று விளிக்கவும் செய்தார்.

இந்திராகாந்தி ரேபரெலி தொகுதியில் தெரிவுசெய்யப்பட்டது செல்லுபடியாகாது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் கைது செய்து உள்ளே தள்ளினார். இதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் மிசா. இந்த மிசா சட்டத்தின் கீழ் பல தி.மு.க தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டனர். ஸ்டாலின் அப்போது இளைஞர், அவரையும் கைது செய்ததோடு கடுமையாகவும் அவர் தாக்கப்பட்டார்.

இவை எல்லாம் எழுபதுகளில் நடந்த வரலாற்று சம்பவங்கள். 1976இல் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு அளிப்பதற்காக கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. 1977ஆம் ஆண்டு, நெருக்கடி நிலை நீக்கப்பட்டு இந்தியாவில் பொதுத்தேல்தல் நடத்தப்பட்டபோது தி.மு.க யாரோடு இணைந்து போட்டியிட்டது தெரியுமா, காங்கிரசோடு! எம்.ஜி.ஆர், அன்று காந்திஜியின் நேரடி சீடர்களில் ஒருவரான ஜெய பிரகாஜ் நாராயணின் தலைமையிலான கூட்டுக்கட்சி அமைப்பான ஜனதா கட்சியோடு இணைந்து தேர்தலை சந்தித்தார்.

இதுதான் அரசியல்! அதாவது கட்சி இலாபங்களுக்காகவும் அன்றைய அரசியல் வாய்ப்புகள் கருதியும் யாரும் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம். பகவத்கீதை சொல்லும் அரசியலும், சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலும், மத்திய காலத்தில் மாக்கியவிலி ஐரோப்பாவில் எழுதிய ‘த பிரின்ஸ்’ என்ற அரசியல் நூலும் இதைத்தான் சொல்கின்றன. சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி முடிவு எடு! வெற்றி பெறு! வெற்றி பெறுவதுமட்டுமே உன்வேலை! என்பதே அரசியல் நூல்கள் சொல்லும் அடிநாதமான விஷயம்.

தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கோ மாகாண/ மாநில மன்றங்களுக்கோ அனுப்பி வைப்பதோடு மக்கள் பணி நிறைவேறி விடுகிறது. அதன் பின்னர் அடுத்த பொதுத் தேர்தல் வரும்வரை அப் பிரதிநிதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனவே இந் நிலைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என ஜெயபிரகாஷ் நாராயணன் விரும்பினார்.

தமது பிரதிநிதி நியாயமாக செயல்படவில்லை அல்லது ஊழலில் திளைக்கிறார் என மக்கள் கருதினால் தம்மால் தெரிவு செய்யப்பட்ட அப்பிரதிநிதியை திருப்பி அழைப்பதற்கான ஒரு சட்டத்தை உருவாக்க அவர் விரும்பினார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் சிறுநீரக பிரச்சினை காரணமாக, ஜனதா ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே மரணமடைந்ததால், அரசியல்வாதிகளில் மிகப் பெரும்பாலானோருக்கு விருப்பமில்லாத இந்த யோசனை கிடப்பில் போடப்பட்டு விட்டது.

1976ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரைப் பதவியில் இருத்தவும் தனக்கு அடங்காத கலைஞரைத் தண்டிக்கவும் ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. 1991ஆம் ஆண்டு, அதாவது ஜெயலலிதாவை பதவியில் அமர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கவர்நர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

1980ஆம் ஆண்டு கலைஞரை ஆட்சிக்கு கொண்டு வந்தால் அது தமிழகக் காங்கிரஸ் தலையெடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் எனக் கணக்கு போட்ட இந்திரா காந்தி அம்மையார், ஜனதா கட்சி ஆதரவாளராக செயற்பட்ட (தான் உருவாக்கிய) எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஜனாதிபதியூடாகக் கலைத்தார் இந்திரா காந்தி.

பின்னர் 1988ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். மரணத்தின் பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட ஜானகி கோஷ்டி – ஜெயலலிதா கோஷ்டி இழுபறியின் ஒரு தீர்வாக ஜானகி முதல்வராக்கப்பட்டார். 18 நாள் முதல்வர் பதவியின் பின்னர் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அடுத்துவந்த தேர்தலில் கலைஞர் ஆட்சியமைத்தார்.

1976முதல் 1988 வரை நான்குமுறை ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறது. பின்னர், மாநில ஆட்சியை மத்திய அரசு நினைத்தபோதெல்லாம் கலைக்க கூடாது என்பதால், அந்த ஷரத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இப்போது சட்ட ஒழுங்கு, தீவிரவாதம், தேசிய ஒருமைப்பாடு போன்ற காரணங்களின் அடிப்படையிலேயே ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட முடியும். அப்படி கலைத்தது தவறு எனக் கருதினால் பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றம் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

சசிகலா சிறை செல்வார் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான், பெங்களுருவில் மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதி “ஏதேதோ” காரணங்களுக்காக தீர்ப்பைத் திரித்தார் என்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது அல்ல என்றும் அப்போதே பரவலாகப் பேசப்பட்ட ஒன்றுதான். இன் காரணமாகவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக வழக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.

சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை, பத்து கோடி அபராதம் என்ற அறிவிப்பு வந்தபோது பலரும், ‘தனக்கான தண்டனை உச்ச நீதிமன்றத்தில் மீளவும் உறுதி செய்யப்படுவதைப் பார்த்து நெஞ்சம் பதறி உடல் நிலை பாதிப்பு அடைந்து துன்பப்படுவதைத் தவிர்க்கும் முகமாக அம்மா இறந்து போனது நல்லதற்குத்தான்’ என்றே நினைத்தார்கள். சசிகலாவின் முதல்வராகும் கனவு நனவாவதற்கு கைக்கெட்டும் தூரம் இருக்கையில் அது கானல் நீரானதை என்ன வென்று சொல்வது?

இதற்குத்தான ஆசைப்பட்டாய் சசிகலா?

ஆனால் அவரது ஆசை நிறைவேறாவிட்டாலும் அ.தி.மு.க தொடர்ந்தும் தனது குடும்பக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை தற்போது தற்காலிகமாக நிறைவேறியுள்ளது. கட்சி தன் குடும்பக் கட்டுப்பாட்டிலேயே நீடிக்க வேண்டும் என்பதற்காக டி.வி தினகரனை அவர் துணை பொதுச் செயலாளராக்கிச் சென்றுள்ளார்.

தன் குடும்பத்தில் உள்ள ஒருவரை முதல்வராக்கினால் தொண்டர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதால்தான் தனக்கு அடிவருடியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா.

மொத்த மன்னாக்குடி குடும்பத்துக்கும், கழகத்தின் ஊழல் பெருச்சாளிகளுக்கும் வேண்டுமானால் சசிகலா பெருந்தலைவியாக இருக்கலாம். ஜெயலலிதா மீது மக்களும் தொண்டர்களும் கொண்டிருந்த விசுவாசம் மற்றும் அன்பின் காரணமாகத் தான் சசிகலாவை சகித்துக் கொண்டார்களே தவிர தமிழக மக்கள் சசிகலாவை கொள்ளைக்காரி என்றும் அம்மாவுக்கு துர்வினையாக வந்தவர் என்றுமே பார்க்கிறார்கள்.

இப்போது தமிழக வாக்காளர்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களிடம் மிக முக்கியமான பொறுப்புகள் உள்ளன, நிறைவேற்றப்படுவதற்கு,

அ.தி.மு.க ஊழல் மலிந்த, பெயர் கெட்டுப்போன ஒரு கட்சியாகவும், நிர்வாகமாகவும் மாறிப்போயுள்ளது. எம்.ஜி.ஆரின் கட்சியை மன்னார்க்குடியினரிடம் விட்டுவிடக் கூடாது.

அதை புதுப்பித்து, ஊழலற்ற கட்சியாக மாற்றி அமைக்கக் கூடிய வல்லமை வாக்காளர்களிடம் மட்டுமே உள்ளது. ஜெயபிரகாஷ் நாராயணன் கொண்டுவர நினைத்திருந்த பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் சட்டம் இன்று அமுலில் இருந்தால் ஊழல் பெருச்சாளிகள் இவ்வளவு வெளிப்படையாக ஆட்டம் போட மாட்டார்கள்.

அச் சட்டம் இல்லாததால் தான், தொகுதிக்கே வராத எம்.எல்.ஏ மாருக்கு எதிராக வாக்காளர்கள் நீதிமன்றங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் ‘எங்கள் சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை. கண்டு பிடித்து தாருங்கள்’ என்று வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் ஒரு புது அரசியல் நாகரித்தை உருவாக்கித் தந்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில், இளைஞர்கள் மாற்றத்தை விரும்பும் சூழலில் மன்னார்க்குடி குடும்பங்கள் தமது பழைய ஊழல் அரசியலை கைவிட்டு ஒதுங்கிக் கொள்வது ஒன்றே சரியானதாக இருக்கும். மக்களுக்கு எதிராக எப்படி ஒரு வெகுஜன கட்சியால் செயல்படமுடியும்?

போகிற போக்கைப் பார்த்தால் ஐந்தாவது தடவையாகவும் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் விரைவிலேயே பிரகடனப்படுத்தப்பட்டு விடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

Comments